திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி! தமிழினத்தின் மீட்சி!

திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி
நான்கு மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள்! திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி! தமிழினத்தின் மீட்சி  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

திராவிட இயக்கம் வெறும் அரசியல் நோக்கங்களுக்காகத் தோன்றியதல்ல! அரசியல்மூலம் சமூக மாற்றத்தை அடைவதே அதன் இலக்கு. ஈராயிரம் ஆண்டு அடிமைத் தனத்தை ஒழித்துக்கட்டப் புறப்பட்ட சமூகப் புரட்சி இயக்கம். அந்த நோக்கத்தைக் கல்வி யின் வாயிலாகவும், அரசு அதிகாரத்தின் வாயிலாகவும் அடைவதற்காகத் தான் சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்தது. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை நூறாண்டு காலமாகத் தொடர்ந்து செய்துவருகிறது. மக்களுக்குப் பகுத்தறிவை ஊட்டுவதன் மூலமாக விழிப்படையச் செய்வதுதான் அதன் பரப்புரை முறை.(தி.மு.க. சட்ட திட்டத்தில் இடம்பெற்ற உண்மை).

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் இந்த நோக்கங்களுக்காகத் தோன்றியவையே! இதனாலேயே தான் ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கவும் படுகின்றன. இவ் வியக்கத் தத்துவங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பார்ப்பனர்களும், ஜாதி – மத வெறி யர்களும், பெரும் பண முதலைகளான பனி யாக்களும், ஆதிக்கவாதிகளும் கூட்டுச் சேர்ந்து சூழ்ச்சி செய்துவருகின்றனர். 1920 முதல் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி 1937 இல் ஒரு தேர்தலில் தோற்றவுடன், ‘நீதிக்கட்சியை 500 அடி ஆழத்தில் புதைத்துவிட்டோம்’ என்று அன்றைக்கு இருந்த  அரசியல் பார்ப்பன ‘வாயாடிகள்’ கொக்கரித்தனர்.

மீகாமன்  தந்தை பெரியாரே!

ஆனால், விடுதலை உணர்ச்சிக்கும், உரிமைப் போராட்டத்துக்கும் எப்போதும் தோல்வி கிடையாது. ஆட்சியை இழந்தாலும், தந்தை பெரியார் நடத்திய முதலாம் மொழிப் போரின் மூலமாக இன மீட்சிக்கான களத்தில் வென்றது நீதிக்கட்சி! ஆட்சிக் கப்பல் யாரிடமிருந்தாலும் சரி, அதை இயக்கும் சுக்கான் திராவிட இயக்கத்தின் கொள்கைகளே! யாரும் திசை மாறிப் போக முடியாவண்ணம் மக்கள் எழுச்சியின் மூலமாக அதைக் கட்டுக்குள் வைத்திருந்த – வைத்திருக்கும் மீகாமன்  தந்தை பெரியாரே!

அரசியல் மூலம் அதைச் செயல்படுத்த விரும்பியோருக்கு ஜனநாயகத்தின் போக்கில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும், சற்றும் துவளாது துடித்தெழுந்து ஓடுவதற்கான ஆற்றலையும்,  உந்துதலையும் இந்தக் கொள்கை உணர்வே தருகிறது. ‘போர்க் களத்தின் வெற்றி தோல்வி எப்படியும் இருக்கலாம் – ஆனால், சண்டை செய்ய வேண்டும்’ என்ற உணர்வே நம்மை இயக்குகிறது! அதுதான் வெற்றியைத் தொடர்ந்து நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது. தேர்தல் தோல்விகள் எல்லாம் நம்முடைய கொள்கைத் தோல்விகள் அல்ல!

பெரியாரும், திராவிட இயக்கம் தொடங்கி வைத்த பாதையிலிருந்து விலக முடியாத சூழல் இருக்கும் வரை…

நமக்கு என்றும் தோல்வியே கிடையாது! “இருமொழிக் கொள்கையும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், தமிழ்நாடு என்ற பெயரும் இருக்கும்வரை இங்கே அண்ணா தான் ஆளுகிறான் என்று பொருள்!” என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, பெரியாரும், திராவிட இயக்கம் தொடங்கி வைத்த பாதையிலிருந்து விலக முடியாத சூழல் இருக்கும் வரை இங்கு திராவிட இயக்கத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று பொருள்!

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் திராவிட இயக்கத்தின் ஆட்சிக்கும், பிற கட்சிகளின் ஆட்சிக்கும் இருக்கும் பெரிய வேறுபாட்டிற்கு இந்தக் கொள்கை உணர்வே காரணம். சாலைகள் போடுவதும், பாலங்கள் கட்டுவதும், தொழிற்சாலைகள் தொடங்குவதும் எவராலும் செய்ய முடிந்த சாதனைகள்! ஆனால், கல்விச் சாலைகளைத் திறந்ததும், தொழிற்சாலைகளுக்குக் கூலி களாக மக்களை அனுப்பாமல் மனித வளத்தைப் பெருக்கி அறிவாளிகளாக அனுப்பியதும் திராவிட இயக்கம் தான்!

சமூக மாற்றப் பணிகள் தான்!

அதிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் சமூகப் புரட்சி முத்துக்கள்! தமிழ்நாட்டின் எந்தத் திக்கிலும் அவருடைய சாதனைக் கதிர்கள் பாயாத இடமென்று எதுவும் இருக்க முடியாது. அவர் உருவாக்கிய ஆட்சிக் கட்டமைப்பினால் பலன் பெறாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால், அவற்றையெல்லாம் விஞ்சிய சாதனை அவரது சமூக மாற்றப் பணிகள் தான்!

அவர் பொறுப்பேற்று ஆட்சி நடத்தத் தொடங்கிய காலகட்டத்தில் தான், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். ‘எங்கள் ஆட்சிக் காலத்தில் அய்யா போராட வேண்டிய அவசியமில்லை’ என்று சொல்லி, அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தவர் கலைஞர். தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் நடந்து கொண்டே இருந்தது. 35 ஆண்டுகள் கழித்து 2006ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற போது, அவர் மேற்கொண்ட முயற்சிகளை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அவர் போட்ட புதிய சட்ட அடித்தளத்தில், மேலும் 15 ஆண்டுகள் போராடி 2021 இல் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிக் காட்டினார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’ ஆக உயர்ந்தவர் கலைஞர்!

1929 இல் செங்கல்பட்டு முதல் சுயமரி யாதை மாகாண மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை, 1951 இல் இந்து திருத்தச் சட்டத் தொகுப்பு மூலம் அண்ணல் அம்பேத்கர் கொண்டுவர முனைந்த உரிமையை, 1989 இல் ஆட்சிப் பொறுப்பேற்றுச் சட்டமாக்கி, ‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’ ஆக உயர்ந்தவர் கலைஞர். பின்னர் ஒன்றிய அளவில் 2005 இல் அது சட்டமாகவும் அவரே காரணமானார்.

வர்ணத்தின் அடிப்படையில், ஜாதியின் பேரால் பிளவுபட்டு, ஏற்றத் தாழ்வுகளாலும், கலவரங்களாலும் நாடே அமைதி இழந்து தவிக்கும் சூழலை மாற்றி, நாடே சமத்துவ புரமாக வேண்டுமென்னும் நோக்கில், கூடி வாழும் பழக்கம் மறந்துபோயிருந்த தமிழ்க் கிராமத்துச் சூழலில் ஜாதி வேறுபாடுகளற்ற  சமத்துவபுரங்கள் தோற்றுவித்து, அவற்றுக்குத் தந்தை பெரியார் பெயரையும் சூட்டி, அவர் சிலைகளையும் நிறுவிய சாதனை இந்தியாவுக்கே முன்மாதிரியன்றோ?

இந்தியாவில் வேறு யாரும் சாமானியத்தில் செய்துவிட முடியாத சாதனைகளைச் சடுதி யில் செய்துமுடித்தவர் அல்லவோ அவர்!

