நவீன மனித வரலாறு சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தொடங்கு கிறது. அங்கிருந்து இன்று வானளாவிய கட்டடங்கள், வானூர்திப் பயணங்கள், தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு என்று இந்த நிலையை அடைந்துள்ளோம். சமூகமாக இணைந்து பல நூற்றாண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட உலகம் இது. இதற்கு நம்மிடம் இருக்கும் பயிற்றுவிக்கும் திறனும், மூளையின் அதி முக்கியப் பயன்பாடான கவனிக்கும் திறனுமே காரணம். சுற்றுச்சூழலை ஆழ்ந்து கவனித்து, நீண்டகாலப் போக்கில் அவதானித்து, அதன் மூலம் அடுத்த கட்ட ஆய்வுகள் செய்து, இப்படி ஓர் உலகைப் படைத்திருக்கிறோம். அந்தக் கவனமும் அதை தக்கவைக்கும் திறனுமே நம்மை இங்கு கொண்டு வந்த முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.
அப்படியிருக்க, இன்று அந்தக் கவனம் தரிக்கும் நேரம் வெறும் நாற்பத்தியேழு வினாடிகள்தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் நம் சமூகம் எத்தகைய ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்ற கேள்வியும் எழுகிறது.
கவனித்தல் என்பது மூளையின் ஒரு நுண்ணறிவுசார் செயல்பாடு. பல்வேறு தகவல்களுக்கு இடையே ஏதோ ஒன்றை மட்டும் தொடர்ந்து நோக்கும் விழிப்புணர்வுச் செயல். கவனித்தல் ஒரு கற்றல் செயல்பாடாக தொடர்ந்து நிகழும்போது, அது குறிப்பிட்ட விசயத்தில் ஒருவர் தேர்ச்சி பெற உதவுகிறது. கவனித்தல்தான் பரிணாமத்தில் ஆபத்தை உணர்தல், திறம்பட வேட்டையாடல், அறிவுப் பெருக்கம், குழு வாழ்வியல், திட்டமிடல், தொழில்நுட்பம், கலை, படைப்பாக்கம் போன்ற அனைத்திற்கும் வித்திட்டது. இத்தகைய முறையில் பரிணமித்த மூளை, இன்று காட்சிவழி நுகர்வுகள் அதிகரித்த காரணத்தால் அந்தத் திறனை இழந்து வருகிறது. அதாவது, வேட்டையாடல், பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக பல ஆயிரம் ஆண்டுகளாக பழகிய கவனிக்கும் திறன், இப்போது தொடர்ச்சியான காட்சிமூலமான தூண்டுதல்களுக்குப் பழகவில்லை. இத்தகைய தொழில்நுட்ப யுகம் நம் கவனப் பிடிப்புக்கு ஒரு பெரும் சோதனையாக மாறியுள்ளது.
ஏன் கவனம் சிதைகிறது?
மனித மூளை இயல்பாகவே திசைதிருப்பலுக்கு எளிதில் இணங்கக்கூடியது. இது ஒரு பலவீனம் அல்ல. மாறாக, ஆபத்தை உடனடியாகக் கண்டறிய பரிணாமம் நமக்கு அளித்த ஒரு பரிசு. திடீர் ஒலியோ, அசைவோ ஏற்பட்டால், நமது கவனம் நம் விருப்பமின்றியே அங்கு திரும்பும். இதை “orienting response” என்று அழைக்கிறார்கள். இது காடுகளில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு உயிர் காக்கும் ஓர் அமைப்பாக இருந்தது. ஆனால் இதே அமைப்புதான் இன்று அபாயம் எதுவும் இல்லாத போதிலும் திறன்பேசியின் அறிவிப்பான் (Notification) ஒலிக்கும்போதும், திரை மின்னும்போதும் செயல் படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் அணுகுமுறை
முகநூலின் (பேஸ்புக்) முன்னாள் தலைவர் சீன் பார்க்கர் (Sean Parker) பகிரங்கமாக ஒப்புக்கொண்டது என்னவெனில், தங்கள் தளத்தை வடிவமைக்கும்போது, “மனித உளவியலின் ஒரு பலவீனத்தை எப்படி பயன்படுத்திக்கொள்வது” என்பதே முதன்மை கேள்வியாக இருந்ததாகவும், சாத்தியமான அதிகபட்ச நேரத்தையும் நனவான கவனத்தையும் பயனரிடமிருந்து பெறுவதே இலக்காக இருந்ததாகவும் தெரிவித்தார். “முடிவற்ற பயன்பாடு” (infinite scroll) என்ற வடிவமைப்பை உருவாக்கிய ஆசா ராஸ்கின் (Aza Raskin) கூட, பின்னாளில் அது மக்களின் நேரத்தை எவ்வளவு அபகரிக்கிறது என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்.
இதன் அறிவியல் அடிப்படை, உளவியலாளர் பி.எஃப். ஸ்கின்னர் (B.F. Skinner) சூதாட்ட இயந்திரங்களுக்காகக் கண்டறிந்த மாறுபடும் விகித வெகுமதி கோட்பாடு (variable ratio reinforcement) ஆகும். அதாவது எப்போது வெகுமதி கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியாதபோதே, அதை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யத் தூண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் இதே கோட்பாட்டைத் தங்கள் வடிவமைப்புகளில் நேரடியாகப் பயன்படுத்துகின்றன.
இது கவனப் பொருளாதாரத்திற்கு (attention economy) வழிவகுக்கிறது. இந்த நிறுவனங்களின் வருமான மாதிரி – விளம்பரங்களை அடிப்படை யாகக் கொண்டது. அதாவது, தளத்தில் பயனர் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ, அவ்வளவு அதிக விளம்பரங்களைப் பார்க்கிறார், அவ்வளவு அதிக வருமானம் நிறுவனத்திற்குக் கிடைக்கும். எனவே பயனர் ஈடுபாடு (engagement) என்பது வெறும் அளவீடு அல்ல, அதுவே நேரடி வருமான ஆதாரம். இதன் விளைவாக, மனித கவனத்தைத் தக்கவைக்க முடிந்த அளவிற்கு, அந்த நிறுவனத்தின் மதிப்பும் அதிகரிக்கும் என்ற ஒரு பொருளாதார அமைப்பே உருவானது. இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பல, மனித கவனத்தைத் திறம்பட கைப்பற்றி, அதை விளம்பரதாரர்களுக்கு விற்பதன் மூலமே தங்கள் மதிப்பை உருவாக்கியுள்ளன.
டோபமைன்: உயிரியல் அடிப்படை
இந்த அனைத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே ஒரு மூளை வேதிப்பொருள் டோபமைன் ஆகும். பலரும் நினைப்பது போல் இது “மகிழ்ச்சி ஹார்மோன்” என்பதை விட “எதிர்பார்ப்பு ஹார்மோன்”, “புதுமை ஹார்மோன்” எனலாம். ஏதாவது புதிய தாகவும், எதிர்பாராததாகவும் நடக்கும் சாத்தியம் இருக்கும் போதே, வெகுமதி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப் பிலேயே மூளை டோபமைனை வெளியிடுகிறது.
சமூக ஊடகங்கள் இதே கட்டமைப்பை நேரடி யாகப் பயன்படுத்துகின்றன. நாம் ஒரு பதிவிடும் போது, அது எத்தனை பேருக்கு பிடிக்கும், யார் பின்னூட்டமிடுவர், என்பது எதுவும் முன்கூட்டியே தெரியாது. இந்த நிச்சயமற்ற தன்மையே மீண்டும் மீண்டும் அந்தத் செயலினைத் திறக்க வைக்கும் தூண்டுதலாக மாறுகிறது.
இந்தச் சுழற்சி காலப்போக்கில் மூளையின் வெகுமதி வாசலை மாற்றியமைத்துவிடுகிறது. தொடர்ச்சியான தூண்டுதலுக்கு மூளை பழகி விடும் போது, சாதாரண, மெதுவான விசயங்கள் (ஒரு புத்தகம், ஒரு நீண்ட உரையாடல், அமைதியான யோசனை) திருப்தி தராமல், சலிப்பாகத் தோன்றத் தொடங்குகின்றன. இதனால்தான் ஒரு நாவலைப் படிக்க முயற்சிக்கும்போது சில நிமிடங்களில் மனம் திறன்பேசி நோக்கி இழுபடுவதைப் பலரும் உணர்கிறார்கள். மூளை அதிகத் தூண்டுதலுக்கு பழகிவிட்டது, தூண்டுதலைத் தாங்கும் திறனை இழந்துவிட்டது என புரிந்து கொள்ளலாம்.
ஏன் இந்த மாற்றம்?
இதற்குப் பின்னால் இருப்பது வெளியிலிருந்து வரும் ஈர்ப்புகள் மட்டுமல்லாமல் நம் சொந்தப் பழக்கமும் தான். ஆய்வுகள் காட்டுவது என்ன வெனில், மற்றவர்கள் குறுக்கிடுவதை விட, நம்மை நாமே அதிகமாகக் குறுக்கிட்டுக் கொள்கிறோம். அதாவது, யாரும் அழைக்காமலேயே, நாமே திரும்பத் திரும்ப திறன்பேசியை எடுக்கும் ஒரு பழக்கத்தை நம் மூளையே உருவாக்கிக் கொண்டு விட்டது.
ஒருமுறை இந்தப் பழக்கம் வேரூன்றிவிட்டால், ஒவ்வொரு தாவலும் ஓர் எச்சத்தை விட்டுச் செல்கிறது. முந்தைய வேலையின் ஒரு பகுதி மனதில் ஒட்டிக்கொண்டே இருக்கும், அடுத்த வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல் செய்யும். இது கவனத்தை மேலும் கடினமாக்கி, மேலும் தாவ வைக்கும். இது ஒரு தொடர் சுழற்சியாக மாறுகிறது.
இது ஆபத்து என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அறிவு மட்டும் நடத்தையை மாற்றுவ தில்லை, ஏனெனில் புரிதலும் பழக்கமும் மூளையின் வெவ்வேறு பகுதிகளால் இயங்குகின்றன. எனவே தெரிந்தே பலரும் இதே பொறியில் சிக்கி, வெளி யேற வழியின்றி தவிக்கும் நிலை உருவாகிறது.
கவனத்தை மீட்டெடுக்கும் வழிகள்
நல்ல செய்தி என்னவெனில், கவனம் என்பது தசை போன்றது. சரியான பயிற்சியால் அளவிடத் தக்க அளவிற்கு வலுப்படுத்த முடியும் என்று பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
- ஒரே ஒரு பணியை முழுமையாக முடித்துவிட்டு அடுத்ததற்குச் செல்வது, முந்தைய வேலையின் சிந்தனை எச்சம் மனதில் தங்குவதைத் தவிர்க்க உதவும்.
- விஸ்கான்சின் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ரிச்சர்ட் டேவிட்சன், மிகச் சிறிய அளவு கவனப் பயிற்சி கூட மூளையிலும், கவனம் தொடர்பான நடத்தையிலும் அளவிடத் தக்க மாற்றங்களை உருவாக்குவதாக உறுதிப் படுத்துகிறார்.
- ஒரு குறிப்பிட்ட நேரத்தை, குறுக்கீடு இல்லாமல், ஒரே ஒரு பணிக்கு மட்டும் ஒதுக்குவது என்பது ஆராய்ச்சியாளர்களால் பரிந்துரைக்கப்படும் ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான உத்தியாகும்.
- ஹார்வர்ட் வணிக இதழில் வெளியான ஓர் ஆய்வில், வெறும் திறன்பேசி, பார்வையில் இருப்பதே, அறிவாற்றல் திறனைக் குறைப் பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கண்முன் இல்லாத போது மட்டுமே மூளையின் முழு செயல்திறன் கிடைக்கிறது. வெறும் அறிவிப்புகளை அணைப்பதைவிட, அதைப் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவது அதிகப் பலனளிக்கும்.
புதுமைகளுக்கு உடனே திசைதிருப்பும் வகையில் பிழைத்திருப்பதற்காகப் பல ஆண்டு களாக பழக்கப்பட்ட கவனம், இன்றைய செயற்கையான சூழலுக்கு அதே அளவு முக்கியத் துவம் கொடுக்கிறது. இதற்கான தீர்வுகள் இன்னும் முதற்கட்ட ஆய்வு நிலையில் தான் உள்ளன. அரசுகள் பள்ளி மாணவர்களுக்குத் தடை என்ற அளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். சரியான முடிவுகளை எட்டும் வரை நாமே மேற் கண்ட முயற்சிகளை எடுப்பது அவசியம்.
– ப.மகேஸ்வரன்
