உளுந்தூர்பேட்டை, நவ.22- கல்லக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு மக்களை அச்சுறுத்தும் வகையில் மாந்திரீக மூடநம்பிக்கைச் செயல்களாக மண்டை ஓடு, எலுமிச்சைப் பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டப் பொருள்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு தெளிவடையவும், இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் சரத்து 51A(h) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான் மையை வளர்க்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பகுத்தறிவுச் சிந்தனையை விதைக்கவும், உடனடியாக அந்தப் பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புத் தொடர் பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாட்களில் நடத்துவது என்று தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, முதல் நாள் பிரச்சாரம் 21.11.2026 அன்று உளுந்தூர்பேட்டை நகர, ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. முதல் கூட்டம் மாலை 4 மணிக்குக் காவல் நிலையம் அருகிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் இரவு 7 மணிக்குப் புதிய பேருந்து நிலையம் எதிரிலும் சிறப்பாக நடை பெற்றது. கூட்டத்தில் ஒன்றிய கழகத் தலைவர் செல்வ சக்திவேல் வரவேற்புரை யாற்றினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கூட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களைப் பாராட்டியும், கூட்டத்தின் நோக்கத் தையும் விளக்கினார்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு. இளமாறன் உரையாற்றும்போது, மூடநம்பிக்கையின் விளைவால் அச்சத்தில் இருக்கும் மக்கள் விழிப்படையத்தான் பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் இப்பிரச்சாரத்தை நடத்துகிறது என்று கூறினார். விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் அரங்க. பரணிதரன் உரையாற்றினார்.
“மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி!
கூட்டங்களின் தொடக்கத்தில் “மந்திரமா? தந்திரமா?” என்ற தலைப்பில் ஆத்தூர் விடுதலை சந்திரனின் மூடநம் பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மந்திரமல்ல; எல்லாம் தந்திரமே என்பதை விளக்கும் வகையில், கடவுள் சக்தி என்றும், பேய், பிசாசு என்றும் மந்திரவாதிகள், சாமியார்கள் செய்யும் பல்வேறு செயல்களைச் செய்து காட்டி, அவற்றின் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கத்தையும் எடுத்துக் கூறி மக்களின் கவனத்தை ஈர்த்தார். நிகழ்ச்சி நடைபெற மக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்து வியந்தனர்.
மூடநம்பிக்கை
ஒழிப்புப் பிரச்சார உரை!
கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் கூட்டங்களில் சிறப்புரையாற்றினார். பில்லி, சூனியம், மாந்திரீகம் என்ற மோசடிகள் பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளாலும், ஆதாரப்பூர்வமான விளக்கங்களாலும் மக்களிடையே விழிப்புணர்வை அவரது உரை ஏற்படுத்தியது.
அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத் தும் அடிப்படைக் கடமைகளில் ஒன்று அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) வளர்ப்பதாகும். அதற்காகத்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று இக் கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றும், தமிழ்நாட்டில் எங்கு மூடநம் பிக்கை வளர்ந்தாலும் அங்கு திராவிடர் கழகம் கூட்டம் நடத்தி அதை முறியடித் திருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் காவல் நிலையத்தி லேயே குற்றங்கள் குறைய வேண்டும் என்று யாகம் செய்ததைக் கண்டித்து, மக்களைத் திருத்த வேண்டிய அரசின் காவல்துறையே மூடநம்பிக்கைச் செயல்களில் ஈடுபடலாமா? என்று கேள்வி எழுப்பி, அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யாகத்தால் குற்றங்களைத் தடுத்துவிட முடியும் என்றால் எதற்காக நாட்டில் இராணுவம்? காவல்துறை? அதற்குப் பதிலாகப் பார்ப்பனர்களைக் கொண்டு போய் நிறுத்த வேண்டியதுதானே? குற்றவாளிகளை மை போட்டுக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே? என்று பகுத்தறிவுக் கேள்விகளை எழுப்பினார்.
அறிவியலுக்குப் புறம்பாக, இந்தியா வில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு (Plastic Surgery) சான்றாகப் பிள்ளையார் கதையைக் கூறிய பிரதமர் நரேந்திர மோடியையும், ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசும் மூடநம்பிக்கையை எவ்வாறு பரப்புகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிச் சாடினார்.
உளுந்தூர்பேட்டை மக்கள் அச்சத்தி லிருந்து விடுபட வேண்டும் என்றும், பகுத்தறிவோடு எதையும் ஆராய வேண்டும் என்றும் கூறிய அவர்,
“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் அதை நம்பாதே; உன் அறிவுகொண்டு சிந்தி” என்ற தந்தை பெரியாரின் சிந்தனை யோடு உரையை முடித்தார்.
முதல் கூட்டத்தில் இளைஞரணித் தோழர் ச. அழகரசனும், இரண்டாவது கூட்டத்தில் திராவிட மாணவர் கழகத் தோழர் இரா. பிரபாகரனும் நன்றியுரையாற்றினார்கள்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பகவான்தாஸ், விருத்தா சலம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர் பெரியார் மணி, திராவிட மாணவர் கழகத் தோழர் இரா. இளமாறன், நெய்வேலி பாவேந்தர், வழக்குரைஞர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