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்!

தன்னை ஒரு வரியில் விமர்சனம் செய்துகொள்ளக் கேட்ட போது ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கொள்கைக் கோமான் அவர்! ‘‘மாண்புமிகு’’ போகும், வரும்; ஆனால் ‘‘மானமிகு’’ தான் என்றைக்கும் நிலைக்கும்’ என்ற அடித்தளத்தில் அமைந்த பதில் அவரது சிறப்பான பதில்!

பாலின சமத்துவம், சமூகநீதி, பொருளாதார சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றுக்காக அவர் ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய சட்டங்கள், போட்டுத் தந்த திட்டங்கள் எத்தனை எத்தனை! அந்த அடித்தளத்தைத் தானே இன்று நாடே பின்பற்றுகிறது!

எங்கள் பெரியாரின்
எல்லைக் கோட்டுக்குள் தானே
வந்து நிற்கிறது
!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி யமைந்து, அங்கு மகளிருக்குப் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கி, மகளிர் வளர்ச்சிக்குப் போடும் கையெழுத்தில் மிளிர்வது திராவிட இயக்கமும், பெரியாரும், கலைஞரும், ஸ்டாலினும் ஊற்றிய மை தானே! இலவசங்கள் கூடாது என்று நாம் உரிமைத் தொகை வழங்கிய போது கிண்டல் செய்தவர்கள், மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்றதும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000 என்கிறார்களே! வங்கமும், எங்கள் பெரியாரின் எல்லைக் கோட்டுக்குள் தானே வந்து நிற்கிறது?

‘‘திராவிடம் வீழ்ந்துவிட்டது’’ என்று ஆரியம், அதன் அடிமைகள் புளகாங்கிதப்பட்டுத் துடிக்கிறார்களே, திராவிடத்திற்கு வீழ்ச்சி உண்டா? மராட்டியமும், கருநாடகமும், வங்கமும், கேரளமும், தெலங்கானாவும், டில்லியும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை’ எடுத்துப் பயன்படுத்தும்போது திராவிடம் வீழந்துவிட்டது என்று ‘அறிவு சூன்யங்கள்’ தவிர வேறு எவர் கூறுவர்?

‘‘திராவிடத்திற்கு’’ என்றும் எழுச்சிதான்! அதன் எல்லை தமிழ்நாடு அல்ல – இந்தியா கூட அல்ல! இந்த மானிடம்! பாரெங்கும் பரந்து விரியும் மனிதநேயக் கொள்கை சுயமரியாதையின் மறுபெயரே திராவிடம்!

103 கூட்டங்கள்  – “திராவிடர் எழுச்சி நாள் விழா”வாக நடைபெறும்!

அதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், மூத்த தலைமுறைகளுக்கு நினைவூட்டவும், தமிழ்நாடெங்கும் முத்தமி ழறிஞர் கலைஞர்  103 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, ஜூன் மாதம் 5, 6, 7 ஆகிய நாட்களில் 103 கூட்டங்கள்  – “திராவிடர் எழுச்சி நாள் விழா”வாக நடைபெறும். நமக்கு எல்லாமே கொள்கைத் திருவிழாக்கள்தான்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகா, மகாராட்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் பரப்புரைப் பெருவிழாக்கள் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில்! (பட்டியல் விரைவில் வெளிவரும்)

கருநாடகத்திலும், மகாராட்டிராவிலும் தமிழுடன் முறையே கன்னடம், மராத்தி மொழிகளிலும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கு பெறுவர்.

திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி!

திராவிடத்தின் எழுச்சி தான் தமிழினத்தின் மீட்சி!

‘கலைஞர் வாழ்க’ என்றால், சுயமரியாதை வெல்க என்பதே அதன் உண்மைப் பொருள்!

புரியாதவர்களுக்குப் புரிய வைக்க பரப்புரைகள் எங்கும்  படரட்டும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

20.5.2026   

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *