புதுடில்லி, மே 21 பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு வரும் கடுமையான நட்டத்தை ஈடுகட்ட, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் தினசரி அடிப்படையில் மாற்றியமைக்க அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகளாவிய சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, தற்போதைய நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ. 18 வரையிலும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ. 35 வரையிலும் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2022 ஏப்ரல் முதல் 2026 மே மாதம் வரையிலான கடந்த 4 ஆண்டுகளில், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை பலமுறை உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 முதல் 110 டாலர் வரை எகிறியது.
இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் நிலையாகப் பராமரிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் வரிக்குறைப்பு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தினசரி ரூ. 1,000 கோடி முதல் ரூ. 1,600 கோடி வரையிலான பெரும் நட்டத்தைத் தாங்களாகவே ஏற்றுக்கொண்டதே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த மே 15, 2026 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து நஷ்டத்தைச் சுமக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தினசரி விலை நிர்ணய முறைக்கு மாற எண்ணெய் நிறுவனங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்த முடிவு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சர்வதேச சந்தை நிலவரப்படி தினமும் காலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
