காமத்தை அடக்குதல் பற்றி பெரியார் கூறியதாகப் பரவுவது உண்மையா?
பரவும் செய்தி

“உன் காமத்தை அடக்க முடியவில்லை என்றால், அதை உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ தீர்த்து கொள். அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம்” என்று பெரியார் சொன்னதாகவும், அந்தக் குறிப்பு 11.05.1953 வெளிவந்த விடுதலை நாளேட்டில் இடம் பெற்றிருப்பதாகவும் அவ்வபோது சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு ஊடகங்களில் கூட சிலர் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதை பற்றி தெளிவுபடுத்த விடுதலை ஆய்ந்தறிவோர் குழு விழைகிறது.
விளக்கம்
பெரியார் கூறியதாகப் பல்வேறு கருத்துக்கள், வாசகங்கள், விடுதலை நாளேட்டின் படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதுண்டு. அவற்றில் பல கருத்துகள், உள்நோக்கத்துடனும், பொய்யான அல்லது திரிக்கப்பட்ட செய்திகளுடனும் பரப்பப்படுகின்றன. அப்படியான பொய்களுள் ஒன்றுதான் இதுவும் என்பதை நம்மால் அறிய முடிகிறது!
தந்தை பெரியார் ஏற்படுத்திய சமூக மாற்றங்களால், தாங்கள் அதுவரை அடைந்துவந்த சொகுசு வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிட்டது என நினைப்போரும், அவர்களுக்கு ஆதரவானவரக்ளும் இது போன்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டு பரப்புவதும் தொடர்கிறது. தந்தை பெரியாரைக் குறித்த அவதூறுகள் மூலமும், முகம் சுளிக்க வைக்கும் பொய்ச் செய்திகள் மூலம் பொதுச் சமூகத்திடம் பெரியாரின் கருத்துகள் போய்ச் சேருவதைத் தடுக்கும் நோக்கமே இதன் பின்னால் இருப்பது!
அதன் ஒரு பகுதியாகவே, எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் 11.05.1953 என்கிற தேதி விடுதலை நாளேடு என்று போட்டு பெரியார் சொன்னது இது என பரப்பி வருகிறார்கள்.
இந்தக் கருத்தை விடுதலை நாளேட்டில் பெரியார் எப்போதும் பதிப்பிக்கவும் இல்லை, எந்த மேடையிலும் பேசவும் இல்லை. இதைத் தெளிவுபடுத்த 11.05.1953 விடுதலை நாளேட்டின் நான்கு பக்கங்களின் ஒளிப்படமும் இதோடு இணைக்கப்பட்டுள்ளன. (இவை முன்பே இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன). அதில் இப்படி எந்தச் செய்தியும் இல்லை என்பதற்கு இந்தப் பக்கங்களே சான்று

முடிவு
பெரியார் காமத்தை அடக்குதல் குறித்து விடுதலை 11.05.1953 தேதியிட்ட நாளேட்டில் தெரிவித்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் இட்டுக் கட்டப்பட்ட பொய்யே!
– ஆய்ந்தறிவோர்
