புதுடில்லி, அக். 20– நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், 1990ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகளில் ஒன்றிய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த மாற்றங்களின் பின்னணியில் பெரும் சூழ்ச்சி ஒளிந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அறிவிக்கையின்படி:
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் அமைப்புகளின் ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கலாம்.
மேலும், “வேறெந்த தனி நபர்களையும்” கணக்கெடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இந்த விதி மாற்றத்தைக் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“2027 மக்கள்தொகை கணக் கெடுப்பிற்காக தகுதியான கணக் கெடுப்பாளர்களின் பட்டியலை மோடி அரசு தற்போது விரிவு படுத்தியுள்ளது. இதன் பின்னால் ஒரு பெரும் சூழ்ச்சி மறைந்துள்ளது.
கடந்த ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது தொண்டர்களுக்கு நடத்திய பயிற்சி முகாம் மற்றும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து கருத்துக் கோரிய நிகழ்வையும், இந்த புதிய அறிவிப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இதன் மூலம், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஆயிரக் கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கான ‘வேலைவாய்ப்பு உத்தர வாதத் திட்டமாக’ மாற்றப் பட்டுள்ளது தெளிவாகிறது.
இது ஏற்கெனவே சிதைக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு முறையை மேலும் மோசமாகப் பாதிக்கும். முன்பு நடந்தது போலவே, இம்முறையும் தரவுகள் ஆபத்தான முறையில் திரிக்கப்பட வாய்ப்புள்ளது.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் தீய திட்டங்களுக்கு எல்லையே இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆளும் கட்சி சார்ந்த தொண்டர்களைக் கணக்கெடுப்பாளர்களாக நியமித்துத் தரவுகளில் முறைகேடு செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது
