
“ஏம்ப்பா குழலி… பெரியாருக்கு யுனெஸ்கோ மன்ற விருது கொடுத்ததுன்னு நாம படிச்சதைப் பொய்யிங்குற மாதிரி ஒரு பத்திரிகையில் எழுதியிருக்காங்களே… என்னப்பா சமாச்சாரம்?” என்றார் கதிரவன்.
“அவா ‘லோக குரு’, ‘விஸ்வ குரு’ன்னு பட்டம் கொடுத்துக்குறாங்களே… அதெல்லாம் யாரு கொடுத்ததுன்னு அவா கிட்ட பதில் இருக்கா? அவா அளந்து கொட்டுற புராணப் புளுகுகள், மந்திர தந்திர வித்தைகள், வேத இதிகாசப் புரட்டுகள் இதில எதுக்காவது ஆதாரம் உண்டா? சொல்லுங்காணும்” என்று பதில் கேள்வி கேட்டாள் குழலி.
“நீ என்னப்பா அவா மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட! அவங்க என்னைக்குப்பா அதெல்லாம் சொல்லிருக்காங்க! நாங்க சொன்னா நம்பணும்னு காலங்காலமா சொல்லி வச்சவங்க… எதிர்த்துக் கேள்வியெல்லாம் கேட்க முடியாது” என்று சொல்லிச் சிரித்தார் கதிரவன்.
“ஆனால், நாம ஆதாரத்தோட எதைச் சொன்னாலும், அதை மறைக்கத் திரும்பத் திரும்பத் தங்களோட பிரச்சார வலிமையைப் பயன்படுத்துறதுதான் ஆரியத்தோட நடைமுறை” என்றாள் குழலி.
“அதை உடைக்கிறது தானேப்பா திராவிடத்தோட அணுகுமுறை. நீ விசயத்தைச் சொல்லு. உண்மையை நம்ம எல்லோருக்கும் கொண்டுபோவோம்!” என்றார் கதிரவன்.
“சரி, சொல்றேன். அய்க்கிய நாடுகள் அவையோட, கல்வி மேம்பாட்டுக்கான அமைப்புதான், அய்க்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு. அதை ‘யுனெஸ்கோ’ன்னு சொல்வாங்க. அவங்க உலகம் முழுக்க அதன் செயல்பாடுகளைக் கொண்டு போற மாதிரி, அதன் நட்பு அமைப்புகளை உருவாக்கினாங்க. யுனெஸ்கோ கிளப்-ங்கிற பெயரில் அப்படி அமைப்புகள் உலகம் முழுக்க இருக்கு! தமிழ்நாட்டில் அப்படி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் “யுனெஸ்கோ மன்றம்”. அந்த அமைப்பு தொடங்கப்பட்டிருந்த சமயம், 1970-ஆம் ஆண்டை கல்வி ஆண்டாகக் கொண்டாடியது அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு” என்று விளக்கத் தொடங்கினாள் குழலி.
“ஓ… அதனால தான் கல்வி தொடர்பாக அந்த விழா நடந்துச்சா?”
“ஆமாம், யுனெஸ்கோவோட முன்னெடுப்பில், உலகம் முழுக்க இருந்த அதன் யுனெஸ்கோ கிளப் (மன்றம்) அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தினாங்க. தமிழ்நாட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கல்வித் துறையிலும், அறிவியல் துறையிலும் சிறந்து விளங்குனவங்களுக்கு விருதுகள் கொடுத்துச் சிறப்பிச்சாங்க. அதில் நூலகத் துறையைச் சார்ந்தவர்களுக்கு, கிண்டியில் இருக்கிற கிங்ஸ் ஆய்வு நிறுவனத்துக்கு, கல்வித் துறையில் சாதனை பண்ண பலருக்கும் விருது கொடுத்தாங்க!
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு, அறிவியல் சிந்தனைக்கு அடிப்படையா இருந்த தந்தை பெரியாருக்கு சிறப்பு செய்யணும்னு முடிவு பண்ணித்தான், “புத்துலகத் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று குறிப்பிட்டு, பெரியாருக்கு விருது கொடுத்தாங்க!”
“ஆமா… அந்த விருதைக் கூட நம்ம பெரியார் திடல்ல இருக்கிற பெரியார் அருங்காட்சியகத்தில் பார்த்திருக்கிறோமே!” நினைவுகூர்ந்தார் கதிரவன்.
“அதே தான். கண்ணுக்கு முன்னாடி, அவருக்குக் கொடுத்த விருதே இருந்தும் அதை மறுக்கிறாங்க. அதான் ஆரியம்!”
“ஆனால், அந்த விருது ஏதோ தி.மு.க. கொடுத்த மாதிரி சொல்லி பரப்புறாங்களே?” என்று சந்தேகம் எழுப்பினார் கதிரவன்.
“அந்த விருது வழங்கும் நிகழ்வு ஓர் அரசு முயற்சியாலயும், யுனெஸ்கோவோட முன்னெடுப்பாலேயும் உருவான யுனெஸ்கோ மன்றத்தால் நடத்தப்பட்டது. அதில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மட்டுமில்ல… அப்போதைய ஒன்றிய அமைச்சர்களாக இருந்த டாக்டர் திரிகுண சென், திரு.ஷேர் சிங்ன்னு ரெண்டு பேரும் கலந்துக்கிட்டாங்க.
நீ விருது கொடுக்கிற அந்தப் படம் பார்த் திருக்கியில்ல….’’ என்றால், குழலி.
இணையத்தில் தேடி ஒரு படத்தை எடுத்தார் கதிரவன்.
‘‘கலைஞர் மட்டும்தான் குடுக்கிற மாதிரி இருக்கு?’’
மீண்டும் சந்தேகம் எழுப்பினார் கதிரவன்.
‘‘ஆமா, இதுதான் சங்கிகள் வெட்டிப் போட்ட பாதிப் படம்! முழுப் படம் இதோ இருக்கு பாரு…
அதில் கலைஞரும் இருப்பார்; இன்னொருத்தரும் கூட இருப்பார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கின அவரு யாருன்னா… வங்காளத்தைச் சேர்ந்த கல்வியாளரும், ஒன்றிய கல்வி அமைச்சரா இருந்து, இந்த முன்னெடுப்புக்கு ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தவருமான டாக்டர் திரிகுணசென் தான். பின்னாளில் அவர் அமைச்சரவை மாற்றத்தில் வேறு துறைக்குப் பொறுப்பேற்றாலும், அவர் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு சிறப்பு செஞ்சவங்களில் ஒருத்தர். அந்த நிகழ்ச்சியில தமிழ்நாடு அரசுடைய அன்றைய தலைமைச் செயலாளர் உள்பட பல அரசு அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க. சென்னையில இருக்கிற ராஜாஜி ஹால்ல, 1970 ஜூன் 27 அன்று தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் என்ற முறையில், கலைஞர் அந்த விருதைப் பெரியார் கையில கொடுத்தாரே தவிர, தி.மு.க. தலைவராக அல்ல’’ என்றாள் குழலி
“இப்படி ஒன்றிய அமைச்சர்களும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் கலந்துகிட்டு நடந்த நிகழ்ச்சியைத் தான், ஏதோ தி.மு.க நடத்தின நிகழ்ச்சி மாதிரி பொய்யா கட்டமைக்கிறாங்களா?” கோபப்பட்டார் கதிரவன்.
“என்ன செய்யுறது… இவங்களுக்கு வரலாறும் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதைத் தங்களுக்கேற்ற மாதிரி மறைச்சுடுவாங்க! அந்த விழாவில பேசிய பெரியார், என்னை ரொம்பப் புகழ்ந்தாங்க.. அதையெல்லாம் நான் ஏத்துக்கிறேனோ இல்லையோ… ஆனால், அதில் சொன்ன கடைசி வரியான ‘அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்ற வரியை மட்டும் முழுமையா ஏத்துக்கிறேன்னு பேசினாரு! இவ்வளவு செய்தி இருக்கு இதுக்குப் பின்னால!”
“அது சரி, ஆனால், அய்.நா.வின் யுனெஸ்கோவோட அப்படியென்ன தமிழ்நாட்டுக்குத் தொடர்பு? இப்படி யுனெஸ்கோ மன்றம் இருந்ததே யுனெஸ்கோவுக்குத் தெரியாதுன்னு மொத்தமா காலி பண்றாங்களே” என்று திடீரென புது சந்தேகத்தைக் கிளப்பினார் கதிரவன்.
“அப்படிக் கேளு கதிரவா… அதுதான் முக்கியமான கேள்வி! தமிழ்நாடுன்னு ஒன்னு இருக்கிறதாவது யுனெஸ்கோவுக்குத் தெரியும்னு ஒத்துக்குவாங்களா?” என்று பதிலைக் கிண்டலாகப் பதிவு செய்தாள் குழலி.
“ஹஹஹ…. இல்லைன்னு சொன்னாலும் சொல்வாங்க!” என்று சத்தமாகச் சிரித்துவிட்டார் கதிரவன்.
“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புராணப் பெருமக்கள் தானே அந்த சங்கிக் கும்பல்! போகட்டும்!
அய்.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து ‘யுனெஸ்கோ கூரியர்’ன்னு ஒரு பத்திரிகை வந்ததே… அது எப்போ தமிழ்ல வந்தது. யாரோட முயற்சியில வந்ததுன்னு அந்த கருமாதிப் பத்திரிகைக்குத் தெரியுமா? அதெல்லாம் தெரிஞ்சா தமிழ்நாட்டுக்கும், யுனெஸ்கோவுக்குமான தொடர்பு தெரியும்” என்று சுளீரென்று பதிலிறுத்தாள் குழலி.
ஒரு விநாடி எதையோ யோசித்தவளாக “இன்னொரு விசயம் சொல்லவா? இந்த விருதுனால தான் பெரியாருக்குப் பெருமையா? இதனால அவருக்கு எதாவது பயனுண்டா? எந்தப் பட்டமும், புகழும், பதவியும் எதிர்பார்க்காம பொது வாழ்க்கைக்கு வந்தவரு அவரு. யாரு சொன்னாலும் சொல்லாட்டியும், இந்த விருதுல சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு சொல்லும் பெரியாரைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும், சொல்லு!” என்று சொல்லும்போதே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாள் குழலி.
“பொய்ய்ன்னு தெரிஞ்சே சொல்றவங்களுக்கு இதையெல்லாம் புரிஞ்சுக்கிற அறிவு இருக்குமா? ஆனால், இந்தக் குழப்பத்தில இருக்கிறவங்களுக்கு சந்தேகத்தைப் போக்க வேண்டியது நம்ம கடமையாச்சே! அதுக்காகத் தான் கேட்டேன்.” என்று சொன்ன கதிரவன், சடாரென ஒரு யோசனை வந்தவனாக, “நான் இதை வைச்சு ஒரு ரீல்ஸ் ரெடி பண்றேன். நம்ம ரெண்டு பேருமே அதில் பேசுவோம்.. ஓகேவா?” என்று செல்பேசியை எடுத்தான்.
“இன்றைய இளைஞர்களுக்கு அதுதானே எளிமையா போய்ச் சேரும். பொய் சேர்வதற்கு முன்னால, நாம உண்மையைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் வா!” என்று தயாரானாள் குழலி.
– சமா
