‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி

7 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தந்தை பெரியார் அவர்களின் 54 வயதில், இவ்வளவு பெரிய ஒரு பயணமா?
அந்தப் பயணங்கள், பயனுள்ள பயணமா? என்றால், தனக்கு மட்டும் பயன் இல்லை
மக்களுக்குப் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய பயணமாக பெரியாருடைய மலேயா பயணம் அமைந்தது!

சிங்கப்பூர், ஆக.20  தந்தை பெரியார் அவர்களின் 54 வயதில், இவ்வளவு பெரிய ஒரு பயணமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாம் திட்டமிட்டு, சில இடங்களுக்குப் பயணம் செய்கிறோம். ஆனால், அந்தப் பயணங்கள், பயனுள்ள பயணமா? என்று பார்க்கும்போது, தனக்கு மட்டும் பயன் இல்லை; மக்களுக்குப் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய ஒரு பயணம் என்கிற வகையில் பெரியாருடைய பயணம் இருந்தது என்றார் முனைவர் சுபாஷினி அவர்கள்.

Contents

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார்.

18.8.2026 அன்று வெளிவந்த அவ்வாய்வுரையின் தொடர்ச்சி வருமாறு:

1.1.1930  ஆண்டின் முதல் நாள்;  சிரம்பான் வரு கிறார். அங்கே,  நகர மண்டபத்தில் ‘‘சுயமரியாதை இயக்கம்’’ என்ற  தலைப்பில் இரண்டு மணி நேரம்  உரையாற்றுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

கட்டுரை

வளைவுகள், மலர் அலங்காரங்கள் எல்லாம் வைத்து  வரவேற்பு கொடுக்கிறார்கள்!

மறுநாள் சிரம்பானிலிருந்து கிளம்பி, கோலாலம்பூர் வருகின்றார். அங்கே அவருக்கு மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆங்காங்கே வளைவுகள், மலர் அலங்காரங்கள் எல்லாம் வைத்து  வரவேற்பு கொடுக்கிறார்கள்.  பொதுமக்கள் சார்பிலும், ஆதிதிராவிட சங்கத்தினர் சார்பிலும், இந்து மகாஜன சங்கத்தார் சார்பிலும் தனித்தனி வாழ்த்து –  வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

 ‘‘சுயமரியாதை இயக்கமும்
இந்து சமயமும்!’’

அதைப் பார்த்து, பெரியார் அவர்கள் சொல்கிறார், ‘‘நீங்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக வந்து வாழ்த்தை எனக்குச் சொல்கிறீர்கள். ஆதிராவிடர் சங்கம் தனியாக வாழ்த்து சொல்கிறார்கள். இந்து மகாஜன சங்கம் தனியாக வாழ்த்து சொல்கிறார்கள். ஜாதியும், சமயமும் உங்களைப் பிரித்து வைத்திருப்பதினால், நீங்கள் எல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறீர்கள்’’ என்கிற ஒரு செய்தியை  அவர் சொல்கிறார். பிறகு, ‘‘சுயமரியாதை இயக்கமும் இந்து சமயமும்’’ என்ற   தலைப்பில், 5000 பேர் இருக்கின்ற அந்த மண்டபத்தில், இரண்டரை மணி நேரம் உரையாற்றுகிறார்.

சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளை
நிறைய செயல்படுத்தியவர்கள்!

அதற்கு பிறகு மறுநாள், அங்கிருந்து காலை எட்டு மணிக்கு, கோலாலம்பூருக்கு வந்து,  மருத்துவச் சங்கத்தை – மருத்துவ சங்கம்  என்றால், முடிவெட்டுபவர்கள்  சமூகம்;  மலேயாவில்,  அந்த சமூகம் அந்தக் காலகட்டத்தில் இருந்தது. இப்போது அந்தப் பிரிவினை என்பது இல்லை. எப்படி சில சங்கங்கள் தெளிவாகப் பிரிந்து, பிரிந்து இருந்தார்களோ, அதே மாதிரி மருத்துவ குல சங்கம் என்று ஒன்று இருந்தது. ஆனால், அவர்கள்தான்  சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளை நிறைய செயல்படுத்தியவர்கள். அது எனக்கே தெரியும்; ஏனென்றால், நான் மலேசியாவில் இருந்த போதே, சில நண்பர்கள் எனது பெற்றோரிடம் வந்து பேசும்போது, எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் அந்த மருத்துவ சங்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த சங்கத்தினுடைய ஓர் அலுவலகத்தை தங்கச் சாவியால்  தந்ைத பெரியார் திறந்து வைக்கிறார்.  ‘தங்கச் சாவி’ கொண்டு திறந்து வைக்கிற அளவுக்கு, வருமானம் இருக்கக்கூடிய ஒரு சமூகமாக அது இருந்திருக்கின்றது என்பதை நாம் பார்க்கிறோம்.

மதியம் வெந்நீர் ஊற்றில் ஒரு குளியல்; பிறகு மாலை 5 மணிக்குத் தேநீர் விருந்து. பிறகு 13 ஆம் தேதி அடுத்த நான்காம் நாள்  கோலாலம்பூருக்கு வருகிறார். அங்கே மேள வாத்தியங்களுடன் வரவேற்பு.  அங்கே ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. ‘இந்து மதம்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையாற்றுகிறார்.

கட்டுரை

 ‘‘பல தெய்வங்கள் – அவற்றின் யோக்கியதைகள்!’’

இரவு ஒரு மணி வரைக்கும் உரையாடிவிட்டு, மறுநாள் வந்து தஞ்சோங் மாலிம் போகிறார். பிறகு அங்கிருந்து  கங்கா குரூட், தெலுக்கான்சன்  என்ற ஊருக்கு வருகிறார். அங்கே ‘‘பல தெய்வங்கள் – அவற்றின் யோக்கியதைகள்’’ என்ற தலைப்பில் உரை யாற்றுகிறார்.

தமிழ் மக்கள் உடல் உழைப்புத்
தொழிலாளர்களாக இருந்தார்கள்!

அதற்கு பிறகு,தெலுக்கான்சன் மேல, ஈப்போ டைப்பிங்க்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு ஊர். அங்கே வந்து எஸ்டேட்டை சுற்றிப் பார்க்கிறார்கள். எஸ்டேட் என்றால், தோட்டப் பாட்டாளிகள் என்று சொல்வார்கள். அதாவது ரப்பர் தோட்டங்கள், செம்மனைத் தோட்டங்கள்.  மலேசியாவிலே மிக முக்கியமானவை இவையெல்லாம். நிறைய தொழிலாளர்கள் அங்கே சென்று, காடுகளை அழித்து, இந்தத் தோட்டங்களை உருவாக்கினார்கள். அந்த மாதிரி தோட்டங்களில், தமிழ் மக்கள் நிறைய பேர் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருந்தார்கள். அங்கே போன பெரியார் அவர்கள், எப்படி அவர்கள் மரத்திலிருந்து பாலை எடுக்கின்றார்கள்? அந்தத் தொழிற்சாலையில் இருந்து பிறகு பாலை எப்படி பக்குவம் செய்து, எப்படி அதை உருவாக்கி எடுக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம்  அவர் போய் பார்க்கிறார். அங்குள்ள மக்களைப் பார்க்கின்றார். பிறகு, அங்கே  ‘‘சுயமரியாதை இயக்கம்’ என்பதைப்பற்றிப் பேசுகிறார். ஏனென்றால், அங்கேதான் இது முக்கிய தேவை என்பதற்காக.

 ‘‘தங்கள் இயக்கம்!’’

கட்டுரை

பிறகு அங்கிருந்து, அடுத்தது, புக்கிட் மர்தாஜம்; அதாவது பினாங்குக்கு அருகில் வருகிறார்கள். அங்கிருந்து  கம்பாருக்குப் போகிறார்கள்.  அங்கே  பல வீடுகளில், உணவுகளை முடித்துவிட்டு, மாலை அய்ந்து மணிக்கு ரயில் நிலையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து, அவரை வரவேற்கிறார்கள். இந்தியர் சங்கத்தின் சார்பில், விளையாட்டு மைதானத்தில் பெரிய நிகழ்ச்சி நடக்கின்றது. அங்கே, ‘‘தங்கள் இயக்கம்’’ என்ற  தலைப்பில்  உரை நிகழ்த்துகிறார். பிறகு அங்கிருந்து, பினாங்கு வருகிறார்.

பினாங்கு வந்த பிறகு, அங்கே நிறைய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒரு இடத்துக்குப் போகிறார். இந்தப் புத்தகத்தில் அது ‘உயிர் ஜந்துக்கள் கல்லூரி’ என்று பதியப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில், ‘பினாங்கு ஜூலாஜிக்கல் கார்டன்’. அது இப்பொழுது இல்லை. 1920 இல்,  மாங்க் என்கிற ஒருவர், அவர் சைனீஸ் மாங்க். காகூம் என்ற பெயர் உள்ளவர்.  அவர்  இந்த விலங்குகள் எல்லாம் இருக்கும் ‘ஜூ’ டைப் – அதுபோன்ற ஒன்றை அவர் உருவாக்கி இருக்கிறார். அங்கு போய், பெரியார் அவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டு வருகின்றார். பினாங்கிலேயே ஒரு மலை இருக்கு. அங்கே ரயில் வண்டி மூலமாக மேலே போகலாம்.  அந்த (1920) காலகட்டத்தில் இருந்தது, அந்த ட்ரெயின். அதில், பெரியார் அவர்கள் பயணம் செய்கின்றார்.  மலைக்குச் சென்று, அங்கே போய் ஓய்வெடுத்துவிட்டு,  இந்திய சங்கக் கூட்டம் நடக்கிறது. அதில், பினாங்கு வருகையினுடைய நோக்கத்தைப் பற்றி பேசுகின்றார்.

கட்டுரை

‘‘மதத்தின் பெயராலும், கோயில்களின் பெயராலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட தீங்கு!’’

மறுநாள் ஒன்பதாம் தேதி, பினாங்கு தீவை இந்த வரைபடத்தில் நீங்கள் பார்க்கலாம். இதுதான் பினாங்கு தீவு. இந்த பினாங்கு தீவைச்  சுற்றிவர வேண்டும் என்றால், ஒன்றரை மணி நேரம் தான் ஆகும். காரில் அவர் அதைப் பார்த்துவிட்டு வந்தார். பிறகு மதிய விருந்து.  பிறகு, ‘‘மதத்தின் பெயராலும், கோயில்களின் பெயராலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட தீங்கு’’ என்ற தலைப்பில்,  ‘கெடா சுங்கை பட்டாணி’யில்   உரையாற்றி இருக்கின்றார். ஆக இப்படி ஒரு ஹெவியான டிராவல்  இருந்ததை நாம் பார்க்கிறோம். அது முடிந்தவுடன், பினாங்கு முடித்துவிட்டார், அதோடு முடிந்தது என்று நாம் பார்த்தோமேயானால், அதுதான் இல்லை. மீண்டும் மெயின் லேண்டுக்குப் போகிறார். மோட்டார் போட்டில்  தைப்பிங் போகிறார். அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றுகிறார். அதை முடித்துவிட்டு, திரும்பவும் பினாங்குக்கு வருகிறார். ஏனென்றால், பினாங்கு வந்தால்தான், அங்கிருந்துதான் இந்தியாவுக்குத் திரும்ப முடியும்.  கப்பல் போக்குவரத்து அங்கேதானே இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டிற்குத் திரும்புவதற்காக அங்கே வருகிறார்.  துறைமுகத்தில்,  பெரிய கூட்டம் திரண்டு வந்து அங்கே காத்திருக்கின்றார்கள்.  அவரை அழைத்துக் கொண்டு வருபவர்,  ‘குடிஅரசு’ ஏட்டினுடைய ஏஜென்ட் மிஸ்டர் நடராஜன்.

தனக்கு மட்டும் பயன் இல்லை; மக்களுக்குப் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய ஒரு பயணம்!

அங்கே மக்களின்  அன்பு  பெரியதாக இருக்கிறது.  பழங்களைக் கூடை கூடையாகக் கொண்டு வருகிறார்கள். தின்பண்டங்களைக் கூடை கூடையாகக் கொண்டு வருகிறார்கள். அதையெல்லாம் தந்தை பெரியாரிடம்  கொடுக்கிறார்கள். இந்த ஆக்டிவிட்டிகளைப்  பார்க்கும் பொழுது, அவங்களுடைய அன்பு பெரிதாகத் தெரிகிறது. 54 வயதில், இவ்வளவு பெரிய ஒரு பயணமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  நாம் திட்டமிட்டு, சில இடங்களுக்குப் பயணம் செய்கிறோம். ஆனால், அந்தப் பயணங்கள், பயனுள்ள பயணமா? என்று பார்க்கும்போது, தனக்கு மட்டும் பயன் இல்லை; மக்களுக்குப் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய ஒரு பயணம் என்கிற வகையில் பெரியாருடைய பயணம் இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம்.

நன்றி, வணக்கம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *