தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலேயும் நீட் கேள்வித் தாள் ‘அவுட்’ ஆகவில்லையே!
நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே இருப்போம்!
சென்னை, மே 20 நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே இருப்போம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள்.
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே கடந்த 16.5.2026 அன்று காலை 10 மணி யளவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி, மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கண்டன உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இன்றைக்கு நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,
எங்களுடைய கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தோழர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே வணக்கம்!
தமிழ்நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன
பல்வேறு கருத்துகள் இங்கே எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நீட் தேர்வு என்பது திட்டமிட்ட சதியாகத்தான் நான் பார்க்கிறேன். குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு. ஏனென்றால், தமிழ்நாட்டில்தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து, எங்கள் தலைவர் கலைஞர் அவர்களுடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
இந்த மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாட்டு மாணவர்களுக்காக, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட கல்லூரிகள். ஆனால், அந்தக் கல்லூரிகளில், தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காக, நீட் போன்ற தேர்வுகள் இங்கே வந்தன.
ஏற்கெனவே, ஒரு விதிப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொத்த மருத்துவப் படிப்பு இடங்களில், 15 சதவிகிதத்தை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கீட வேண்டும். அதையும் தாண்டி, மீதமுள்ள இடங்களையும் எடுத்துக்கொள்வதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.
மாணவர்களுடைய மனவோட்டத்தைச் சொல்கி றேன்; ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள், ஒரே கால கட்டத்தில் படித்து வருகின்ற மாணவர்கள், அவர்களில் ஒரு மாணவனோ, மாணவியோ முதலிடம் பெற்று, தொடர்ந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து முதலிடம் பெற்று, பிளஸ் டூ தேர்விலும் முதலிடம் பெற்று வரும்போது, அதே வகுப்பைச் சார்ந்த இன்னொரு மாணவன், தொடர்ச்சியாக எல்லா வகுப்புகளிலும் 60 அல்லது 70 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று வரும்போது, அந்த மாணவன், வசதி படைத்தவராக இருக்கும்போது, அவர் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றால், 12 ஆண்டுகாலமும் முதலிடத்தைப் பெற்ற அந்த மாணவன் அல்லது மாணவியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தற்கொலைக்கெல்லாம்
தூண்டுதலாக இருந்திருக்கிறது!
தூண்டுதலாக இருந்திருக்கிறது!
தொடர்ந்து படிக்கிறோம், ஆண்டுக்கு ஆண்டு முதலி டம் பெறுகிறோம். ஆனால், இன்னொரு மாணவன், 60, 70 சதவிகித மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன், பயிற்சி வகுப்பில் பெற்று, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறான் என்றால், 12 ஆண்டுகாலம் முதலிடம் பெற்ற மாணவன் அல்லது மாணவியின் எண்ணம் எப்படி இருக்கும்? அதுதான், தற்கொலைக்கெல்லாம் தூண்டுதலாக இருந்திருக்கிறது.
ஒரு தேர்வில் தோற்றுப் போனால், யாரும் தற்கொலை செய்துகொள்ளமாட்டார்கள். ஆனால், நம்மைவிட, மிகக் குறைவாக மதிப்பெண்களைப் பெற்று வந்த மாணவன், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான்; நான் அதில் தேர்ச்சி அடையவில்லையே என்கிற மனக்கு முறலை அதிகரித்து, தற்கொலைக்குத் தூண்டும். இதுதான் நிலை.
தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலேயும் கேள்வித் தாள் அவுட் ஆகவில்லையே!
எல்லா வகையிலும் இளம் வயது மாணவர்களாகிய அவர்கள் படிக்கிறார்கள்; படிக்கிற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளிக்கூடத்திலே பிளஸ் டூ படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியிலே தேர்வு என்று சொன்னால், அந்தப் பிரச்சினை வராது. அப்படியில்லாமல், இன்னொரு தேர்வு எழுது என்று சொன்னால், அந்த ஒற்றைத் தேர்வுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுகிற மாணவர்கள், அதிலே வெற்றி பெற்று விடுவார்கள். இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள். பல இடங்களிலே, ஒன்பது முறை நீட் தேர்வு கேள்வித்தாள்கள் அவுட் ஆகியிருக்கிறது என்று சொன்னார்கள்.. அப்பொழுதுதான் நான் யோசித்தேன், கேள்வித்தாள் அவுட்டான சங்கதி தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலேயும் வரவில்லையே, எல்லாம் வட மாநிலங்களிலேயே நடக்குதே, இது ஏன் என்று.
பச்சை அயோக்கியத்தனமாகும்!
ஏன் வட மாநிலங்களில் மட்டும் கேள்வித்தாள்கள் லீக் ஆகுகிறது? ராஜஸ்தானிலோ மற்ற மாநிலங்களிலேயோ. தமிழ்நாட்டில் லீக் ஆகுவதில்லை. காரணம், அந்த மாணவர்களைப் படிக்க வைக்க அவர்களுக்கு இதுதான் வழி. தமிழ்நாடு அரசு, இங்கே ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டி வைத்திருக்கிறது; அதற்காக ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறது மாநில அரசு. அங்கே வகுப்புகளை நடத்துவதற்கு ஊதியமும், அந்த கட்டடத்தைக் கட்டியதும் மாநில அரசு. இவற்றையெல்லாம் செய்துவிட்டு, அந்தக் கல்லூரியில் படிக்கின்ற மாணவன், தமிழ்நாட்டு மாணவனாக இருக்கவேண்டுமா, இல்லையா என்று பார்த்தால், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வருகின்ற மாணவன், அந்தக் கல்லூரியில் படிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு உதவி செய்கிறது. அந்த உதவிதான், நீட் தேர்வு. இது பச்சை அயோக்கியத்தனமாகும்.
கல்லூரிகளிலே மாநில அரசு நடத்துகிற எல்லா கல்லூரிகளிலும், அது பொறியியலாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் சரி, அந்தந்த மாநில அரசு, அந்தத் தேர்வு முறையை முடிவு செய்து, மாணவர்களைத் தேர்வு செய்கிறது. மருத்துவக் கல்வியில் மட்டும் நீட் தேர்வு வந்திருக்கிறது என்றால், இது என்ன சதி என்று தெரியவில்லை. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இதான் வேலை.
தமிழ்நாட்டில் மனுதர்மத்திற்கு
வேலை இல்லை!
வேலை இல்லை!
தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்று ஒன்றிய அரசினுடைய புள்ளி விவரங்களே சொல்லும். அடுத்த நாளே, அந்த முன்னேற்றத்திற்குக் கெடுதல் செய்வது போன்று எதையாவது ஒன்றைச் செய்வார்கள். காரணம், அவர்களுக்குத் தமிழ்நாடு முன்னேறுவது பிடிக்காது; ஏனென்றால், இது சமத்துவ பூமி – எல்லோரும் சமம் என்கிற இடம். மனுதர்மத்திற்கு இங்கே வேலை இல்லை.
வட மாநிலங்களில் அப்படி இல்லை. கீழ் ஜாதிக்காரன், மேல்ஜாதிக்காரனைப் பார்த்தால், கை கட்டிதான் நிற்கிறான் இன்னும். ஆனால், தமிழ்நாட்டில் தோளில் கை போட்டுப் போகிறான். ‘‘எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள், இந்தப் பாவிகள்!’’ அதனால், தமிழ்நாட்டில் இருக்கின்றவனை வாழவிடக்கூடாது, வளர விடக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.
ஒன்றிய அரசு, கல்வியிலே தலையிடக்கூடாது. மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு இருந்த கல்வி முறை, இப்போது காமன் லிஸ்ட்டில் – கன்கரண்ட் லிஸ்ட்டில் வந்துவிட்டது. இருந்தாலும், அவர்கள் கல்வி நிலையங்கள் நடத்தலாம், பாடத் திட்டங்களை வைக்கலாமே தவிர, தேர்வு முறைகளை அவர்கள் நடத்துவதற்கு உரிமையில்லை.
மாநில அரசு நடத்துகிற பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ தேர்வை முடிவு செய்வது, மாணவர்கள் தேர்ச்சியை முடிவு செய்வது மாநில அரசின் உரிமை. இப்பொழுது இதிலே அவர்கள் தலையிடுகிறார்கள் என்றால், திட்டமிட்டு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அடிப்படை வசதிகளை நாம், நம்முடைய மாநில மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் காரணம் மட்டுமல்லாமல், அதனால் வருகிற விளைவுகளைப் பாருங்கள்.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடனே, நீட் தேர்வை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்!
நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா, 12 ஆண்டுகளும் என்னோடு படித்த ஒரு மாணவன், அவன் 70 மதிப்பெண், 60 மதிப்பெண் பெறுகிறான். நான் 95, 98 மதிப்பெண் பெறுகிறேன். நீட் தேர்விலே அவனுக்கு இடம் கிடைக்கிறது. எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், நான் தற்கொலை தான் செய்து கொள்வேன். இது எவ்வளவு பெரிய கொடுமை? இந்தக் கொடுமையைக் கண்டித்து, இன்றைக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையிலே முன்னெடுக்கப்பட்டிருக்கிற இந்தப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்ற கழகம் ஏற்கெனவே சட்டமன்றத்திலேயே நீட் தேர்விற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. எங்களுடைய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைகளில் இதைப் பற்றி நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். நானே, நாடாளுமன்றத்திலே நீட் கூடாது என்று பேசி இருக்கிறேன். அதையெல்லாம் காதிலே வாங்கிக்கொண்டு, காங்கிரஸ் அரசு கொஞ்சம் அச்சப்பட்டு இருந்தது. மோடி வந்த உடனே, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
மோடியை, மறுபடியும் மாநில முதலமைச்சராக ஆக்கிவிட்டீர்கள் என்றால், அவர் மாநில உரிமை களுக்காக நிறைய போராடுவார். அவர் பிரதமராக இருப்பதினால்தான், அவர் மாநில உரிமைகளை எல்லாம் பறித்துக்கொண்டு வருகிறார்.
நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை…
ஜிஎஸ்டி வந்தபோது கூட மாநில உரிமைகளுக்காக அவர் போராடினார். ஜிஎஸ்டி கூடாது என்றார். அதேபோல நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினார். பல்வேறு விஷயங்களில், மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுது, மோடி வலிந்து குரல் கொடுத்தார். அவரை பிரைம் மினிஸ்டர் ஆக்கி, மாநிலங்களை எல்லாம் தவிக்க விட்டுவிட்டார்கள். மீண்டும் அவரை, மாநில முதலமைச்சராக ஆக்கினாலாவது, நமக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பாரா? என்று பார்ப்போம் என்று கூறி, நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே இருப்போம் என்ற உறுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து விடைபெறுகிறேன்.
– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் மாநி லங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.
