“பழமொழி பர்வதம்மா!”

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நீங்க செஞ்சது வரை போதும்பா!

“என்னை இவ்ளோ உயரத்துக்குக் கொண்டு வந்த மக்களுக்கு நானும் திருப்பிச் செய்யணும்னு நினைக்கிறேன்!” ஓட்டு மீது ஏறி நின்றபடி கூறினான் வேல்கடம்பன் டுஷ்.

கையில் விளக்குமாறோடு வாசல் பெருக்கிக் கொண்டிருந்த பர்வதம்மா நிமிர்ந்து பார்த்தார். “ஒழுங்கு மரியாதையா ஓட்டை உடைக்காமல் கீழ இறங்கி வந்துடு! நீ வேற ஒன்னும் பண்ண வேண்டாம்!” என்று துடைப்பத்தை ரெண்டு தட்டி தட்டி சரி செய்தவாறு எச்சரித்தார்.

“சரி சரி, நான் ஒன்னும் பண்ணல… அதே மாதிரி நீயும் ஒன்னும் பண்ணக் கூடாது!” என்று உறுதி பெற்றுக் கொண்டு கீழே இறங்கினான்.

பெருக்கும் வேலையில் மும்முரமாக இருந்த பர்வதம்மாவிடம், “நான் இந்தச் சமூகத்துக்குத் திரும்பச் செய்யக் கூடாதா? நாளைக்கு நடிகன் ஆனதும், மக்கள் படத்தைப் பார்த்து, என்னை ஆதரிச்சு, அவங்க குடும்பத்தில ஒருத்தனா, அண்ணனா, தம்பியா, மகனா, மச்சானா, மாமனா பார்ப்பாங்க… கோடி கோடியா பணம் சேர்த்து கடற்கரை பக்கத்தில நாலு பங்களா வாங்கி, கல்யாண மண்டபம் கட்டி நான் மட்டும் மகிழ்ச்சியா இருந்தா போதுமா?” என்று அடுக்கினான்.

“சரி!” என்று பொறுமையிழந்தவளாய் ஒரு சொல்லில் நிறுத்தினார் பர்வதம்மா.

“அதனால, இந்த மக்களுக்கு நானும் ஏதாவது செய்யணும்னு எனக்குத் தோணுமில்ல…”

“அதுக்கு?”

“ம்ம்.. அதுக்குத்தான் அப்போ என் ரசிகர்களையெல்லாம் கூட்டி வச்சு, பிரியாணி போட்டு, அங்க இந்த டயலாக்கைப் பேசுவேன். ’என்னை இவ்ளோ உயரத்துக்குக் கொண்டு வந்த மக்களுக்கு நானும் திருப்பிச் செய்யணும்னு நினைக்கிறேன்!’ அப்படின்னு!” மீண்டும் ஒரு முறை ஏற்ற இறக்கத்துடன், கண்கள் பனிக்க அந்த ‘டயலாக்’கைப் பேசினான் வேல்கடம்பன் டுஷ்.

“நடிகனாகணும்னா, அதுக்கு எடுக்க வேண்டிய பயிற்சியெல்லாம் எடுங்க… டயலாக்கெல்லாம் மனப்பாடம் பண்ணுங்க! அதை விட்டுட்டு, நேரா, அந்த டயலாக்குக்குப் போயிட்ட?”

“ஏன், நான்லான் அந்த இடத்துக்குப் போக மாட்டேனா? இந்த வேல்கடம்பன் டுஷ்-ஷோட வளர்ச்சியைத் தடுக்க நினைக்காதீங்க. நான் தனியாள் இல்ல..” பேசிக் கொண்டே போனவனை இடைமறித்து,

“ஆமா… உன்னை மாதிரியே நாலஞ்சு கேசுக கண்ணுல தட்டுப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காணுக!” என்றபடி வாளியைக் கையில் எடுத்துத் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினார் பர்வதம்மா.

“கேசுகளா… பர்வதம்மா… நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும், நான் அந்த உயரத்துக்குப் போகத் தான் போறேன். என்னோட ஒவ்வொரு செங்கலா நானே குழைச்சு, மிதிச்சு, அடுக்கி…”

“சிமிண்டு போட்டு, கலவை கலந்து, காங்கிரீட் போட்டு… ஏண்டா… நடிக்கப் போறியா? கொத்தனாரு வேலைக்குப் போறியா?”

“சும்மா இரு பர்வதம்மா… பன்ச் டயலாக்கைக் கூட முழுசா சொல்ல விட மாட்றியே!” என்று நொந்துகொண்டான்.

“பன்ச் டயலாக்கெல்லாம் இருக்கட்டும். உன் பேரு ஏன் பஞ்சர் ஆன மாதிரி, கடைசியில ‘டுஷ்’ன்னு முடியுது?”

“வேல்கடம்பன் கொஞ்சம் பழைய பேரு மாதிரி இருக்கு. அதுல சினிமாவுக்காக ஒரு டச் வேணுமில்ல… அதனால தான், அப்படி சேர்த்திருக்கேன்!”

“நடிகனாகிறதுக்கு நடிக்கிறதைத் தவிர, மத்த எல்லாத்தையும் செய்யுங்க! நடிக்கிறதை மட்டும் செய்யாதீங்க! ஆமா, நேத்து வெத்தல வாங்கிட்டுவரச் சொல்லி காசு கொடுத்தேனே… மிச்சம் கொடுத்துவிட்டியே கணக்கு சரியா இல்லையே!” என்று ஒரு பக்கமாகத் திரும்பிக் கொண்டு கேட்டாள்.

“அது என் தப்பு இல்ல… கணக்கு சொன்னவன் தப்பா இருக்கும். அதை விடு, நான் பெரிய நடிகனாகி, கோடி கோடியா சம்பாதிச்சு, இந்தச் சமூகத்துக்குத் திரும்ப எதுவும் செய்ய வேண்டாமா?”

நீ இந்தச் சமூகத்துக்குச் செய்யுறதுக்கு எதுக்குப்பா தலையைச் சுத்தி மூக்கைத் தொடுற… இப்பவே சமூகத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்! நடிகனாகி, பிளாக் டிக்கெட் வித்து, கோடிகோடியா சம்பாதிச்சுதான் செய்வியா?” என்று கேட்ட பர்வதம்மா, தனது ஸ்டைலில் ஒரு பழமொழியுடன் அந்த உரையாடலை நிறைவு செய்தாள். “உங்க பூசாரித்தனமும் வேண்டாம். உங்க பொங்கச் சோறும் வேண்டாம்!”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *