திரையரங்கில் அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ஒரு தமிழ்த் திரைப்படம், இச் சமூகத்தில் சில அதிர்வுகளையும், சிலருக்கு அதிர்ச்சிகளையும், பல தளங்களில் விவாதங்களையும், கேள்வி களையும் எழுப்பியுள்ளது. அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதிருந்த தவறான பார்வையும், மாற வழிவகுத்துள்ளது.
அத்திரைப்படம் “டோரதி “.
ஜாதிய, மதவாதிகள் இப்படத்திற்கு எதிரான விமர்சனங்களையும், முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள் இதற்கு ஆதரவான விமர்சனங்களையும் கொடுத்து வருகிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் மனிதர்கள்
ஆண் – பெண் என்று எவ்விதமான பாலியல் பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவமாக, சமமாக, உரிமையுடன் நடத்தப்பட வேண்டும், அவர்கள் சுயமாக வாழ, வழிவகைச் செய்யவேண்டும். மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பார்.
அந்த வகையில் பாலினத்தில் இருபாலராக உருவம் மாறி வாழும் திருநங்கைகளும், திருநம்பிகளும் (திருநங்கைகள் என்று பெயர் வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்) இச்சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்பங்கள் அவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, அவர்களின் பாலின மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ தமிழ்த் திரைப்படம் பேசுகிறது.
இப்படம் 1990-களின் (குறிப்பாக 1995 ஆம் ஆண்டு) பின்னணியில் நடைபெறும் கதையாக, பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை கொடுத்துக் கொல்லும் கிராமப்புற தமிழ்நாட்டை (மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்) களமாகக் கொண்டு, அக்காலக் கட்டத்தில் நிலவிய ஜாதியக் கட்டமைப்புகள், வன்முறை மற்றும் ஆணாதிக்கச் சூழலுக்கு மத்தியில் இரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் படத்தின் கதை, சிறு வயதிலிருந்து நண்பர் களாக இணைந்து வாழ்கிறார்கள் கார்த்திக், சுப்பு ஆகிய இருவர். கார்த்திக்கு தந்தை இல்லை, சுப்புவிற்கு தாய் இல்லை.
சுப்புவின் தந்தை அவர் வாழும் கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ப வராகவும், வட்டியையும், அசலையும் கொடுக்காத வர்களை கொடுமைப்படுத்துபவராகவும், ஜாதி பெருமை பேசுபவராகவும், அதைக் கட்டிக் காப்ப வராகவும், அதற்குப் பங்கம் ஏற்பட்டால் கொலை செய்பவராகவும் ஒரு ஜாதி வெறியனாக,விசில் வீரனய்யாவாக இப்படத்தில் வலம் வருகிறார்.
கார்த்திக், சுப்பு இருவரும் சுப்புவின் தந்தை கட்டளையிடும் ஆணை களை ஏற்று, அனைத்துவிதமான ரவுடித்தனங்களையும், அடாவடித்தனங்களையும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுப்புவின் அண்ணன் கேரளத்திலிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவ்வீட்டிற்கு வருகிறார்.
அந்த பெண் தான் டோரதி.
தன் அண்ணி டோரதி தன் இல்லத்திற்கு வந்த பொழுதிலிருத்து, அவரிடம் சுப்பு நெருங்கிப் பழகுகிறார், பேசுகிறார், எல்லாவற்றிக்கும் அண்ணிக்கு உதவியாக இருக்கிறார். டோரதியும் அவருடன் எவ்வித பாகுபாடு இல்லாமல் அன்பு செலுத்துகிறார், தொட்டுப் பேசுகிறார்.இதை தொடர்ந்து பார்த்து கண்காணித்துக் கொண்டு வரும் அவர் தந்தை சந்தேக எண்ணத்துடன் தன் குடும்பத்தின் கவுரவம் இவளால் கெட்டு விடும் என்று கருதி,தன் மகனையும் (டோரதியின் கணவன்) சேர்த்துக் கொண்டு டோரதியை தூக்கிலிட்டு கொலை செய்து விடுகிறான். காவலர்கள் உள்பட அனைவரையும் இது தற்கொலை என்று நம்ப வைக்கிறான்.
டோரதி தூக்கில் தொங்குவதைப்பார்த்து ஏதும் புரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளாகும் சுப்பு, தன் தந்தையும், தன் குடும்பம் தான் இதற்குக் காரணம் என்று உணர்ந்து கொள்கிறான். (இவன் தாயையையும் கொலை செய்து கிணற்றில் வீசியவன் தான் இவன் தந்தை ) ஆனால், அவர்களை எதுவும் செய்யாத நிலையில், அவர்களுக்கு தான் யார் என்ற உண்மையை உணர்த்தும் விதமாக, திடீரென்று வீட்டின் அறையில் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டு, இதனால் வரை தன்மனதில் இருந்த உணர்வுகளையும், தான் என்னவாக வாழும் வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தும் விதமாக, , உணர்வில், உணர்ச்சியில் பெண்ணாகவும், உருவத்தில் ஆணாகவும் இருந்து வாழந்த போலி வேஷத்தை எல்லாம் கழித்து, தாடியை மழித்து, ஆண் உடையை நீக்கி, புடைவை கட்டிக்கொண்டு, வளையல், பொட்டு வைத்துக் கொண்டு பெண் உருவத்தில் வெளியே வருகிறார்.வீட்டைவிட்டு வெளியேறுகிறார் திருநங்கையாக.
(இப்போது தான் நமக்கும் புரியும்,சுப்பு அண்ணி டோரதியுடன் பழகிய நட்பு எத்தகையதென்று! )
ஏற்ெகனவே பெண்கள் மீது கொடூரமான அடக்குமுறை, குடும்ப கவுரவத்தை காக்க, கொலைகள் வரை செய்த இவர்களால், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
குடும்ப கவுரவத்திற்காக எதையும் செய்யும் குடும்பம், இதை பார்த்து சும்மா இருக்குமா. அவன் நண்பன் கார்த்திக்கிடம், இந்த ஊரில் இவனை (இவளை) யாரும் பாரப்பதற்கு முன்பு, நம் குடும்ப கவுரவத்தை காக்க சுப்புவை கொலை செய்ய ஆணை இடுகிறான் சுப்புவின் தந்தை. (அவன் ஆணாக இருக்கும் போது அவன் குடும்பத்தின் கவுரவம் பாழ்படவில்லை. அவன் – அவளாக மாறிய பிறகு குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுகிறது. ஆணின் உளவியலை படம்பிடித்துக் காட்டும் காட்சி )
சிறு வயதிலிருந்து பழகிய தன் உயிர் நண்பனின் இந் நிலையை, அவனாலும் ஏற்க முடியாமல், புரிந்து கொள்ள முடியாமல், தன் நண்பன் சுப்புவைக்
(திருநங்கையை ) கொலை செய்ய புறப்படுகிறான் கார்த்திக்.
தன் நண்பனைக் கொலை செய்தானா? என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
இப்படத்தின் முதல் பாதியில் ஜாதி,பெண், பணம் இதனால் ஏற்படும் கொலைகள், வன்முறைகள் என்று விரிந்து செல்லும் படம், பின்பாதியில் ஒருவர் உடலில் ஏற்படும் மாற்றத்தை,உணர்வை ஏற்காமல்,புரிந்து கொள்ளாமல், இச் சமூகம் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
திருநங்கையாக மாறிய தன் நண்பனை கொலை செய்யஅவளோடு பயணிக்கும் கார்த்திக், கொலைசெய்ய முடியாமல், பயணத்தின் இறுதியில் தனது ஆண் நண்பன் சுப்பு உறுப்பு அறுவை சிகிச்சை செய்து முழுப் பெண்ணாக மாறிய நிலையில் , ஆரம்பத்தில் அவனை ஏற்கமுடியாமல் தவித்த கார்த்தியின் மனம், பிறகுஅவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவள் மீது காதல் கொண்டு அவளையேற்று, இணைவதாகத் திரைப்படம் முடிகிறது.
சுப்பு என்ற ஆண் பெண்ணாக மாறியதால் தான், ஒரு பெண்ணைத் தான் கார்த்திக் ஏற்றான் என்பதை புரியாமல், ஆணுக்கு ஆண் எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று பதறுகிறார்கள் கலாச்சாரப் ‘பாதுகாவலர்கள்!’.
ஜாதி, சடங்கு இல்லாத சுயமரியாதை திருமணங் களையும் ஆரம்பத்தில் ஏற்காமல் குதித்தார்கள்; பிறகு அவை ஏற்று சட்டமாகியது போல், இன்று திருநங்கைகள் திருமணத்தையும் ஏற்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளது.
இருவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இந்து திருமணச் சட்டத்தின் (Hindu Marriage Act, 1955) கீழ் பதிவு செய்யலாம்.
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், சிறப்பு திருமணச் சட்டத்தின் (Special Marriage Act, 1954) கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இதை எதையும் உணராமல் துள்ளிக்குதிக்கிறார்கள் கலாச்சாரப் ‘பாதுகாவலர்கள்’.
அதே போன்று ஒரே பாலினத்தினரும் சேர்ந்து வாழலாம், திருமணம் செய்து கொள்ளத்தான் இந்திய சட்டத்தில் அனுமதியில்லை. உலகில் 35 நாடுகளில் இதற்கும் சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளது.
தந்தை பெரியார் அவர்கள் ‘‘மனிதர்களிடையே ஆண் – பெண் என்று எவ்விதமான பாலியல் பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவமாக, சமமாக, உரிமையுடன் நடத்தப்பட வேண்டும், அவர்கள் சுயமாக வாழ, வழிவகைச் செய்யவேண்டும். மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்’’ என்பார்.
அந்த வகையில் பாலினத்தில் இருபாலராக உருவம் மாறி வாழும் திருநங்கைகளும், திருநம்பிகளும் இச்சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களின் குடும்பங்கள் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் பாலின மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டோரதி என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று பொருள் என்கிறது அகராதி. இந்த கடவுளின் பரிசை, இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்பும் மனித கூட்டம் ஏற்காது. எதையும் பகுத்தறிவோடு அணுகும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிள்ளைகள் நாம் அனைவரும் நாம் டோரதியை வரவேற்போம். மனித உணர்வு களுக்கு மதிப்பளிப்போம்.
அதே போன்று LGBTQ என்று அழைக்கும் அதாவது Lesbian (லெஸ்பியன்) பெண்ணை பெண் விரும்புவது,Gay (கேய்) ஆண், ஆணை விரும்புவது, Bisexual (இருபாலீர்ப்பாளர்), Transgender (திருநங்கைகள் / திருநம்பிகள்), மற்றும் Queer (பால்புதுமையர்) ஆகியோர் களின் உணர்வுகளையும் மதிப்போம். இவை அனைத்தும் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின், இராசாயனங்களின் செயல்பாடுகள் என்ற உண்மையை ஏற்போம்.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ் – (டோரதி) சனந்த் – (சுப்பு) – ரிஷிகாந்த் – (கார்த்தி) கே. முத்துக்குமார் – (விசில் வீரைய்யா) சவுரந்தரராஜா – (கலை) ஜீவா சுப்பிரமணியம் – (திருநங்கை அம்மா) ஆகியோருக்கும், ஒளிப்பதிவாளர் எஸ். திருநாவுக்கரசு (திரு) இதன் தயாரிப்பாளர்கள் மற்றும் டோரதி என்ற உருவதற்கு தன் இசையின் முலம் உயிர் கொடுத்த இசைஞானி இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!
