சென்னை, நவ. 3- பதவிக்கு ரூ.5 கோடி பேரம் பேசியதாக கூறிய விவகாரத்தில், அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா 1.11.2026 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறினார் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாகக் கொண்டு ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏவுமான அய்.பரந்தாமன் நேற்று (2.11.2026) புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஊடகங்களின் முன்னிலையில் அமைச்சர் ராஜ்மோகன், ஒரு முக்கிய விவரத்தை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்வதற்கு ஈடாக, ஒரு நபர் தனக்கு ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகவும், அந்த சலுகை ஏ.லயோலா மணி மூலமாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் உரையின் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பத்திரிகை களிலும் செய்தியாக வந்துள்ளது. அமைச்சர் ராஜ்மோகன் “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க, அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் நான் தர்றேன்’ அப்படின்னு ஒருத்தர் பேசினார். சிரிச்சுகிட்டே லயோலா மணிகிட்ட நான் சொல்லி அனுப்பினேன். ‘தம்பி, 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார். நான் தளபதியின் தம்பி; பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய் வாங்காம அந்தப் பதவியை தளபதி தரச் சொல்லி யிருக்காருன்னு சொல்லி அனுப்புனேன். இன்னைக்கு வரைக்கும் நான் வெளில சொன்னதில்லை அண்ணே” என்று பேசியுள்ளார்.
அமைச்சருக்கு ரூ.5 கோடி லஞ்சமாக தர முன்வந்தவரின் அடையாளம் அமைச்சருக்கும், ஏ.லயோலா மணிக்கும் தெரியும். இந்த லஞ்ச பேரம் நேரடியாக விவாதிக்கப்படாமல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக இருக்கும் ஒரு பொது ஊழியரான லயோலா மணி வழியாக நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் தனது பதிலை அதே லயோலா மணி மூலமாகவே லஞ்சம் தர முன்வந்தவருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் லஞ்சப் பேரம் பேசியவர், இடைத்தரகர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்ச்சியான தகவல் தொடர்பு வழித்தடம் இருந்துள்ளது. அதன் பின்னர் அந்தப் பதவி புஷ்பவனம் குப்புசாமிக்கு வழங்கப்பட்டது.
அமைச்சர் இந்த லஞ்சப் புகாரைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ அல்லது வேறு எந்த சட்ட அமலாக்க நிறுவனத்திற்கோ தெரிவிக்கவில்லை. இந்த சட்டவிரோத செயலை ராஜ் மோகன் மற்றும் லயோலா மணி மறைத்துள்ளனர். எனவே குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்ததில் இருவருக்கும் சமமான பங்கு உள்ளது. ராஜ்மோகன் அமைச்சராக இருப்பதால், ஊழல் தடுப்புச் சட்டம், பிரிவுப்படி ஒரு “பொது ஊழியர்” ஆவார். அரசுக்கு சொந்தமான கழகத்தின் தலைவராக இருக்கும் ஏ.லயோலா மணியும் அதே சட்டத்தின் பிரிவின் கீழ் ”பொது ஊழியர்” ஆவார். இயல் இசை நாடக மன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பது பொதுமக்களின் நலன் சார்ந்த ஒரு பொது கடமை ஆகும். ஒரு பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முன்வருவதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படத்தக்க குற்றமாகும். குற்றத்திற்கு தூண்டுதலாகவோ அல்லது உடந்தையாகவோ இருக்கும் நபருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இடைத்தரகராக செயல்பட்டவர் ஏதேனும் ஆதாயம் பெற்றாரா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். இக்குற்றங்கள் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறத்தக்கவை என்பதால், இவை அறிந்துகொள்ளத்தக்க குற்றங்கள் ஆகும். எனவே, முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) பதிவு செய்வது கட்டாயமாகும். அரசின் மேடையில் அமைச்சரே ஒப்புக்கொண்ட இந்த வாக்குமூலம் ஒரு முதன்மைத் தகவல் ஆகும். லஞ்சம் கொடுக்க முயன்ற நபரை தெரிந்த ராஜ்மோகன், லயோலா மணி ஆகிய இருவரிடமும் உரிய விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், தொலை பேசி அழைப்பு விவரம், எஸ்எம்எஸ் உள்ளிட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசு விழாவைப் பதிவு செய்த செய்தி மக்கள் தொடர்பு துறை, இந்த அமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே வருவதால், அதன் அசல் எடிட் செய்யப் படாத காணொலிகளை லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக கைப்பற்ற வேண்டும். மேலும் அமைச்சர் ராஜ்மோகன், லயோலா மணி மற்றும் லஞ்சம் கொடுக்க முன்வந்த அடையாளம் தெரியாத நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்மோகன், லயோலா மணி ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்து, லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார், எப்போது, எங்கு, எப்படி அப்பேரத்தை நடத்தினார் என்பதைக் கண்டறிய வேண்டும். பதவிகளுக்குப் பணியாமல் நேர்மையான, நடுநிலையான, கால வரம்பிற்குட்பட்ட விசாரணையை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
