மெய்யா? பொய்யா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

நேபாளத்தில் விஷ்ணுவின் சக்கரத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு வந்ததா?

 

நேபாள வெள்ளத்தையொட்டி, வெள்ளம் போல் போலிச் செய்திகளும் ஏராளமாக வெளிவந்தன. இந்த வாரமும் அப்படி ஒரு செய்தியைத் தான் உண்மைச் சோதனைக்கு உட்படுத்தவிருக்கிறோம். கடந்த வாரம் வெளிவந்த “மெய்யா? பொய்யா?” பகுதியில் “பாலஞ்சோக் பகவதி சிலை “வியர்க்கும்” மர்மம்: அதிசயமல்ல, இயற்பியலே!” கட்டுரையைப் படிக்காதவர்கள், இங்கே சென்று படியுங்கள். (https://viduthalai.in/206181/)

இந்த வாரத்தில் நாம் எடுத்துக் கொள்ளவிருக்கும் செய்திக்குப் போவோம்.

பரவும் செய்தி

ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, முக்திநாத்தில் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதும், 30 டன் எடையுள்ளதுமான உலகின் மிகப்பெரிய ‘சாளக்கிராம்’ (Shaligram) கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளிகளும், படங்களும் பரவின. ‘ஜீ நியூஸ்’ (Zee News) தொலைக்காட்சி வைரலான அக் காணொளியின் திரைப்பிடிப்புடன் (screenshot) ஒரு செய்தியை வெளியிட்டு, “வைரல் காணொளி: வெள்ளம் வெளிப்படுத்திய ரகசியம்; 170 மில்லியன் ஆண்டுகள் பழமையான சாளக்கிராமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற செய்தியை ஏராளமான இந்துத்துவத் தளங்களும், இந்துத்துவ ஆதரவாளர்களின் சமூக ஊடகப் பக்கங்களும் திட்டமிட்டுப் பரவச் செய்தனர்.

தவறான தகவல்களையும் வகுப்புவாதப் பிரச்சாரங்களையும் தொடர்ந்து பரப்பி வரும் அமிதாப் சவுத்ரி (@MithilaWaaala), என்பவர், “டைனோசர்களை விடப் பழமையான கல். பகவான் விஷ்ணுவின் வடிவமாகப் போற்றப்படும், 31 டன் எடையுள்ள உலகின் மிகப்பெரிய சாலிகிராம் நேபாளத் தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்று எழுதினார். அதன் பின்னர் வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன.

மெய்யா? பொய்யா?

சாளக் கிராமம் என்றால் என்ன?

சாளக்கிராமம் எனப்படும் கற்கள் இயற்கையாகவே உருவாகும் கற்கள் ஆகும்; இவை பாரம்பரியமாக நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் காணப்படுகின்றன. இவை விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகின்றன.

இந்தக் கற்களில், சில நேரங்களில் மிகப் பழங்காலத்து அமோனைட் என்ற கடல் வாழ் உயிரியின் படிமயங்கள் காணப்படுகின்றன. இவற்றை விஷ்ணு வடிவமாக  வழிபடும் வழக்கம் நேபாளத்தில்  உண்டு. (இரண்டு கண்டத் தட்டுக்கள் மோதிதான்  இமயமலை உருவானது என்பதும்  அதற்குமுன் அப்பகுதி கடலால் ஆனது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

மெய்யா? பொய்யா?

உண்மை என்ன?

பெருமளவில் பரவிவிட்ட இந்தப் படங்களின் பின்னணியில் உள்ள உண்மையை அறிய, இது குறித்து நாம் தேடினோம். அதே போல, பல உண்மை அறியும் ஊடகங்களும் தேடி உண்மையை வெளிக் கொண்டுவந்துள்ளன. காணொளியில் காணப்பட்ட அந்தப் பெரிய சிற்பத்தின் படங்களுடன் ‘இமயமலை டைம்ஸ்’ (Himalaya Times) மற்றும் ‘ஆன்லைன் கபர்’ (Online Khabar) ஆகிய ஊடகங்கள் ஜூன் 30, 2026 அன்று வெளியிட்ட செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதாவது வெள்ளத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பு!

நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள 22 அடி உயரமுள்ள சாளக்கிராமச் சிற்பம், படிப்படியாக ஒரு மத நம்பிக்கையின் மய்யமாக மாறி வருவதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. அந்தச் செய்தியின் படி, நேபாள நுண்கலை அகாடமியைச் சேர்ந்த சிற்பிகள், கர்பாஜோங் (Gharpajhong) கிராமப்புற நகராட்சிப் பகுதியான ஜோம்சோமில் உள்ள காளி என்பவர், கண்டகி ஆற்றங்கரையில் ஒரு பெரிய பாறையைச் செதுக்கி, ஏப்ரல் 20-லிருந்து, மே 4, 2026-வரை 22 அடி உயரமுள்ள ஷாலிகிராமத்தின் மாதிரியை உருவாக்கினர்.

அந்தச் சிற்பம், சில மதச் சடங்குகள் நடத்தப்பட்ட பிறகு, மே 28, 2026 அன்று மாலை   ஜகத்குரு சங்கராச் சாரியார் மஹாசுவாமி விதுஷேகர பாரதியால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், ‘நேபாள ராய்பார்’ (Nepal Raibar) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவையும் நாங்கள் கண்டோம்; அதில் கலைஞர்கள் ஷாலிகிராம் சிலையை உருவாக்க ஒரு பாறையைச் செதுக்குவதைக் காண முடிந்தது.

ஜோம்சோமில் உள்ள ‘தக்கோலா லாட்ஜ் & ஜிம்மிஹெண்ட்ரிக்ஸ் உணவகத்திற்கு’ (Thakkhola Lodge & Jimihendrix Restaurant) எதிரே, காளி கண்டகி ஆற்றங்கரையில் வெறும் பாறையாக அது இருந்ததை2025-ஆம் ஆண்டின் ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’ (Google Street View) படங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது கண்டறிய முடிந்தது என்று ‘ஆல்ட் நியூஸ்’ தெரிவித்துள்ளது.

இதன் மூலம், வைரலான வீடியோவில் காட்டப்பட் டுள்ள ஷாலிகிராம் சிலை இயற்கையான அல்லது பழமையான கல் அல்ல என்பது தெளிவாகிறது. மாறாக, இது ஒரு பாறையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட சிலையாகும்.

முடிவு

மொத்தத்தில், நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடருக்குப் பிறகு, முக்திநாத்தில் 170 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதும் 30 டன் எடையுள்ளதுமான உலகின் மிகப்பெரிய சாளக்கிராமம் கண்டெடுக்கப்பட்டதாக ‘ஜீ நியூஸ்’ (Zee News) தொலைக்காட்சியும் பிற சமூக ஊடகங்களும் முன்வைக்கும் கூற்று முற்றிலும் தவறான தகவலாகும். (உண்மை வெளிவந்ததும் யூடியூபில் இருந்து அந்தக் காணொலியை ஜீ நியூஸ் நீக்கி உள்ளது. ஆனால், பிற சமூக ஊடகங்களில்  இதே போன்ற காணொலிகள் இன்னும் பரவி வருகின்றன.

உண்மையில், பரவும் காணொளிகளில் காணப்படும் 22 அடி உயர சாளக்கிராமச் சிலை, ஏப்ரல்-மே 2026 காலகட்டத்தில் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள காளி கண்டகி ஆற்றின் கரையில் இருந்த பாறையைக் செதுக்கி உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவும் சாளக்கிராமச் சிலை தொடர்பான காணொளிகளும் ஜூன் 2026-ல் எடுக்கப்பட்டவையே; நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

– ஆய்ந்தறிவோன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *