ந.தேன்மொழி, குடியேற்றம்
மனித வாழ்க்கை உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நீண்ட பயணம். பிறந்தது முதல் இறப்பு வரை ஏதோவொரு உறவின் துணையோடுதான் நம் வாழ்க்கை நகர்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் உறவுகள் தேவைப்படுகின்றன. உறவுப் பயணத்தில் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைகிறார்கள். ஒருவருக்கொருவர் துணையாகிறார்கள். ஒருவரின் வாழ்வில் மற்றொருவர் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்கள். உறவுகள் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன. நம் தனிமையைக் குறைக்கின்றன. நம்பிக்கையை வளர்க்கின்றன.
ஆனால் எல்லா உறவுகளும் நாம் எதிர்பார்க்கும் நிறைவைத் தந்துவிடுவதில்லை. சில உறவுகள் காலத்தால் நெருக்கமாகின்றன, சில காலப்போக்கில் அந்நியமாகின்றன. அருகில் இருப்பவர்கள் கூட சில நேரங்களில் மனதளவில் வெகுதொலைவில் நிற்கிறார்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியைத் தந்த உறவே பின்னாளில் சொல்ல முடியாத வலியைத் தருவதும் உண்டு. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அனுபவங்களாக மாறிவிடுகின்றன.
உறவுகளின் உலகம் வெளிப்பார்வைக்கு எளிமையானதாகத் தோன்றும். ஆனால் அதன் உள்ளடுக்குகள் ஆழமானவை. அங்கே உணர்வுகள் இருக்கின்றன. எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. புரிதல்களும் புரிதலின்மைகளும் இருக்கின்றன. நெருக்கமான உறவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போலவே அவர்களுக்கு இடையே உருவாகும் இடைவெளிகளும் ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் அனுபவங்கள் ஒரு உண்மையை உணர்த்துகின்றன. உறவுகளின் மதிப்பு அவை நம் வாழ்வில் இருக்கின்றன என்பதில் மட்டும் இல்லை. அவை நம் வாழ்வை எத்தகையதாக மாற்றுகின்றன என்பதிலும்தான் இருக்கிறது. உறவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது என்றால், மனிதநேயம் அவற்றின் உயிராக இருக்கிறது. உறவுகளின் இணைப்பிற்கு மதிப்பையும் மேன்மையையும் வழங்குவது மனிதநேயம். உறவும் மனிதநேயமும் இணைந்திருக்கும் போதுதான் மனித வாழ்க்கை அதன் முழுமையை நோக்கி நகர்கிறது.
காலம் மாறுகிறது. வாழ்க்கை முறைகள் மாறுகின்றன. இந்த மாற்றங்களுக்கு இடையில் உறவுகளின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டிய அவசியம் மட்டும் மாறுவதில்லை. உறவுகளின் எண்ணிக்கையைக் கொண்டு மனித வாழ்க்கையின் வளத்தை அளவிட முடியாது. அதற்குள் பொதிந்திருக்கும் மனிதநேயத்தின் ஆழத்தில்தான் உண்மையான செழுமை அடங்கியிருக்கிறது.
பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள், நண்பர்கள் என ஒவ்வொரு உறவுக்கும் தனித்த உணர்வும் பொறுப்பும் இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு உறவும் ஒருவருக்கு மற்றொருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தைக் கொடுக்காது. அன்பு செலுத்துவதற்கும் அன்பால் கட்டுப்படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அக்கறை காட்டுவதற்கும் உணர்வுகளையும் விருப்பங்களையும் மறுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. குறிப்பாகப் பிள்ளைகளின் வாழ்க்கைத் தேர்வுகளில் பெற்றோருக்குக் கருத்துச் சொல்லும் உரிமை இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து அவமானமாகவோ, அச்சுறுத்தலாகவோ மாறும் போது உறவுக்குள் இருக்கும் மனிதநேயம் பாதிக்கப்படுகிறது. ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய விருப்பம், சுயமரியாதைக்கு இடமளிக்காமல் உறவின் பெயரால், அன்பின் பெயரால் ஒடுக்குவது தவறானது. இதைத் தெளிவுபடுத்தலாம், கட்டாயமாக அடிபணியச் செய்வது மனிதத்தன்மையற்ற செயலே.
திருமணம் என்பது இரண்டு மனிதர்களின் இணைவு மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களின் தொடர்பு. இதில் யாருடைய குடும்பமும் உயர்ந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல. நமக்குச் சமமானவர்கள் இல்லை என்ற நினைப்பே உறவின் சமத்துவத்தைச் சிதைக்கிறது. தன் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவர், தன் இணையரின் பெற்றோரையும் அதே மரியாதையுடன் அணுக வேண்டும். தன்னுடைய குடும்பத்தின் உணர்வுகள் முக்கியம் என்றால், துணையின் குடும்பத்தின் உணர்வுகளும் முக்கியமானவையே. ஒருவருக்கான நியாயம் மற்றவருக்கும் பொருந்த வேண்டும் என்பதுதான் நேர்மையான மனிதநேயச் சிந்தனை.
குடும்ப உறவுகளில் எல்லைகளை வகுப்பது அவசியமெனில் இரண்டு பக்கமும் எல்லைகள் தேவை. திருமண உறவில் அன்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு சுயமரியாதையும் முக்கியம். சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டுமெனில் பரஸ்பர மரியாதை அவசியம். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் சொத்து, பணம், குடும்பப் பொறுப்புகள், பெற்றோரைப் பராமரித்தல் போன்றவற்றில் நேர்மையும் நியாயமும் தேவைப்படுகிறது. உடன்பிறந்தவர்கள் என்பதற்காக ஒருவர் மற்றவரை ஏமாற்றுதல் கூடாது. நியாயமாகப் பகிர்ந்து பொறுப்புகளை ஏற்று வாழ்வதே மனிதநேயம். உறவின் நெருக்கம் பகிர்வில் தெரியும். உறவின் நேர்மை ஏமாற்றாமையில் தெரியும். ஒருவருடைய நம்பிக்கையைத் தன்னுடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது உறவின் பெயரைப் பாதுகாத்தாலும் அதன் அடிப்படையை அழித்துவிடும்.
நட்பு என்பது ஒருவரின் வாழ்க்கைக்குத் துணையாக இருப்பது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது உரிமை கொண்டாடுவது அல்ல. நண்பர்களுக்குள் ஆலோசனைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி மற்றவரின் திருமண வாழ்க்கைக்குள் தேவையற்ற தலையீடு செய்வது, சந்தேகங்களை வளர்ப்பது, இணையர்களுக்கிடையே மோதலை உருவாக்குவது நட்பின் பண்பல்ல. தவறு அல்லது வன்முறை நிகழும்போது உதவ முன்வருவது வேறு. நட்பின் அடிப்படையில் அதிக உரிமை தேவையின்றி எடுப்பது, தன்னை முக்கியமானவராக எப்போதும் நிலைநிறுத்திக்கொள்ள நினைப்பதும் வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதில்தான் மனிதநேயம் இருக்கிறது.
மனிதர்கள் தவறு செய்பவர்களே. தவறுகளை உணர்ந்து மன்னிப்பும் கேட்கக் கூடியவர்களே. தவறுகளை உணர்ந்து திருத்துவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அதையே காரணமாக்கி ஒருவரைத் தொடர்ந்து காயப்படுத்துவது தவறு. ஒவ்வொரு முரண்பாட்டின் போதும் பழைய தவறை ஆயுதமாக்குவது, குற்ற உணர்வில் அவரை வாழவிடுவதும் சரியில்லை. தவறு செய்தவர் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வலியை உணர்ந்து இயன்றவரை சிக்கலைச் சரிசெய்ய வேண்டும். ஒரு தவறைச் சுட்டிக்காட்டுவதற்கும் ஒருவரைத் தொடர்ந்து தண்டிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. மாற்றத்திற்கான முயற்சி இல்லாமல் தவறு மீண்டும் நிகழ்ந்தால் எல்லைகள் வகுப்பது நியாயமானதே.
மன்னிப்பு என்பது கட்டாயப்படுத்திப் பெறக்கூடிய ஒன்றல்ல. காயமடைந்தவர் தமது வலியிலிருந்து மீளத் தேவையான காலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உறவைத் தொடர முடிவு செய்த பின்னரும், தவறைத் தொடர்ந்து துன்புறுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்துவது மனிதநேயமற்ற ஆரோக்கியமற்ற செயலாகும். தவறைத் திருத்த வாய்ப்பளிப்பது மனிதநேயம். தவறையே தண்டனையாகத் தொடர்ந்து வழங்குவது மனிதநேயமின்மை. தவறு செய்தவரின் மாற்றத்தைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல காயமடைந்தவரின் வலியையும் சரியாகப் புரிந்துகொள்வதே அடிப்படை மனிதநேயம்.
