கரக்பூர் (உத்தரப்பிரதேசம்), காந்திநகர் (குஜராத்), பம்பாய் (மகாராட்டிரா) அய்.அய்.டி. உயர்கல்வி நிலையங்களில் அறிவுநிலைக் கட்டமைப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கான்பூர் (உத்தரப்பிரதேசம்), மண்டி (இமாசலப் பிரதேசம்) அய்.அய்.டி உயர்நிலை தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களானவை, மனஉணர்வு (Consciousness), மறுபிறப்பு மற்றும் வேத உயிரியல் பற்றி துறைகளில் ‘முன்னெடுக்கும் தலைமை’ப் போக்குடன் செயல்படுவதில் முனைப்பாக உள்ளன.
கடந்த கால பத்தாண்டுகளாக, இந்திய அறிவு நிலைக் கட்டமைப்பு (Indian Knowledge System – IKS) எனும் கல்வித் திட்டத்தின் மூலம் நாட்டின் கடந்தகால நெடிய ‘இந்திய அறிவுநிலையினை’ தேசிய கல்விக் கொள்கை (National Education Policy 2020) உடன் இணைத்திடும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்திய மண் சார்ந்த உண்மையான அறிவாற்றல் வரலாற்றை நிலைநிறுத்தி, ஒரு பண்பாட்டு விழைவினை கல்வித்திட்டத்தோடு உயர்த்திடப் பார்க்க நினைப்பது நியாயமானதே. ஆனால் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘இந்திய அறிவுநிலைக் கட்டமைப்பு’ அப்படிப்பட்டதல்ல.
மொழி பெயர்ப்பாளர் குறிப்பு:
‘டிரோஜன் குதிரை‘ எனும் சொல்லாடல் கிரேக்க புராணக் கதையில் உள்ளது. தனது சுய உருவத்தை காட்டாமல் வேறு ஒரு புறத்தோற்றத்தில் தெரிவதை ‘டிரோஜன் குதிரை’ எனக் குறிப்பிடுவார்கள். கூடுதலாக, இந்த சொல்லாடலில் நடைமுறைப்படுத்திட நினைப்பதை தொடக்கத்தில் வெளிக்காட்டாமல் கருத்தியலை மட்டும் படிப்படியாக செயலுக்குக் கொண்டுவரும் நிலையும் உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலை உள்ளடக்கி, வெளிப்படையாகக் காட்டாமல், உயர்கல்வி நிலையங்களில் கருத்துப்பரவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வித்தளத்தினை காவிமயமாக்கிடும் வகையில் கல்வித் திட்டங்கள் நடைமுறையாக்கப்பட்டு வருவதை அடியிற்கண்ட ஆங்கில மூலக் கட்டுரை விவரிக்கிறது. மூடி மறைத்து, வெளிப்படைத்தன்மை இல்லாமல் கருத்தைப் பரப்பிடும் அணுகுமுறையினைக் குறிப்பிடும் வகையில் ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பு ‘A Trojan horse has breached the IITs’ அமைந்துள்ளது.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துப்பரவல் அணுகுமுறையினை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி, ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய நூல் 2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. மூடிமறைத்து செயல்படுத்தும் அமைப்புமுறை பற்றிய முழு விவரங்களை திராவிடர் கழகம் (இயக்க) வெளியீடாக வந்த நூலினைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
நூல் கிடைக்குமிடம்: பெரியார் புத்தக நிலையம்,
பெரியார் திடல்
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-600 007.
தொலைபேசி: 044 / 2661 8163
நன்கொடை: (குறைந்த அளவு) ரூ.160/- மட்டுமே
நோக்கத்தில், அய்.கே.எஸ் (IKS) அமைப்பானது பாணினியின் மொழிக் கூறுகளையும், நியாய தத்துவப் பள்ளியின் கருத்தியலையும், கேரள கணிதப் பள்ளி பற்றியும், கரியக் கனிம (Wootz Steel) விரிவாக்கத்தையும் பெயரளவில் வலியுறுத்துவதாக இருக்கலாம். ஆனால், அய்.கே.எஸ். கட்டமைப்பானது நிறுவனமயமாக்கப்பட்ட சூழலில் – குறிப்பாக மண்டியிலுள்ள அய்.அய்.டி.யின் இயக்குநர் லட்சுமிதார் பெகராவின் கூற்றுக்கிணங்க, அந்தக் கட்டமைப்பானது ‘புராண அறிவியல்’ பற்றியதாகவே செயல்பட்டு வருகிறது. அதாவது புராணப் புனைவுகளை வரலாறாகக் காட்டுவதிலும், சடங்கு சம்பிரதாயங்களை தொழில் நுட்பமாக்கிடுவதிலும், அறிவியல் அடிப்படையான பரிசோதித்து அறியும் தன்மையே கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது.
அய்.கே.எஸ். கட்டமைப்பின் அதிகமாக அத்துமீறும் அவதாரமானது, தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் உறுதி செய்யப்பட் டுள்ளது. இது உலோகவியல், புராதன கணிதவியல் பற்றிய ஆவணப் பதிவில் உண்மைக்கு மாறான ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்பாகவே வரலாற்றுப் புலமைக்கும் மத அடிப்படையிலான மீட்டுருவாக்கத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு எல்லைகளை அழித்து தெளிவற்ற நிலையினை உருவாக்கிடும் பணிகள் தொடங்கி விட்டது.
அய்,அய்.டி. கரக்பூர், அய்.அய்.டி. காந்திநகர், அய்.அய்.டி. பம்பாய் மற்றும் அய்.அய்.டி. கான்பூர் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இந்த அய்.கே.எஸ். (IKS) முனையம் முனைப்புடன் செயல்படத் தொடங்கி, ‘மன உணர்வு’ பற்றிய ஆராய்ச்சி, ‘மறுபிறப்பு’ மற்றும் ‘வேத உயிரியல்’ துறையில் முன்னெடுத்துச் செல்லும் தலைமை நிறுவனங்களாக தங்களைக் கருதி உறுதிப்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட சொற்றொடரில் உள்ள மேல் குறியீட்டுகளுக்கு (‘ ‘) உட்பட்ட சொற்கள் அய்.கே.எஸ். கட்டமைப்பின் பெயரளவில் உள்ள நோக்கங்களைவிட, செயல்பாட்டளவில் எப்படி உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
போலி அறிவியலை முன்னெடுப்போர்
அய்.கே.எஸ். முனையங்களை முன்னெடுப் பவர்கள் இந்திய மக்களின் மனநிலையினை பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து மீட்டிட முயலுவதாகக் கூறுகிறார்கள். இது கேலிக்குரிய தாகும். 19ஆம் நூற்றாண்டில் வங்காளப் பகுதியில் நடந்த சமூக மறுமலர்ச்சிக்கான முயற்சிகளின் பொழுது ஜெகதீஷ் சந்திரபோஸ், பிரபுல்லா சந்திரா ராய் போன்ற அறிஞர்கள் இந்திய அடையாளத்தை தீவிர அறிவியல் அடிப்படையில் கட்டமைத்திட முனைந்தனர். அந்தக் காலங்களில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுதல் என்பது போலி அறிவியலுக்கு வாசல் கதவை திறப்பதாகாது என தெளிவுபடுத்தினர்.
இந்த அய்.கே.எஸ். முனையங்கள் புராணப் புனைவு அடிப்படையிலான விசாரணையின் மூலம் அய்.அய்.டி. போன்ற உயர் கல்விநிலையங்களை மாற்றிட முயற்சிக்கின்றன. அரசியல் சார்ந்த மதக் கோட்பாட்டினை மரியாதைக்குரிய அறிவியல் ஆக்கி அதன் அடிப்படையில் அய்.அய்.டி. நிலையங்களை அடையாளப்படுத்திட உறுதி பூண்டுள்ளன.
அண்மையில் மண்டி, கான்பூர் ஆகிய இடங்களிலுள்ள அய்.அய்.டி நிலையங்கள் ‘மறுபிறப்பினை அறிவியலாக்கிடும்’ சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் மூளை மின் அலை வரைவுகளுடன் ஜோதிடம் சார்ந்த ஜாதகக் குறிப்புகளின் மூலம் குழந்தைகளின் வாயிலாக அவர்களது ‘முன்பிறவி’ நினைவுகள் என்பதாக கொண்டு வர முனைந்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா – வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் புலனுணர்வு ஆய்வுத் துறையினைச் (Department of Perceptual Studies) சார்ந்தோரை உரை ஆற்றிட அழைத்து ஒரு சர்ச்சைக்குரிய நிலையினை ஏற்படுத்திவிட்டனர். அந்த நிகழ்வு உயர்கல்வித் தளத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ‘போலி அறிவியலானது’ இப்பொழுது திட்டமிட்டபடி ‘உண்மையான’ நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட அய்.அய்.டி. நிலை யங்கள் தங்களது கல்விப்புலன் சார்ந்த மாண்புகளை இறையியல் கோட்பாட்டை வணிகப்படுத்திடு வதற்கு பயன்படுத்திட நினைக்கும் நிலையினைத் தான் காட்டுகிறது.
