மீரா ஜெகதீசன் இல்ல மணவிழாவின் அழைப்பிதழே பதில்! மணமக்கள் இலக்கியா –அங்குராஜ் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

- Advertisement -

* ஜாதி ஒழிப்பிற்காக, அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்துத் தண்டனை பெற்ற  அய்யா சபாரத்தினம் –
அவருடைய மகள்தான் மீரா! 
*பெரியார் என்ன செய்தார்?
இந்த இயக்கம் என்ன செய்தது?
என்று கேட்பவர்களுக்கு,
நான்கு தலைமுறையாக பெரியார் கொள்கையில் இருக்கின்ற 

சென்னை, நவ.2   ஜாதி ஒழிப்பிற்காக, அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்துத் தண்டனை பெற்ற அய்யா சபாரத்தினம் – அவருடைய மகள்தான் மீரா! பெரியார் என்ன செய்தார்? பெரியார் இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு, நான்கு தலைமுறையாக பெரியார் கொள்கையில் இருக்கின்ற மீரா ஜெகதீசன் இல்ல மணவிழாவின் அழைப்பிதழே பதில்! என்றார்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மீரா ஜெகதீசன் இல்ல மணவிழா!

கடந்த 25.10.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மீரா  ஜெகதீசன் இல்ல மணவிழாவிற்குத் தலைமை வகித்து, வாழ்த்து ரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள் இலக்கியா –அங்குராஜ்

பேரன்பிற்கும், பெருமரியாதைக்கும் உரியவர்களின் வாழ்த்துகளோடு நடைபெறுகின்ற இந்த மணவிழா – ஒரு குடும்ப விழாவாகும். மணமக்களுக்கு அமைந்துள்ள இப்படிப்பட்ட இந்த அருமையான ஒரு தருணம், வாழ்க்கையில் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும்.

அருமை நண்பர்கள் துரைசாமி – புஷ்பலதா ஆகியோரின் செல்வி இலக்கியா அவர்களுக்கும், அதேபோல, கரூர் பசுபதி பாளையம் அருமை நண்பர் வாசுதேவன் – அன்னபூரணி ஆகியோரின் செல்வன் அங்குராஜ் அவர்களுக்கும் இங்கே நடை பெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்வில் கலந்துகொள்வதில் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

எங்கள் குடும்ப விழா –
நம்முடைய குடும்ப விழா!

இங்கே நம்முடைய கழகத் துணைத் தலைவர் சொன்னதைப்போல, இது எங்கள் குடும்ப விழா – நம்முடைய குடும்ப விழா! குடும்பங்கள் என்று சொல்லும்போது, மூன்று செய்திகளைச் சொல்லவேண்டும்.

அதற்கு முன்பாக, இம்மணவிழாவில் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றிய நம்முடைய திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான த.வீரசேகரன் அவர்களே, மூத்த வழக்குரைஞர் டாக்டர் தியாகராஜன் அவர்களே,

அதேபோல, மேனாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்று சொல்வதைவிட, அமைச்சர் பதவி என்பது வரும், போகும். அது முக்கியமல்ல; ஆனால், எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்ற உரிமையோடு, நாங்கள் அழைக்கவேண்டியவர் அருமை கே.சி.வீரமணி அவர்கள்; இந்தக் குடும்பத்தோடு நெருக்கமாக இருக்கக் கூடியவர்.

பார் கவுன்சிலர் உறுப்பினர் மாரப்பன் அவர்களே, வழக்குரைஞர் மோகனகிருஷ்ணன் அவர்களே, கமலநாதன் அவர்களே, மேனாள் அட்வகேட் ஜெனரல் வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் அவர்களே, பார்கவுன்சில் வழக்குரைஞர் பரதன் அவர்களே, ஏராளமானத் தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய பெயரையும் விளித்தால் நேர மாகும் என்பதால், அனைவரையும் அழைத்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும்.

மணமகன் பெற்றோரைப் பாராட்டுகிறோம்!

இங்கே பாராட்டவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், வாசுதேவன் அவர்களுக்கும், அன்னபூரணி அவர்களுக்கும் நாங்கள் சிறப்புச் செய்தோம். ஏனென்றால், இது அவர்களுக்குப் புது அனுபவம். பெண் வீட்டாருக்கு இது புதிதல்ல. இதிலிருந்து அவர்கள் மாறி செய்தால்தான், அது வித்தியாசமாக இருக்கும்.

இந்தக் குடும்பத்தினருக்கு ஒரு காவலன் போன்ற வன். நானும், என்னுடைய குடும்பத்தினர் அனைவரும். தலைமுறை தலைமுறையான நட்பு பூண்ட குடும்பம் இந்தக் குடும்பம்.

பசுபதிபாளையம், இயக்கத்தினுடைய
வலிமை மிக்க ஒரு பகுதி!

மணமகன் குடும்பத்தினரைப்பற்றிய தக வல்களை எல்லாம் என்னிடம் சொன்னார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மணமகன் குடும்பத்தினர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர்கள். பசுபதிபாளையம், இயக்கத்தினுடைய வலிமை மிக்க ஒரு பெரிய பகுதியாகும்.

இன்னுங்கேட்டால், பெரியார் அய்யாவைத் தண்டித்து, ஆறு மாதம் சிறைச்சாலைக்கு அனுப்பிய வழக்குகளில் ஒன்று, பசுபதிபாளையத்தில் ஏவப்பட்ட, அழிவழக்கு, பொய் வழக்கும் ஒன்றாகும்.

அந்தப் பகுதியிலிருந்து மணமகன் குடும்பத்தி னர் வந்திருக்கிறார்கள். ‘‘இது எங்களுக்கு முதல் அனுபவம்; இதுவரையில், எங்கள் குடும்பத்தில் வைதீக முறையில்தான் மணவிழாக்கள் நடை பெற்று இருக்கிறது’’ என்று சொன்னார்கள்.

சுயமரியாதைத் திருமண முறைக்கு அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். திராவிடர் கழகக் குடும்பம் என்றால், ஒழுக்கமுள்ள குடும்பம் என்று அர்த்தம். நல்ல குடும்பம் என்று அர்த்தம். எந்தவிதமான கவனச்சிதறல்களும் கிடையாது இந்தக் குடும்பத்தி னருக்கு.

ஆகவே, இந்த மணமுறையினை ஒப்புக்கொண்ட மணமகன் குடும்பத்தாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காவது தலைமுறை மணவிழா இது!

இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், இந்த மணவிழா என்பது நான்காவது தலைமுறைக்கு உரியதாகும். இவர்களுடைய தாத்தா சபாரத்தினம். வடசேரியில் பெரிய மிராசுதாரராக இருந்தவர். அவர் ஜில்லா போர்டில் இருந்தார். அதேபோன்று, அவருடைய தாத்தா பெயரைத்தான் துரைசாமி என்று இவருக்கு வைத்திருக்கிறார்கள்.  அந்தத் துரைசாமியின் மகன்தான் ஜெகதீசன் அவர்கள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமாக நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று வரிசையாக வந்து, இப்பொழுது நான்காவது தலைமுறையினருக்கு இம்மணவிழா நடைபெறுகிறது.

அந்த நான்கு தலைமுறையையும் தெரிந்த வனாகிய நான், இங்கே அமர்ந்திருக்கின்றேன் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். தெரிந்தவன் என்பதைவிட பழகியவன் என்று சொல்வதுதான் சிறப்பு. இவர்களுடைய தாத்தாவை, இவர்களுக்குத் தெரிந்ததைவிட, எங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும்.

அரசியலமைப்புச் சட்ட நகலை
எரித்துத் தண்டனை பெற்றவர்
அய்யா சபாரத்தினம்!

ஜாதி ஒழிப்பிற்காக, பெரியார் சொன்னார் என்ப தற்காக, அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்துவிட்டு, அதற்காக தண்டனை பெற்றவர், அந்த வட்டாரமே அதிசயமடைந்தது.  இவருடைய தாத்தா அய்யா சபாரத்தினம் அவர்களுடைய மகள்தான் மீரா. என்னுடைய அருமைத் தங்கை. உடன்பிறந்த தங்கையிடம்கூட நான், அவ்வளவு அதிகமாகப் பழகுவதில்லை. அதிகமான அளவிற்குப் பழகியது தங்கை மீராவிடம்தான்.

எங்கள் வீட்டிற்குத் தங்கை மீரா வந்தால், அதைப் பெருமையாகச் சொல்வோம். ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘வெண்கலக் கடையில் யானைப் புகுந்தது போல!’’ என்று. அதுபோன்று, மீரா வந்தால், எங்கள் இல்லமே கலகலவென்று இருக்கும். எப்பொழு தும் நகைச்சுவையாகப் பேசுபவர் அவர்.

அறக்கட்டளையின்
உறுப்பினராக இருந்தவர் மீரா!

எங்கள் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்த வர். அதற்காக அரும்பாடுபட்டவர். திருச்சியில், 10 நிறுவனங்களுக்கு மேல் நடைபெறுகிறது. அந்நிறு வனங்களை நடத்துவதற்காக, அங்கே சென்று தங்கி, அந்நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைத்தவர்.

தந்தை பெரியாரால், அன்னை மணியம்மையார் அவர்களால் மிகவும் மதிக்கப்பட்ட, ஒரு நெருக்கமான குடும்பம்தான் வடசேரி மிராசுதார் குடும்பமாகும்.

அப்படிப்பட்ட குடும்பத்தில், அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில், 1956 ஆம் ஆண்டு, ராஜகுமாரி – ரங்கநாதன் திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு, மீரா – ஜெகதீசன் ஆகியோருடைய மணவிழா 1965 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

சித்ரா – சரவணன்!

அதற்கடுத்ததாக, அய்யா – அம்மா மறைந்த பிறகு, இவர்களுடைய மூத்த மகளான சித்ரா அவர்கள். 1980 ஆம் ஆண்டு, சித்ரா – சரவணன் மணவிழா நடைபெற்றது. சித்ரா அவர்கள், பெரியார் பார்மசி கல்லூரியில் படித்தவர். நன்றாகப் படித்து, கல்லூரித் தலைவராக இருந்தவர்.  அதேபோன்று சரவணன் அவர்களும்.

சுமதி திருமணம் என்னுடைய தலைமையில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது.

என்னுடைய தலைமையில் நடைபெற்ற
துரைசாமி – புஷ்பலதா மணவிழா!

அதேபோல, 10.11.1995 அன்று, துரைசாமி – புஷ்பலதா மணவிழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

அதற்குப் பிறகு, துரைசாமியின் சகோதரருக்கு என்னுடைய பெயரைத்தான் வைத்தார்கள், வீரமணி  என்று. அவர் கனடாவில் மிகச் சிறப்பாக இருக்கிறார்.  அவருடைய மணவிழாவினையும் நான்தான் நடத்தி வைத்தேன்.

இதற்குப் பிறகு இந்தக் குடும்பத்தில் வரும் தலைமுறையினருக்கும் நான்தான் மணவிழாவினை நடத்தி வைப்பேன். இதை நான் சொல்வது, என்னுடைய பெருமைக்காக அல்ல.

ஏனென்றால், இந்தக் குடும்பம், கொள்கை வழுவாது இருக்கின்ற குடும்பமாகும்.

‘‘நீங்கள் இன்னும் அந்தக் கட்சியில்தான் இருக்கி றீர்களா? இப்பொழுது எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்கக்கூடிய நிலை இல்லை.

இந்தக் கொள்கையினால், இவர்கள் வீழ்ந்துவிட வில்லை, எழுந்து நிற்கிறார்கள்.

நான்கு தலைமுறையாக ஏன் இந்தக் குடும்பம் இந்தக் கொள்கையில் இருக்கிறார்கள்?

தந்தை பெரியார் இல்லை என்றால், இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்குமா? இங்கே வந்திருப்பவர்களில் பலர், இந்தக் கருத்தைக் கேட்பதற்குப் புதியவர்களாக இருக்கலாம்.

பெரியார் என்ன செய்தார்?

இந்த இயக்கம் என்ன செய்தது?

நான்கு தலைமுறையாக ஏன் இந்தக் குடும்பம் இந்தக் கொள்கையில் இருக்கிறார்கள்? என்று நீங்கள் நினைக்கலாம்.

அதற்குப் பதில் என்பது, இந்த மணவிழாவின் அழைப்பிதழே போதும்.

இந்தக் குடும்பத்தவர்கள் படித்திருக்கும் படிப்புகளைப் பாருங்கள்.

சித்ராவினுடைய படிப்பு என்ன?

சரவணன் எம்.ஏ.பி.எல்.

புஷ்பலதா பட்டதாரி.

மணமகன் அவர்கள், ஜெர்மனியில் பணியாற்றக் கூடியவர்.

உலகமே இவர்களுடைய வீட்டிற்குள் இருக்கக் கூடிய அளவில் இருக்கிறது. துரையின் சகோதரர் கனடாவில் இருக்கிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம்மைப் படிக்கக் கூடாத ஜாதி என்று சொன்னார்கள். படிப்பு வராதவர்கள் என்று நம்மைச் சொன்னார்கள்.

ஆனால், வாய்ப்புக் கொடுத்தால், நாங்கள் படித்து முன்னேறி வருவோம் என்று நிரூபித்தோம். யாருக்கும் நாங்கள் பின்தங்கியவர்கள் அல்ல. எங்க ளுக்கு எல்லாவிதமான அறிவும் உண்டு என்று காட்டி, நம்மவர்கள் இன்றைக்குப் படித்து பல உயர் பதவி களுக்கு வந்திருக்கிறார்கள்.

பெரியாரால், ஏதோ ஒரு வகையில் பயன்படாதவர்களே கிடையாது!

அதற்கு இந்தக் குடும்பமே ஒரு சான்று. ஒவ்வொரு குடும்பமும், பெரியாரால் நேரிடையாகப் பயன்பெறவில்லையானாலும், ஏதோ ஒரு வகையில் பயன்பட்டவர்கள்தான்.

மூச்சுக் காற்றான உயிர்க் காற்று, உடலினுள் சென்று வருகிறது என்றால், அது எப்படி வருகிறது? எப்படிப் போகிறது? என்பது தெரியாது. அதனுடைய பெருமை நின்றால்தான் தெரியுமே தவிர, இருக்கும்போது தெரியாது.

உங்கள் எல்லோரையும் வரவேற்று, அவர் உரை யாற்றினார். இன்னொரு வரவேற்புரையை நானும் சொல்லவேண்டும். இந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் எங்களால் ஆளாக்கப்பட்டவர்கள்.

கொள்கை உறவு என்பது,
குருதி உறவைவிட மேலானது!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Blood is thicker than Water என்று. அதைவிட முக்கியமானது எங்கள் கொள்கை உறவு. எனவே, கொள்கை உறவு என்பது, குருதி உறவைவிட மேலானதாகும்.

நம்முடைய துரையைப் பொறுத்தவரையில், அவருக்குத் தெரியாதவர்களே கிடையாது. சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சாதித்துக் காட்டுவார். அவருடைய ஆற்றலை, பார் கவுன்சில் உறுப்பினர்கள் எல்லோரும் நன்றாக அறிவார்கள். அவருடைய பணி எப்படிப்பட்டது என்பதை.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான பிள்ளை அவர். அவரைப் பார்க்கும்பொழுது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!

அவருடைய குடும்பத்திற்கு வந்திருக்கின்ற மருமகன், சிறப்பானவர். மணமகள் இலக்கியா அவர்களும் பி.காம் முடித்துவிட்டு, சி.ஏ. படிப்பை முடிக்கவிருக்கிறார்.

சுயமரியாதைக் கொள்கையை ஏற்றதினால், யாரும் கெட்டுப் போகவில்லை!

ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு, இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? கையெழுத்துப் போடத் தெரியுமா? நம்மவர்களுக்கு. கட்டை வண்டி அச்சாணியில் உள்ள மையைக் கட்டை விரலில் தடவி, கைரேகையை பதிவிட்ட நிலையை மாற்றிக் காட்டியவர்தான் தலைவர் தந்தை பெரியார் ஆவார்.

அந்தப் பெரியாரின் கொள்கையின் வழிவந்த குடும்பத்தினர், இந்தக் கொள்கையை ஏற்றதினால், யாரும் கெட்டுப் போகவில்லை.

இந்த மணவிழாவைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்னாகுமோ, என்னாகுமோ? என்று கவலைப்படவேண்டியதில்லை. நேரம் என்பது, 24 மணிநேரமும் நல்ல நேரமாகும் நமக்கு.

24 மணிநேரத்தில், ராகு காலம், எமகண்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மூடநம்பிக்கை ஒழிந்தால்,
தன்னம்பிக்கைத் தானே வரும்!

இங்கே உள்ள கழகக் குடும்பங்கள் அனைத்தும் பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற குடும்பங்களாகும். மூடநம்பிக்கை கூடாது என்று ஏன் சொல்கிறோம் என்றால், அப்படிப்பட்ட மூடநம்பிக்கை ஒழிந்த நிலை தான் தன்னம்பிக்கையைத் தரும்.

ஆகவே, மணவிழா சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டத்தகுந்ததாகும். குறிப்பாக, மணமகன் பெற்றோர் பாராட்டத்தகுந்தவர்கள்.

மணமக்களே, நீங்கள் சிறப்பாக வாழவேண்டும்.

பெரியார் அவர்கள் சொல்லுவார்கள், இல்லறம் – துறவறம் இருந்ததை மாற்றி, தொண்டறம் என்று சொல்வார்கள்.

அன்பா மணமக்களே, உங்களுக்கு அதிகம்  சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

நீங்கள் வாழ்வில் பெரிய அளவிற்குப் புகழ் பெறுவீர்கள், வளருவீர்கள். நீங்கள் எந்த நிலைக்குச் சென்றாலும், உங்கள் தாய் – தந்தையின் தொண்டை மறக்காதீர்கள். அவர்களிடம் நன்றி காட்டுங்கள். அதுதான் முதல் வேலை.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்!

இரண்டவதாக, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால், உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை;

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!’’

இதை நன்றாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தேர்தலில், யார் அதிகம் வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவர்களை வெற்றி பெற்றவர்கள் என்று சொல்கிறோம். அதேபோன்று, விளையாட்டுப் போட்டியான ஓட்டப் பந்தயத்தில், யார் முதலில் வருகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று சொல்கிறோம்.

ஆனால், அன்பான மணமக்களே, வாழ்வில் ஒருவருக்கொருவர் நீங்கள் போட்டிப் போடவேண்டும். எதற்காகப் போட்டி போடவேண்டும் என்றால், தோல்வியுறுவதற்குப் போட்டிப் போடவேண்டும்.

நீங்கள் ஒருவருக்கொருவர், அவரிடம் நான் தோற்றேன்; என்னிடம் அவர் தோற்றார் என்று இருக்கவேண்டும்.

வாழ்க்கை என்கிற போட்டியில் யாருக்குப் பரிசு?

தோற்றால்தான் பரிசு. வாழ்க்கை என்கிற போட்டியில் யாருக்குப் பரிசு என்றால், தோல்வியுறுபவருக்குத்தான் பரிசு. அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை!

அப்படிப்பட்ட வாழ்க்கையைச் சிறப்பாக வாழுங்கள் என்று கூறி, வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் கூறி, மணமக்கள் இலக்கியா – அங்குராஜ் ஆகியோர் இருவரும் வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *