கேள்வி 1: தமிழ்நாட்டில் அதிக இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்தது உள்பட இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி முழுக்க முழுக்க பா.ஜ.க. ஆட்சி போல தெரிகிறதே!
– கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி
பதில் 1: சட்டப்படி நீதிமன்ற ஆணையில் அனுமதி தந்துள்ளது என்றாலும் கூட, த.வெ.க. அரசின் மற்ற அண்மைக்கால நடவடிக்கைகள், உங்கள் சந்தேகத்திற்குத் சரியான தீனி போடுவதாகவே உள்ளது.
ஒன்றிய, மாநில உறவுகள் குறித்து ஆராயும் குழுவை (கமிஷன்) கலைத்தது; மைல் கற்களில் ஹிந்தி – மும்மொழித் திட்டத்திற்கு முக்காடு அல்ல – பகிரங்கமாகத் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் வைக்கும் முயற்சிக்குத் துணைபோதல் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.
- • •
கேள்வி 2: பிரதமர் மோடி – தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகிய இருவரின் ஒற்றுமை என்ன?
– கவுசல்யா, திருவள்ளூர்
பதில் 2: செய்தியாளர்களைச் சந்திப்பதும், அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும் வீண் வேலை என்று கருதி எதிலும் ஈடுபடாதவர்கள் – அந்த “கெட்டப் பழக்கம்” எங்களிடம் இல்லை என்று நடந்து கொள்வதில் இருவரும் இணை கோடுகள்!
- • •
கேள்வி 3: தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி இருந்தவரை ஹிந்தித் திணிப்பு முயற்சியை நிறுத்தியிருந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது வெளிப்படையாகவே அதனை செய்வது சரியா?
-சங்கரலிங்கம், திருநெல்வேலி
பதில் 3: காவல் அரண் சரியாக இருந்தது அப்போது! இப்போது ஆர்.எஸ்.எஸ். டிரோஜன் குதிரை தமிழ்நாட்டுக்குள் புகுந்துவிட்டதே! மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
- • •
கேள்வி 4: த.வெ.க.வின் ஆறு மாத ஆட்சியின் சிறப்பாக நீங்கள் கருதுவது?
– முகிலன், சேலம்
பதில் 4: ‘கலையால் ஆட்சி’ அமைந்ததால், அன்றாடம் கொலைகள் மலை போல் என்ற அரசியல் காட்சி! இதுதான்!
- • •
கேள்வி 5: இன்றைய ஜென்–சி இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
– ஆனந்தன், அரும்பாக்கம்
பதில் 5: உங்கள் எதிர்காலத்தை மிகவும் கவனமாக நோக்குங்கள். காலும் கண்ணும் போகும் வழியாக உங்கள் நடத்தை இல்லாது, சரியான பகுத்தறி(மூளை)வுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே! பெரியாரைத் துணைகோடல் அதற்கு முக்கியம்!
- • •
கேள்வி 6: கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வாங்கிய முறைகேடுபற்றிய விசாரணை சரியான முறையில் நடைபெறுமா?
– ரமேஷ், பழனி
பதில் 6: நீதிமன்றக் கண்காணிப்பு, மக்களின் கூர்நோக்கு எல்லாம் இருக்கின்றன என்ற அச்சத்துடன் – பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, தோலுரிக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரவேண்டும் – நம்புவோமாக!
- • •
கேள்வி 7: விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவிற்குச் சென்றுள்ளபோது, அரசின் இலவசங்கள் தேவையா?
– மணி, மாமண்டூர்
பதில் 7: நல்ல கேள்வி. பதில் அளிக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் – குறிப்பாக ஆளுங் கட்சியாகும்.
- • •
கேள்வி 8: “காந்தியைக் கோட்சே கொன்று விட்டான் என்று சொல்லும்போது கோபம் வருகிறது. ஆனால் ஏன் சுட்டான் என்று ஆராயும் போது தான் எவ்வளவு உண்மையானவர் என்பது தெரியும்..!” என்று சிலர் நிரம்ப ஆதங்கப்படுகிறார்களே..! அப்படி என்னதான் கோட்சே – மக்களுக்காக, நாட்டிற்காக செய்துவிட்டார்?
– குடந்தை க. குருசாமி
பதில் 8: ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்தான் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்! காந்தியாரின் தியாகம் மறைக்கப்படும் சூழ்ச்சி வன்மத்தின் வெளிப்பாடு!
- • •
கேள்வி 9: பின்னோக்கிக் கொண்டு செல்லப்படும் தமிழ்நாட்டை, முன்னோக்கிக் கொண்டு வருவதற்கு என்ன வழி?
– சாலமன், பெரியபாளையம்
பதில் 9: வாக்களித்தோர்கள் தவறான முடிவைத் தாங்களே திருத்திக் கொள்ள முன் வருதல்தான் ஒரே தீர்வு!
- • •