உணவளித்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு ஆதரவளித்தல், நெருக்கடியில் இருப்பவர்களுக்குக் கைகொடுத்தல் ஆகியவை மனிதநேயத்தின் முக்கியமான வெளிப்பாடுகள். ஆனால் இவை மட்டுமேவா என்பதுதான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. பிறருக்கு மிகச் சிறந்த தொண்டாளராக இருக்கும் ஒருவர், தன்னுடன் பணிபுரிபவரை அவமானப்படுத்தினால், வீட்டில் இருப்பவரின் உணர்வுகளைப் புறக்கணித்தால், தனக்குக் கீழே வேலை செய்பவரிடம் தவறுதலாக நடந்தால், அவருடைய மனிதநேயத்தில் முரண்பாடு இருக்கிறது. மனிதநேயம் என்பது பிறருக்குக் கொடுப்பதில் மட்டும் இல்லை. பிறரை எவ்வாறு நாம் நடத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. புகழும் பாராட்டும் கிடைக்காத இடங்களிலும் பிறருடைய மாண்பைக் காப்பதே மனிதநேயத்தின் நிலைத்த தன்மையாகும்.
எந்தக் கொள்கையை ஏற்று நடந்தாலும் சமத்துவ எண்ணத்தோடு இருப்பது, புதியவர்களை வரவேற்பது, அவர்களைச் சிறுமைப்படுத்தாமல் இருப்பது, மூத்தவர் என்பதற்காக ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது மனித நேயத்தின் அடிப்படைத் தத்துவம். ஒரு கொள்கையின் மேன்மை என்பது கோட்பாடுகளில் மட்டுமல்ல. மனிதர்களின் சமத்துவத்திற்காகப் பேசும் கொள்கை, தன்னுடைய செயலிலும் மனிதர்களின் மாண்பைப் பாதுகாக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இல்லாத இடம்தான் நல்ல அமைப்பு என்பதல்ல. வேறுபட்ட கருத்துகளைக் கேட்கும் மனப்பக்குவம், அதிகாரத்தைப் பொறுப்புடன் கையாளும் பண்புமே அமைப்பின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும்.
மனிதநேயம் என்பது பிறருடைய வலியைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தன்னுடைய வலியையும் உணர்ந்து மதிப்பதும் ஆகும். பிறருக்கு வாய்ப்பளிப்பது போலவே தனக்கான எல்லைகளையும் காப்பது அவசியம். தவறுகளைப் பேசித் தீர்க்க முயல்வதும், மாற்றத்திற்கான வாய்ப்பளிப்பதும், தேவையான எல்லைகளை வகுப்பதும், பாதுகாப்பான முடிவுகள் எடுப்பதும் முரணானவை அன்று. உறவுகள் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். மன உளைச்சலைத் தருவதாக இருக்கக் கூடாது. உறவைப் பாதுகாக்க வேண்டி மனிதத்தன்மையை இழக்க நேரிடும் என்றால், அந்த உறவின் பொருள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
உறவுகளை உருவாக்குவது வாழ்க்கையின் இயல்பு. அவற்றுக்குள் மனிதநேயத்தைக் கலப்பது நம்முடைய பொறுப்பு. உறவின் நீண்ட காலப் பயணம் உறவின் மேன்மையை உறுதிப்படுத்தி விடாது. அதற்குள் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்தினார்கள் என்பதில்தான் அதன் மேன்மை இருக்கிறது. மனிதநேயம் தொலைந்த உறவுகளில் மனிதர்கள் அருகருகே இருந்தாலும், உறவு நீடித்தாலும் அங்கே அன்பும் மரியாதையும் நிலைப்பது கேள்விக்குறியே. எனவே உறவு நீடிப்பது என்பது மனிதநேயம் நீடிப்பதன் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
உறவுகளை இழப்பது ஒரு வலி. உறவுகளுக்குள் மனிதநேயத்தை இழப்பது அதைவிட ஆழமான இழப்பு. ஏனெனில் மனிதநேயம் இல்லாதபோது உறவின் பெயர் என்னவாக இருந்தாலும் அந்த உறவை மனிதத்தன்மையுடன் வாழச் செய்த உயிர் மெல்ல மறைந்து விடுகிறது. உறவுகள் நம்மை இணைக்கட்டும். அன்பு நம்மை நெருக்கட்டும். நெருக்கம் மாண்பைக் குறைக்காமல் இருக்கட்டும். கருத்துகள் நம்மை வழிநடத்தட்டும், அவை மனிதர்களை இழிவுபடுத்தும் கருவியாக இல்லாமல் இருக்கட்டும்.
எனவே மனிதநேயத்தைத் தொலைத்துவிட்டு உறவுகளை மட்டும் தக்க வைத்துக்கொள்வதில் பெருமையில்லை. உறவுகளுக்குள் மனிதநேயத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்தான் மனித வாழ்வின் உண்மையான மேன்மை இருக்கிறது.
