மெய்யா? பொய்யா?

- Advertisement -

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர அமெரிக்க முதலீட்டாளர் பணமளித்தாக காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா சொன்னாரா?

பரவும் செய்தி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலீட்டாளர், சிந்தனையாளர் சாம் பிட்ரோடா, இந்தியாவில் ஆட்சி மாற்றம் உண்டாக அமெரிக்க முதலீட்டாளர்  ஜார்ஜ் சோரோஸ் 10 பில்லியன் டாலர் தொகையை அளித்ததாகச் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

‘எக்ஸ்’ தளத்தில் @globalexplainer என்ற பக்கத்தில் ”முக்கியச் செய்தி: அமெரிக்கப் பெரும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கு நிதியுதவியும் அளித்து வருகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா அண்மையில் பேசியது, தேசியவாத மோடி அரசாங்கத்தைப் பதவியி லிருந்து அகற்றுவதற்காக ஜார்ஜ் சோரோஸ் 10 பில்லியன் டாலர்களை வழங்கியது  இந்த தகவலை உறுதிப் படுத்துவதாகக் கூறப்படுகிறது.

உலகின் பிற பகுதிகளிலும் இத்தகைய ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஜார்ஜ் சோரோஸ் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ள பதிவு 1,30,000 பார்வைகளுக்கு மேல் பரவி வருகிறது.

இந்த செய்தி உண்மையா என விடுதலை ஆய்ந் தறிவோர் குழு தேடியது.

ஆய்வு

பரவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் ஆவார். இவர் அண்மையில் அய்.ஏ.என்.எஸ்.  (IANS) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

‘‘ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவி அளிப்பதை ஏற்பதும் அனுமதிப் பதும் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுத்தது. அவர் ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்காக 10 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு வருகிறார் என்றால், அதை ஒரு கோணத்தில் பரிசீலிக்கலாம். இது சாத்தியம்தான். இது சூழலையும், கொள்கையையும் பொறுத்த முடிவாக இருக்கலாம். இந்த அணுகுமுறை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குரிய உரிமையாகும்” என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு ஆதரவாளர்கள் இந்தச் செய்தியை நரேந்திர மோடி தலைமையினான பாஜக ஆட்சியை அகற்ற வெளிநாட்டு நிதியுதவிகள் இந்தியாவுக்குள் நுழைகின்றன எனவும், வெளிப்படையாக இந்த நிதியுதவிகளை ஏற்பதன் மூலம் காங்கிரசும் மாணவர்கள் போராட்டமும் இதன் மூலம் வழிநடத்தப்படுகின்றன எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜார்ஜ் சோரோஸ் அங்கேரி-அமெரிக்க மூதலீட்டாளர் ஆவார். அவர் உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் நல்ல நோக்கங்களுக்காக நிதியுதவி  அளித்து வருகிறார்.

அவர் நிதியளித்து, எந்த ஓர் உள்நாட்டு அரசும் கவிழ்க்கப்படவில்லை என ‘தி பெடரலில்’ டிசம்பர் 2024இல் கே.எஸ். தக்ஷின மூர்த்தியின் கட்டுரை மூலம் தெரியவருகிறது.

மேலும் சோரோஸ் ஏதேனும் அரசைக் கவிழ்த்தார் என உறுதியான தகவல் எதுவும் நமது தேடலில் கிடைக்கப்பெறவில்லை. அவரின் தாராளவாத (Liberalism) நோக்களுக்காக பணமளிக்கும் அணுகுமுறை காரணமாக பல நாடுகளில் உள்ள வலதுசாரிகளும், அடிப்படைவாத குழுக்களும் அவருக்கு எதிரான இந்த வகையான செய்திகளைப் பரப்புவது ஆய்வில் தெரிய வந்தது.

பரவலின் பின்னணி

புதுடில்லியில் தேர்தல் ஆணையத்தின் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள், எதிர்க் கட்சியினர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்போராட்ட நோக்கங்களைச் சிதைக்கும் வகையில் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.

நவம்பர் 2024-இல் அமெரிக்க நீதித்துறை அதானி மீது லஞ்சக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி கோரினார். அதன் பின் டிசம்பர் 2024-இல், அதானி குறித்து செய்தி வெளியிட்ட Organized Crime and Corruption Reporting Project (OCCRP)-க்கு சோரோஸ், USAID நிதி கிடைப்பதாகக் கூறி, ராகுல் காந்தி அமெரிக்க ‘ஆழ்நிலை அரசுடன்’ சேர்ந்து இந்தியாவைக் குலைக்கிறார் என பாஜக குற்றம் சாட்டியது. ஓசிசிஆர்பி  ‘தான் சுதந்திரமான ஊடகம்’ என்று கூறி இக்குற்றச்சாட்டை மறுத்தது, அமெரிக்காவும் குற்றச்சாட்டை நிராகரித்தது. சோரோஸ் உடன் தொடர்பு படுத்தி விமர்சகர்களைத் தாக்கும் இந்தப் போக்கு 2020 முதலே தொடர்வதைக் காண முடிகிறது.

முடிவு

பா.ஜ.க. ஆட்சியை அகற்ற நடவடிக்கை யாக சோரோஸ் நிதியளித்த தாகவும் இப்போது நடைபெறும் போராட்டங்கள் அதன் நீட்சியே எனப் பரவும் செய்தி பொய்யே!

 – ஆய்ந்தறிவோர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *