புதுடில்லி, நவ. 02- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று (1.11.2026) பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ஆம் தேதி டில்லியில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மதியம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் திறந்த வேனில் கன்னாட்பிளேஸில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பின்னர் ராம்லீலா மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி, கருநாடக முதலமைச்சர் சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர்.
கார்கே
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஞானேஷ் குமார் பதுங்கு குழியில் இருந்தாலும் இந்திய இளைஞர்கள் அவரை கண்டுபிடிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்ற வேண்டும். வாக்கு திருட்டைத் தடுத்து ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அகிலேஷ்
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசும்போது, “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இன்ஜின் அரசு, இரட்டை தோல்வியை சந்திக்கும். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெறலாம் என்று பாஜக கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது” என்றார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேசும்போது, “மேற்குவங்க தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். ஞானேஷ் குமார் மேற்குவங்கத்தில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டார். அவர் உடனடி யாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.
ராகுல்
ராகுல் காந்தி பேசும்போது, “நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் 3 பேரும் நாட்டின் நம்பிக்கைமீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வாக்கு திருட்டுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் சாதாரண திருட்டில் ஈடுபடவில்லை. மக்களின் வாக்குகளை திருடி உள்ளார். ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டு உள்ளார். இது தேசத் துரோகம் ஆகும். எனவே ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வது உறுதி. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
பலத்த காவல்துறை பாதுகாப்பு
இண்டியா கூட்டணியின் பொதுக் கூட்டத்தை ஒட்டி ராம்லீலா மைதானத் தில் நேற்று 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ஒன்றிய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 1,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மட்டுமே ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த காவல்துற தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதன்படி மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நிறைவுப் பெற்றது.
ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிப்பு
டில்லி ராம்லீலா மைதானத்தை ஒட்டி 8 முக்கிய சந்தைகள் உள்ளன. இண்டியா கூட்டணியின் போராட்டத் தால் இந்த 8 சந்தைகளும் நேற்று (1.11.2026)மூடப்பட்டன. இதனால் சுமார் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
