மோடி ஆட்சியில் விலைவாசி உயர்வு என்னும் பூகம்பத்தின் பேரழிவுக் காலம்: காங்கிரஸ்

4 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 15- “மோடி ஆட்சியில் இது அமிர்த காலம் இல்லை. விலைவாசி உயர்வு என்னும் பேரழிவின் காலம்” என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், அதிகரித்து வரும் பண வீக்கம், உணவு, பானங்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டும் ஊடகச் செய்திகளை பகிர்ந்துள்ளார். அத்துடன், “மோடி அரசாங்கத்தில் பண வீக்கம் என்பது வெறும் கேடாக மட்டும் இல்லை. அது இப்போது அழையாத விருந்தினராக வந்து ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சமையலறை முதல அன்றாட தேவையான பொருள்கள் வரை அனைத்தின் விலையும் கட்டுப்பாட்டையும் மீறி உயர்ந்துள்ளது.

மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து விட்டன. கடந்த 12 ஆண்டுகளாக பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் உண்மையான தாக்கம், அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் காட்டுவதை விட மிக அதிகம். இந்த ஆண்டு அந்த புள்ளி விவரங்களே ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருகின்றன.

சில்லறை பண வீக்கம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.09 சதவீதத்தை எட்டி உள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னெவென்றால், நுகர்வு சார்ந்த 12 பிரிவுகளில 11 பிரிவுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது. இருப்பினும், தற்பெருமை பேசும் உபதேச அமைச்சர்(பிரதமர் மோடியை) தனது அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து மவுனம் காக்கிறார்.

உணவுப் பொருள்களின் பண வீக்கம் 8.94 சதவீதத்தை எட்டி உள்ளது. வெங்காயத்தின் விலை 116 சதவீதமும், பூண்டு விலை 60 சதவீதமும், இஞ்சி விலை 48 சதவீதமும் அதிகரித்துள்ளன. கோதுமை மாவு, எண்ணெய், நெய், பால், பருப்பு வகைகள் முதல் சோப்பு வரை அனைத்தின் விலைகளும் விண்ணைத் தொடுகின்றன.

விலை உயர்வுக்கு மட்டுமின்றி, நிறுவனங்கள் பொருள்களின் அளவை குறைப்பதையும் பரிசீலித்து வருகின்றன. வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இது சாமானிய மக்களுக்கு கடன் வாங்குவதையும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதையும் இன்னும் கடினமாக்கும். மோடி ஆட்சி விலைவாசி உயர்வு என்னும் பூகம்பத்தின் பேரழிவு காலம்” என விமர்சித்துள்ளார்.

குத்தகை விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பயன்!

வேளாண் துறை அமைச்சர்

சென்னை, நவ. 15- தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகளும் பதிவு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடப்பாண்டில் (2026-2027) சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி 1.12.2026 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் 2026-2027 ஆண்டு சம்பா பருவம் முதல், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நில உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள விவசாயி அடையாள எண்ணும் (FID), குத்தகை விவசாயிகள் பதிவு செய்து கொள்ள நில உரிமைதாரர்களிடமிருந்து ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

பேரூராட்சி, நகராட்சி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களும், தனியார் மற்றும் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகளாலும், இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் இடர்பாடுகள் இருந்தன. இதைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு  குத்தகை விவசாயிகள், மலைப்பகுதி மற்றும் நகர்புற விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயி அடையாள எண் மற்றும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுதல் ஆகியவை கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து பயனடையலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே 23இல் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு

புதுடில்லி, நவ.15- அய்.அய்.டி. போன்ற முன்னணி ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘ஜே.இ.இ. அட்வான்ஸ்டு’ நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு (2027) மே 23ஆம் தேதி நடைபெறும் என்று டில்லி அய்.அய்.டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜே.இ.இ. மெயின்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். இந்த ஆண்டு இத்தேர்வை நடத்தும் பொறுப்பை டில்லி அய்.அய்.டி. ஏற்றுள்ளது.

தேர்வு குறித்து டில்லி அய்.அய்.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு மே 23ஆம் தேதி நடக்கும். தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காகக் கணினித் திரையிலேயே பயன்படுத்தக்கூடிய சாதாரண கால்குலேட்டர் வசதி இந்த முறை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே எழுத முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *