வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026, வழங்கியுள்ள தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தின் மூலம் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் நலத்திட்ட உதவிகள் முடக்கப்படக் கூடும் என்ற கடுமையான கவலைகள் எழுந்துள்ளன.
2026 மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘‘வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’’ என்பது ஒரு வழக்கமான ஒழுங்குமுறை நடவடிக்கையையும் தாண்டிய ஆபத்தானதாகும். இது மேம்பட்ட வெளிப்படைத்தன்மையையும் தேசியப் பாதுகாப்பையும் நோக்கிய ஒரு நடவடிக்கையாக முன் வைக்கப்பட்டாலும், உண்மையில் இது ஒன்றிய அரசின் நிர்வாகத் தலையீட்டைக் கணிசமாக அதிகரிக்கிறது; இதன் மூலம், வெளிநாட்டு நிதியுதவியைக் கட்டுப்படுத் தும் ஒரு சட்டமாக இருந்த FCRA-வை, அரசு சாரா நிறு வனங்கள் (NGOs), அறக்கட்டளைகள், கல்வி மற்றும் மத நிறுவனங்கள் மீது அரசின் விரிவான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தும் ஒரு கருவியாக இந்தப் புதிய மசோதா மாற்றுகிறது.
அத்துமீறல்
தற்போது நடைமுறையில் இருக்கும் வரும் FCRA சட்டமே, உலகில் உள்ள எந்தவொரு ஜனநாயக நாடுகளிலும் இல்லாத வகையில், குடிமைச் சமூகத்தை மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தும் சட்டங்களில் ஒன்றாக ஏற்ெகனவே இருந்து வருகிறது.
2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் அதில் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
அனைத்து வெளிநாட்டுப் பங்களிப்புகளும் புது டில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஒரே ஒரு குறிப்பிட்ட கிளையின் வழியாக மட்டுமே வர வேண்டும் என்று அச்சட்டம் கட்டாயமாக்கியது, நிர்வாகச் செலவுகளுக்கான உச்சவரம்பை 50% லிருந்து 20% ஆகக் குறைத்தது. சிறிய அமைப்புகளுக்கு நிதி பகிர்ந்து வழங்குவதைத் தடை செய்தது, உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை விரிவுபடுத்தியது போன்ற நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களையும், குறிப்பாக, சிறிய அளவிலான சமயச் சார்புடைய அறக்கட்டளைகளையும் அமைப்புகளையும் கடுமையாக நிலைகுலையச் செய்தன.
ஆனால், 2026 ஆம் ஆண்டின் இந்த புதிய மசோதா இதற்கும் ஒருபடி மேலே சென்றுள்ளது. இந்த மசோதா முந்தைய பிரிவு 15-அய் நீக்கிவிட்டு, புதிய அத்தியாயம் IIIA-வை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தற்போதுள்ள சொத்து மேலாண்மை விதிகளை மாற்றுவதன் மூலமும், அரசு எந்தவொரு இழப்பீடோ அல்லது மேலாண்மைப் பொறுப்போ இன்றி, அமைப்புகளின் சொத்துகள் மற்றும் உடைமைகளை அரசு மிக எளிதாகத் தன் வசம் எடுத்துக்கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறையை உருவாக்குகிறது. புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பிரிவு 14B ஆனது தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவைத் தானாகவே ‘ரத்து செய்யும்’ முறையை அறிமுகப்படுத்துகிறது.
அதாவது, ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மட்டுமன்றி, குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினாலோ அல்லது அதன் புதுப்பித்தல் விண்ணப்பம் அரசின் பரிசீலனையில் நிலுவையில் இருந்தாலோ கூட, அந்நிறுவனம் தனது பதிவை இழக்க நேரிடும். இது நிறுவனங்களின் தவறான செயல்பாட்டை நிரூபிப்பதன் மூலம் அல்லாமல், வெறும் நடைமுறைத் தாமதங்கள் மூலமாகவே அவற்றின் செயல்பாடுகளை முழுமையாக முடக்குவதற்கு வழிவகை செய்கிறது. இதன் விளைவாக, சட்ட நடைமுறை பலவீனப்படுத்தப்பட்டு, நிர்வாக அதிகாரிகளின் விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது.
இந்த மசோதாவின் ஆகப்பெரிய கவலைக்குரிய அம்சம், புதிய அத்தியாயம் IIIA-வின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவு 16A ஆகும். இதன்படி, ஒரு நிறுவனத்தின் FCRA பதிவு ரத்து செய்யப்படும்போதோ, ஒப்படைக்கப்படும்போதோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்போதோ, அனைத்து அந்நியப் பங்களிப்புகளும், அவற்றின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களும், முன்கூட்டியே எந்தவொரு நீதிமன்ற மறுஆய்வோ அல்லது சுதந்திரமான நீதித்துறை விசாரணையோ இன்றி, அரசு நியமிக்கும் அதிகாரியின் வசம் தானாகவே தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு சாதாரண நிர்வாக முடிவின் மூலமே ஓர் அமைப்பு தனது நிதி மற்றும் சொத்துகளின் கட்டுப்பாட்டை இழக்க முடியும்.
பிரிவு 14-இன் கீழ் ரத்துசெய்தல் என்பது பொது நலன் போன்ற பரந்த மற்றும் உள்ளார்ந்த காரணங்களின் அடிப்படையில் அமையலாம் என்பதால், சிறிய, நடைமுறை சார்ந்த அல்லது சர்ச்சைக்குரிய மீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரிவு 14-இன் கீழ் ஒரு பதிவை ரத்து செய்யும் நடவடிக்கை, பிரிவு 16A அமல்படுத்தப்படுவதற்கு வழிவகுப்பதால், நடைமுறை சார்ந்த – சிறிய அல்லது சர்ச்சைக்குரிய மீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் தங்கள் சொத்துகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. அதனைத் தொடர்ந்து, அரசு நியமிக்கும் அதிகாரி அச்சொத்துகளை நிர்வகிக்கவும், மாற்றவும் அல்லது விற்கவும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும், விற்பனை வருவாய் அனைத்தும் இந்தியத் தொகுப்பு நிதியத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த நிபந்தனை அதிகப்படியான அதிகார வரம்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிதி மற்றும் சொத்துகள் இரண்டையுமே உள்ளடக்கி, பல தசாப்தங்களாகக் கட்டப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், மத நிறுவனங்கள், அறக்கட்டளை அமைப்புகள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை இது உருவாக்குகிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அசாதாரணமானவை. ஏனெனில், அதிகார அமைப்பானது சொத்துகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கவும், நிறுவனங்களை நிர்வகிக்கவும், நிதியாதாரங்களைக் கண்காணிக்கவும், மேலும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ள ‘பொது நலம்’ என்ற பெயரில் அவற்றின் அன்றாட செயல்பாடுகளை மாற்றியமைக்கவும் முடியும்.. இதன் மூலம் நிர்வாகத்துறைக்கு அதிகப்படியான தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பதிவைப் புதுப்பிக்கத் தவறினாலோ அல்லது மறுபதிவு பெறத் தவறினாலோ, அந்தப் பதிவு நிரந்தரமாக முடிவடைந்ததாக கருதப்படும். அதனைத் தொடர்ந்து, அந்த அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் அச்சொத்துகளை மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். மேலும், விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், அனைத்தும் முழு வருவாயும் இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் சேர்க்கப்படும். இது, சட்டப்பூர்வ செயல்முறையின் மூலம் நிர்வாக ரீதியிலான சொத்து பறிமுதலுக்கு வழிவகுக்கிறது.
இத்தகைய செயல்பாடுகள், அந்த நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அத்தியாவசியச் சேவைகளையும் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் கூட ஆபத்துக்குள்ளாக்குகிறது. மேலும், நிலம், கட்டடங்கள், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் செலவிடப்படாத நிதி ஆகியவை FCRA சொத்துக்களின் வரம்பிற்குள் அடங்கும் என்பதால், இந்த நிறுவனங்கள் நடைமுறையில் முழுமையாக முடக்கப்படுவதற்கான சூழலையும் உருவாக்குகிறது. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்தியாவில் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு உதவவும், கல்வியை மேம்படுத்தவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மற்றும் பிற பொது நலன் சார்ந்த இலக்குகளை முன்னெடுக்கவுமே இந்திய அறக்கட்டளைகளுக்கு உதவி செய்கின்றனர். இந்தப் பங்களிப்புகள் என்பது தொண்டு நிறுவனங்கள் உறுதியான சமூகப் பலன்களை வழங்குவதற்கு உதவுகின்றன.
பலவீனமான அல்லது சர்ச்சைக்குரிய மற்றும் நிரூபிக்கப்படாத, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களின் நிதிகளைப் பறித்து இந்தியத் தொகுப்பு நிதியத்தில் சேர்ப்பது என்பது, அந்த நன்கொடைகள் அளிக்கப்பட்டதன் அசல் நோக்கத்தையே முழுமையாக சிதைத்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, இந்த புதிய விதிமுறைகள் இந்தியத் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்கள் எந்நேரமும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படலாம் என்ற அச்சத்திற்கு உள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல், நன்கொடையாகப் பெறப்பட்ட நிதிகளையும் மற்றும் அவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களையும் ஒருசேர ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், ஒரு நிறுவனத்தின் பதிவு நிறுத்திவைக்கப்படும் காலத்திலும் விசாரணை நடைபெறும் காலத்திலும், நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டை மேலும் தீவிரப்படுத்துகின்றன. குறிப்பாக, திருத்தப்பட்ட பிரிவு 13, பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள காலத்தில் நிறுவனங்கள் தங்களின் சொத்துகளை முன் அனுமதி இன்றி நிர்வகிப்பதைத் தடை செய்து அதன் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையும் முடக்கிவிடுகிறது. திருத்தப்பட்ட பிரிவு 43இல், FCRA விதிமீறல்கள் குறித்து மாநில முகமை ஏதேனும் விசாரணை நடத்துவதற்கு முன்னதாக ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் மூலம் சட்ட அமலாக்க அதிகாரங்களை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் மய்யப்படுத்தப்படுகிறது.
பொறுப்புணர்வு மற்றும்
வெளிப்படைத்தன்மை குறைதல்
2026 ஆம் ஆண்டின் FCRA திருத்த மசோதா, செயல்படாத அல்லது முடங்கிய நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதைக் கையாளும் இச்சட்டத்தின் தற்போதைய பிரிவு 22-அய் நீக்குவதற்கு இந்த மசோதாவின் திருத்தங்கள் முன்மொழிகின்றன. இந்தச் சட்டத்தில் FCRA உரிமங்கள், அனுமதிகள், பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை அனுமதிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ தெளிவான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.. இது ஒருவித நிச்சயமற்ற தன்மையையும் காலதாமதத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தாமதங்கள் வெளிநாட்டு நிதியை நம்பியிருக்கும் திட்டங்களைப் பெரிதும் பாதிப்பதோடு, பின்தங்கிய விளிம்புநிலைச் சமூகத்தினரையும் கடுமையாக பாதிக்கிறது. பெரும்பாலும், தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணங்கள் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுவதில்லை. இது போன்ற தன்னிச்சையான முடிவுகளை எதிர்த்து நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் போராடுவதை அல்லது மேல்முறையீடு செய்வதை மிகவும் கடினமாக்குகிறது. நடைமுறை ரீதியிலான சிறு தவறுகளுக்காகக் கூட, உரிமங்கள் ரத்து செய்யப்படவோ அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவோ இந்த மசோதா வழிவகை செய்கிறது. இது பொதுமக்களுக்குச் சேவையாற்றி வரும் இத்தகைய நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
சிறுபான்மைச் சமூகங்கள், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் மீதான இந்த மசோதா ஏற்படுத்தும் தாக்கம் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. கி றிஸ்தவ அமைப்புகளானது ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், பழங்குடியினர் நல அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளை நடத்தி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உலகெங்கிலும் உள்ள தேவாலயங்கள், புலம்பெயர்ந்தோர் குழுக்கள் மற்றும் மனிதநேய உதவி அமைப்புகளின் தொடர்ச்சியான நிதி ஆதரவோடுதான் இயங்கி வருகின்றன. கேரளம், தமிழ்நாடு, நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இது போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன..
சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு அமைப்புகள், பெரும்பாலும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கே பயனளிக்கின்றன என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். புதிய பிரிவு 16A-இன் கீழ், இந்த அமைப்புகளின் பதிவுக்காலம் முடிவடைந்தாலோ, புதுப்பித்தல் தாமதமானாலோ அல்லது உரிம ரத்து நடைமுறைகள் தொடங்கப்பட்டாலோ கூட, அவை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படக்கூடும் என்ற சூழலை எதிர்கொள்ள நேரிடும். நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளிகள், கல்லூரிகள், மிஷன் மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற நிறுவனங்கள், மிக எளிதாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் பேராபத்தை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, அரசாங்கம் திட்டமிட்டே அடுத்தடுத்த நிறுவனங்களைக் குறிவைத்து வருகிறது. 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், எந்தவொரு முறையான அல்லது நம்பகமான காரணங்களும் இன்றி சுமார் 22,000 FCRA உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது மறுக்க முடியாத நிதர்சனம் ஆகும். சிறுபான்மையினர் நடத்தும், உண்மையில் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கே பெருமளவில் பயன்பட்டு வருகின்ற இத்தகைய நிறுவனங்களின் சொத்துகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே அரசாங்கம் குறிவைக்கிறதோ என்ற கவலையை இந்த திருத்த மசோதா எழுப்புகிறது.
FCRA உரிமங்கள் ரத்து செய்யப்படுவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் தொடர் முயற்சிகளான குழந்தைப் பாதுகாப்பு, தடுப்பூசி செலுத்துதல், மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியம், ஊட்டச்சத்து, ஆரம்பக் கல்வி கற்றல், பெற்றோர் பங்களிப்பு, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் அரசு திட்டங்களை கொண்டு சேர்க்கும் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு அமைப்பின் மூலமும் பயனடைந்து வந்த சுமார் நான்கு முதல் எட்டு லட்சம் வரையிலான தனிநபர்கள் அத்தியாவசிய சேவைகளைப் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர்.
இந்த மசோதாவை குடிமைச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் நிறுவனங்களுக்கும் விரிக்கப்பட்டுள்ள ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவே விமர்சகர்கள் பார்க்கின்றார்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தெளிவற்ற “பொதுநலன்” என்ற அளவுகோல், சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடியினர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பொது மக்களுக்கான ஆதரவுத் தளங்களில் பணியாற்றும் அமைப்புகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, நன்கொடையாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என எவரும் இத்தகைய அமைப்புகளுக்குத் தங்களது ஆதரவை வழங்க முன்வராமல் பின்வாங்கும் நிலை உருவாகக்கூடும்.
இந்த மசோதா நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்றும் 300A ஆகியவற்றின் கீழ் குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த கேள்விகளையும் கவலைகளையும் எழுப்புகிறது. நிர்வாகத்தில் வரம்பற்ற அதிகாரங்களை குவித்து வைப்பதன் மூலம், குழுமங்களின் சங்கம் அமைக்கும் சுதந்திரம், மத மற்றும் கல்வி நிறுவனங்களின் சுயாட்சி தன்மை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை முற்றிலுமாகச் சிதைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளை முறைப்படுத்தும் எந்தவொரு ஒழுங்குமுறையும், முறையான சட்டச் செயல்முறை, சுதந்திரமான மேற்பார்வை மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும். இத்தகைய சட்டப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத பட்சத்தில், இந்த மசோதா நவீன இந்தியாவின் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய மிகக் கடுமையான, ஒடுக்குமுறைச் சட்டங்களில் ஒன்றாக மாறிவிடும் போக்கைக் கொண்டுள்ளது.
நன்றி: ‘தி இந்து’ 12.6.2026