அந்த அய்.கே.எஸ் – ‘ஆராய்ச்சியாளர்கள்’ வடஇந்தியாவில் ஓர் ஆறுவயது சிறுவனை வைத்து அகிலம் சார்ந்த ஒரு மெய்யியல் கருத்து நிலையை நிலைநிறுத்திட படிப்படியான வழி முறையை உருவாக்கிடும் வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து பேசியுள்ளனர். இந்த வகையான வழிமுறை அமைப்பதை கட்டுக்கதை அளப்பதாகக் கூறுவார்கள்.
ஒரு குழந்தையின் வழியாக நரம்பியல் சார்ந்த வினையாற்றிட வைத்து ‘மறுபிறப்பு’ நம்பிக்கைக்கு உயிரூட்ட முடியும் என்பது இந்திய தத்துவ மரபுக்கே களங்கம் கற்பிக்கக்கூடியதாகும். அவர்களது வழிமுறையானது மாறுபட்டது என்ற நிலையில் முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக அதைத் தூக்கிப் பிடிப்பவர்கள் தங்களிடமுள்ள சிந்தனையை அவர்களுடைய நோக்கத்திற்கு உண்மையாகவும், கவனத்துடனும் கையாளுகின்றார்கள் என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றைக்கு உண்மையை வலியுறுத்திடும் ஆதாரங்கள் பல இருக்கையில் கூட்டாளிகளை வைத்து சொல்லப்படும் ‘ஆராய்ச்சி’யையோ ஒரு பவுதீக பொருண்மையை (EEG) வைத்து மறுபிறப்பு கோட்பாட்டை நம்பத்தகுந்ததாக ஆக்கிட நினைப்பது அற்பத்தனமானது.
அந்த அரிய ஆராய்ச்சியாளர்கள் அந்தக் குழந்தைக்கு முற்பிறவி தொடர்பான தூண்டு தல்களாக – முற்பிறவியில் அந்தக் குழந்தைக்கு வாழ்விணையராக இருந்ததாக ஒருவரது ஒளிப்படத்தைக் காட்டி அதன் விளைவாக மூளையாற்றும் வினைகள் என பதிவிட முனைந்துள்ளனர். அந்தக் குழந்தையுடன் ஒரு சகஜநிலையினை வளர்த்தெடுப்பதையே கூட்டுச் செயலின் வழிமுறை என வரையறை செய்து, முற்பிறவியில் அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் எனக் காட்டிட ஒளிப்படங்களைச் சேகரித்து, பின்னர் அந்த ‘ஆராய்ச்சியாளர்கள்’ பரிசோதனையில் இறங்கியுள்ளனர். அந்தக் கூட்டாளிகள் அடிப்படையில் ஒன்றைக் கண்டு பிடிக்கப் போவதாக மற்றவர்களிடம், ஒருவித மனத்தூண்டுதலை ஏற்படுத்திவிட்டு களம் இறங்கியுள்ளனர். ஆராய்ச்சி என்பது களம் இறங்கி ஒன்றைக் கண்டுபிடித்து களஆய்வின் வழி உறுதி செய்வதாகும். ஆனால் ‘கண்டுபிடிப்பு’ என்பதையே முன்கூட்டியே தீர்மானித்து அதற்கு ஆராய்ச்சி வழிமுறை அமைப்பதற்காக பரிசோதனை என்ற பெயரில் தாங்கள் நினைத்ததை உண்மையான ஆராய்ச்சி வழிமுறைகளுக்குப் பாரபட்சமாக உறுதிசெய்துள்ளனர். இந்த வழிமுறையில் படுமுட் டாள்தனமான ஜோதிடத்தையும் கலந்துள்ளனர்.
அந்த அய்.கே.எஸ். முனையங்கள் தங்களது செயலுக்கு மேற்கத்திய நம்பகத்தன்மையை சேர்த்திட வர்ஜீனியா பல்கலைக்கழக புலனுணர்வு ஆய்வுத் துறை சார்ந்த கல்வியாளர்களைத் துணைக்கு அழைத்துள்ளனர். அந்தப் பல்கலைக்கழகமானது துறை சார்ந்த ஆராய்ச்சி வழிமுறைகளில் ஒருவித நெகிழ்வு அணுகுமுறையினை கடைப்பிடிப்பதில் பிரசித்தி பெற்றது. ஒரு இறப்புக்கும் அதற்குப் பின்னர் ஊகமான மறுபிறப்பிற்கும் இடையிலான இடைவெளியில் ‘முற்பிறவி’ குடும்பத்தினரும் இப்பிறவி குடும்பத்தினரும் சந்திப்பதற்கும், தொடர்பு நிலையினை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கதைகளை கட்டமைப்பதற்கும் நிறைய வாய்ப்பு உள்ள நிலையில், இதற்குப் பொருத்தமாக ஒரு பண்பாடு சார்ந்த மறுபிறப்புக் கோட்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என உண்மையான ஆராய்ச்சி திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த அரிய வகை ‘ஆராய்ச்சியாளர்கள்’ ஒரு உண்மையை பரிசீலிக்கவில்லை – முற்பிறவி நினைவுகள் என்பவை முற்பிறவியில் நம்பிக்கையுள்ள பண்பாட்டுச் சூழலில் மட்டும் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
வலுவான அணுகுமுறை
கல்வி நிலையச் சூழலை மாற்றிட கடந்த பல ஆண்டுகளாக வெளிஆட்களை வைத்து மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டுவது, பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவது என்ற அணுகுமுறையினை ஹிந்துத்துவாதிகள் மாற்ற முனைந்து வந்தனர். இப்பொழுது கல்வி நிலையங்களுக்குள்ளேயே, மேலிருந்து கீழிறக்கும் ஆதிக்க சக்திகளுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் அணுகுமுறையினை மேற்கொண்டு வருகின்றனர். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். அய்.கே.எஸ். முனையங்கள் நடத்திடும் ‘சிறப்பு நிகழ்ச்சியில்’ பங்கேற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த அய்.கே.எஸ். முனையங்கள் அய்.அய்.டி.க்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரத்தையும், ஆராய்ச்சி மாணவர்களை தங்களுக்கான செயல்பாடுகளில் ‘பிசாசு’ போல களம் இறக்கி வருகின்றனர். 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு விதிகளின்படி உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த அய்.கே.எஸ். நடத்திடும் பாடத்தினை கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிலையினை ஏற்படுத்தி விட்டனர். அய்.அய்.டி. நிலையங்களை நிர்வகிக்கின்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் – தங்களால் கல்விநிலையங்களின் மாண்பு சீரழிகின்றது என்பது; ஆனால், அந்த சீரழிவிற்கு உடன்படும் நிலையில் அவர்கள் உள்ளனர். ஏனென்றால் அவர்களது கல்வி இலக்கு உலகார்ந்த அறிவியல் தலைமை சார்ந்ததாக இல்லை. உள்நாட்டு கருத்தியல்களின் ஒருங்கிணைப்புக் கோர்வை மட்டும் தான், அவர்களது இலக்கு.
அய்.அய்.டி. கல்வி நிலையங்களில் பெருகி வரும் போலி அறிவியல் – அழுகல் சூழ்நிலையால், இந்தியாவின் உயர்நிலை திறனாளர்கள் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயிலும் நிலை ஊக்கம் பெற்று வருகிறது. அதேநிலையில் அந்த அய்.அய்.டி. நிலையங்களுக்கு, காலனி ஆதிக்க மீட்புக்கும், அறிவியலுக்கும் உள்ள எல்லைநிலை நன்றாகவே தெரியும். அய்.அய்.டி. நிலையங்கள் நடத்திடும் ‘சிறப்பு நிகழ்ச்சி’களின் தாக்கத்தினால் வழங்கப்படும் அய்.அய்.டி. பட்டங்களை, அறிவார்ந்த பன்னாட்டு அறிவியலாளர்கள் மட்டமாகக் கருதத் தொடங்கிவிட்டனர். அய்.அய்.டி. கல்வி நிலையங்கள் உருவாக்கிடும் பட்டதாரிகள், இன்றைய ஹிந்துத்துவா ஆட்சியாளர்கள் கூறும் ‘ஆத்மநிர்பார்’ விவரிப்பதற்குதான் பயன்படுவார்கள் என்பதுவும் அந்த பன்னாட்டு அறிவியலாளர்களுக்குத் தெரியும். இதனால் உயர்ந்த இந்திய கல்வி எனப்படுவது உலகார்ந்த பகுத்தறிவு நெறிசார்ந்த அறிவியல் தரத்திலிருந்து விலகி நிற்கும் நிலை தொடங்கிவிட்டது. இறுதியாக, இந்திய அறிவாளர்கள் எனப்படுவோர் ‘ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு நாகரிகக் கட்டமைப்பிற்கு’ விசுவாசமாக இருப்பதில்தான் முடிவு செய்யப்படும் நிலை எழுந்துள்ளது. இதனால் நம்நாட்டு வளர்ச்சி வளையத்தின் தடம் மூடப்பட்டு விடும்.
‘தி இந்து’ – 24.06.2026
தமிழில் : வீ.குமரேசன்
