புதுடில்லி, மே 20- மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
ராட்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கணினி வழித் தேர்வு
வினாத்தாள் கசிவு போன்ற முறை கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இனிவரும் நீட் தேர்வுகளை கணினி முறையில்நடத்த வேண்டும். குறிப்பாக, ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் இளநிலை நீட் மறுதேர்வை கணினி வழியிலேயே நடத்த உத்தரவிட வேண்டும்.
புதிய தேர்வு ஆணையம்
தற்போது தேர்வுகளை நடத்தி வரும் தேசியத் தேர்வுகள் முகமையை கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மிகவும் பாதுகாப்பான கட்டமைப் புடன் கூடிய “தேசிய தேர்வுகள் ஆணையம்” என்ற புதிய அமைப்பை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மறுதேர்வுக்கான தேதிகள் நெருங்கி வரும் வேளையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த மனு மருத்துவக் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
