ரிஷிகள் வாழ்ந்த இடம்தான் ரஷ்யாவா?

2 Min Read
- Advertisement -

பரவும் செய்தி

“ரஷ்யா என்ற பெயர் ரிஷிகள் வாழ்ந்த இடம் என்பதால் தான் வந்தது” என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளரு மான கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த் பேசும் காணொளி பரவி வருகிறது.

இது உண்மையா? என ‘விடுதலை’யின் ஆய்ந்தறி வோர் குழு ஆய்வு செய்தது.

ஆய்வு

காணொளியில் ரஷ்யாவிற்கான பெயர்க் காரணமாக இரண்டு கருத்துகள் சொல்லப்படுகிறது. ஒன்று ‘ரிஷிகள் வாழ்ந்த இடம்’ என்பது. மற்றொன்று ‘ருஷ்யஸ்ரீங்கர்  வாழ்ந்த இடம்’ என்பது.

அவர், “ரிஷிகள் வாழ்ந்த இடமாதலால் ரஷ்யா எனப்பட்டது” என ‘யூடுயூப்’ தளத்தில் ‘எக்ஸ்பிரியன்சஸ் ஆஃப் மகாபெரியவா’ என்ற தலைப்பிலான காணொளித் தொடரில் அறிந்து கொண்டதாக சொல்கிறார்.

மேடையில் அமர்ந்திருப்பவரிடம், “அதற்கான காரணம் தெரியுமா?” எனக் கேட்க மேடையிலிருப்பவர்  “ருஷ்யஸ்ரீங்கர் வாழ்ந்த இடமென்பது தான் காரணம்” என சொல்கிறார்.

இந்த கருத்துகளுக்கான காரணங்களை தேடுகையில் இவற்றிக்கான  ஆரம்பமாக “காஞ்சி சங்கரமட மின்னிதழ்” பக்கம் இருப்பது தேடலில் தெரியவந்தது.

ரிபாகோவ் எனும் ரஷ்யர் சங்கரமடம் வந்த நிகழ்வை விளக்கும் அப் பக்கத்தில் சங்கராச்சாரியர் ரிபகோவிடம் சொன்னதாக இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

அதில் ரஷ்யாவிற்கு ரிஷி வர்ஷம் என்று பெயர் என்றும், அது யக்ஞவல்கியர் உட்பட்ட ரிஷிகள் அங்கு வேதத்தைப் பற்றி ஆய்வு செய்ய ஆய்வுக் கூடம் அமைத்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவை மேற்குறிப்பிட்ட பெயர்களோடு தொடர்புபடுத்தி இருக்கும் கதைகளுக்கான ஆதாரத் தேடலில் எந்த அதிகாரப்பூர்வமான தகவல்  எதுவும் கிடைக்கவில்லை.

“ரஷ்யா” என்ற பெயர் இந்தியாவிலிருந்து வந்தது என்பதற்கு நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை. வரலாற்றாசிரியர்கள் இதை “ரஸ்” (Rus’) என்ற பெயருடன் தொடர்புபடுத்துகின்றனர். 9-ஆம் நூற்றாண்டில் கீவ் பகுதியில் குடியேறிய ஸ்காண்டிநேவிய வணிகர்-வீரர்களின் பெயர் இது. இது ஃபின்னிய மொழியில் சுவீடனைக் குறிக்கும் “ருவோட்சி” (Ruotsi) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பத் தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

விளக்கம்

ரஷ்யாவிற்கான பெயர்க் காரணம் பற்றிய இவர்களின்  இந்தக் கதைகள் பற்றியெல்லாம் நாம் கவனம் கொள்ள வேண்டியதில்லை தான்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செல்லும் போது, சில விநாடிகள் செயற்கைக்கோள்கள் நின்று செல்கின்றன எனவும், இதற்கு அக் கோயில் புவி மய்யத்தில் இருப்பதுதான் காரணம் என்றும், ஒரு கதை மிக சுமாராக ஒரு மின்னிதழில் இருந்து தொடங்கி, இஸ்ரோ இதற்கு விளக்கம் கொடுக்கும் அளவிற்குச் சென்றது. இதுபற்றிய விரிவான செய்தி அடுத்த வாரம் ஞாயிறு அன்று வெளிவரும்.

ஆகவே, இதுபோன்ற கதைகளை உடனுக்குடன் கட்டுடைப்பது அவசிய மாகிறது

முடிவு

ரிஷிகள் வாழ்ந்த இடம் தான் ரஷ்யா என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.  ரிஷிகள் என்போர் வாழ்ந்த தற்கும் ஆதார மில்லை.

– ஆய்ந்தறிவோர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *