பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதாகச் சொல்லப்படும் பிரச்சினையில் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதாகச் சொல்லப்படும் பிரச்சினையில் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எதுவுமே கட்டுப்பாட்டில் இருக்காது என்றால் எதற்கு இந்த ஆட்சி? உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தால் அது தனிச் சிறப்பாகும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் என்பவர், அந்த மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் அலுவல்பூர்வ இல்லத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செய்தி வெளிவந்து அய்ந்து நாட்களுக்கும் மேலாகின்றன. ஆனால், இது குறித்து முறையான நடவடிக்கையோ, பொறுப்பான பதிலோ இதுவரை அரசுத் தரப்பிலிருந்து இல்லை என்பது பெரும் ஏமாற்றமளிப்பதாகும்.
அதிகாரம் மிக்க பதவியில் அமர்ந்து இருந்தாலும், ஒரு பெண் என்பதால் இத்தகைய நெருக்கடிகள் வழங்கப்படுகின்றன என்பது எத்தகைய கொடுமை! சொல்ல வெட்கமாக இருக்கிறதே!
த.வெ.க. ஆட்சியில், மாவட்ட ஆட்சியருக்கே பாது காப்பு இல்லை என்றால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்னும் கேள்வி எழுகிறதே! பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், முறைப்படி தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அவருடைய வாழ்விணையரான மற்றொரு மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் புகார் அளித்திருப்பதாகவும் செய்திகளில் காண்கிறோம். ஆனால், ‘‘புகார் வரட்டும் – பார்க்கலாம்’’ என்கிறார் ஓர் அமைச்சர். உலகமே அறிந்த பின்னரும், எதுவும் தெரியாததைப் போலவே பேசுவது பொறுப்பற்ற செயல் அல்லவா?
இந்திய அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தும் இந்த அவலத்திற்குக் காரணமானவர்கள் மீது தமிழ்நாடு அரசால் வெளிப்படையாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அல்லது மறைமுகமாகத்தான் இதுவரை என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் – சமாதானம் பேச முன்வந்ததைத் தவிர?
முதலமைச்சர் இது குறித்துக் கூட வாயைத் திறக்க மாட்டாரா?
ஊடகங்களைக் கொண்டு கதையளந்துவிட்டால் போதுமா?
‘தப்புச் செய்த எம்.எல்.ஏ.வை அழைத்துக் கண்டித்தார், நெருப்புக் கணைகளை வீசினார், கோபப் பார்வை பார்த்தார்’ என்று மூடிய ‘தகரத்’ தடுப்புகளுக்கு உள்ளே நடந்ததைத் ‘துப்புத் துலக்கி’ எழுதுவது போல ஊடகங்களைக் கொண்டு கதையளந்துவிட்டால் போதுமா?
ஆட்சிக்குப் போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பதால், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய இவர் மீதும், வீட்டுக்குப் புகார் அளிக்க வந்த குடிமகன் ஒருவரைத் தாக்கிய பிரச்சினையில் சிக்கியுள்ள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையா? ஆட்சியில் நீடிப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் என்ன அநியாயம் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாரா முதலமைச்சர்?
சட்டமன்ற உறுப்பினர் மக்கள் ஊழியர் அல்லவா? அவர்களுக்கென பொது ஒழுக்கம் வேண்டாமா?
‘எம்.எல்.ஏ.க்களையெல்லாம் அழைத்துள்ளார். ஆங்காங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்துக் கண்டிப்பார்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், எல்லோருக்கும் பட்டுச் சட்டை, பட்டு வேட்டி அளித்து, முடிந்துபோன தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்னார் என்று பேட்டி தருகிறார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். இது தான் கல்லக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவைத் துணைத் தலைவரும் நடந்து கொண்ட முறையைக் கண்டிப்பதா? அல்லது இப்படி நடந்துகொண்டதற்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகிறார்களா? சட்டமன்ற உறுப்பினர் மக்கள் ஊழியர் அல்லவா? அவர்களுக்கென பொது ஒழுக்கம் வேண்டாமா?
ஆளுங்கட்சி என்றால்
ஒதுங்கிக் கொள்ளுமா?
இன்னொரு அரசு ஊழியரான அய்.ஏ.எஸ். அதி காரிக்குத் தொல்லை தரலாமா? அதுவும் பாலியல் தொல்லை! எதிர்க்கட்சிகளோ, மக்களோ போராட்டம் நடத்தினால், அதிகாரிகளைப் பணியாற்றவிடவில்லை என ‘அரசு ஊழியரைப் பணியாற்ற விடாமல் தடுத்தார்கள்’ என்று வழக்குப் போடப்படுகிறதே! இந்தப் பிரிவு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்குப் பொருந்தாதா? மாவட்ட ஆட்சியருக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டா? பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்புக்கான சட்டம் இருக்கிறதே! தீவிரமான பிரிவுகள் இருக்கின்றனவே! அவையெல்லாம் ஆளுங்கட்சி என்றால் ஒதுங்கிக் கொள்ளுமா?
பாலியல் வன்கொடுமைகள், ஏமாற்று வேலைகள், கொலை, திருட்டு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு கள் என ஆளுங்கட்சியினர் மீது ஏராளமானப் புகார்கள், அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இத்தகைய அநீதிகளை இந்த அரசு கண்டுகொள்ளாது என்றால், யார் இதற்கெல்லாம் பொறுப்பாளி?
விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முடியாது; காவல்துறையை போதிய வேகத்தில் இயங்க வைக்க முடியாது; சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்க முடியாது; சொந்தக் கட்சிக்காரர்களையும் கட்டுக்குள் வைக்க முடியாது என்றால் இதில் ஆளுமை எங்கே இருக்கிறது? அடுத்தடுத்து, குழந்தைக் கடத்தல் சம்ப வங்கள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் கடத்தப்படு வது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன.
மக்கள் நொந்து
போயிருக்கிறார்கள்!
கடந்த ஆட்சியில் அரிதாக நடந்த பிரச்சினைகளை ஊடகங்களின் துணையுடன் ஊதிப் பெரிதாக்கி, ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று போலியாகக் குற்றம்சாட்டி, மேடையில் வசனம் பேசி, நாடகம் நடத்தி, ‘திரைப்படங்களில் காட்டிய வீராவேச ஹீரோ யிசக் காட்சிகள் நேரிலும் நடக்கும்’ என்று மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சி, அலங்கோலமாக இருப்பதைப் பார்த்து மக்கள் நொந்து போயிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்களின் செவிகளுக்கு இவையெல்லாம் எட்டுகின்றனவா இல்லையா?
இது மாவட்ட ஆட்சியர் தொடர்பான பிரச்சினை என்பதால், இதனை சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, உண்மைகளைக் கண்டறிந்தால், அது தனிச் சிறப்பாகும்!
அரசு செய்யாததை, அய்யா பெரியாரின் இயக்கம் முன்னெடுக்கும்!
மகளிர் பாதுகாப்பு குறித்து பேச்சோடு நில்லாமல், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் விழிப்புணர்வூட்டுவதற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். அரசு செய்யாததை அய்யா பெரியாரின் இயக்கம் முன்னெடுக்கும்.
அதே நேரத்தில், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், முறையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.11.2026
