ஆசிரியர் கி.வீரமணி எழுதிய, “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் விமர்சனம்!

ஆலடி எழில்வாணன்

கட்டுரை

ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் நடக்கும் ஓர் உளவியல் போர், கருத்துப் போர், அனுகூலப் போர் எனப் பல வகைகளில் நாம் உணர்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். அடிப்படை மற்றும் ஆரிய சித்தாந்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலுக்கு ஒரு வழியாகவும், தெளிவாகவும், கையேடாகவும் இருக்கிறது இந்த நூல்.

நமது மானமிகு ஆசிரியர் இத்தனை வயதிலும் திராவிட இனத்திற்காக, தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார், எழுதுகிறார். பல்வேறு வகைகளில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் முக்கிய யுக்தியாக இருப்பது எழுதுவதும், பேசுவதும், கருத்தரங்கங்கள் வழியாகப் பிரச்சாரம் செய்வதும் ஆகும்.

டிராயை வீழ்த்திய டிரோஜன் குதிரை

நூலின் தலைப்பே நம்மை ஈர்க்கிறது.  “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” எனும் இரண்டு முக்கிய சொல்லாடல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம். 750 BC காலக்கட்டத்தில் கிரேக்கர்களுக்கும், டிராய் தேசத்திற்கும் போர் நடந்த காலம் அது. மாபெரும் அரசான கிரேக்கம், டிராயை வீழ்த்த முடியாமல் தவித்தது. அதற்கு முக்கியக் காரணம், டிராய் தேசத்தின் தலைநகரைச் சுற்றி, பெரியதொரு மதில் சுவர் எழுப்பிப் பாதுகாத்து வந்தனர். பத்து ஆண்டுகள் போராடியும் இதைத் தகர்க்க முடியாமல் தோல்வியுற்றார்கள். வீரத்தால் வீழ்த்த முடியாத ஒரு தேசத்தைக் குறுக்கு வழியில் அறம் பிறழ்ந்து வீழ்த்தத் திட்டமிட்டர்கள் கிரேக்கர்கள்..

ஒரு மரக் குதிரையை சமாதானப் பரிசாக, அன்பின் பரிசாக, இரு நாடுகளுக்கும் ஒரு அமைதி உறவு ஏற்பட்டு விட்டது என்று பறைசாற்றும் வகையில், கிரேக்கர்கள் டிராய் தேசத்திற்கு அன்பளிப்பாக அனுப்பியதுதான் Trojan Horse எனும் மரக்குதிரை. அதன்படியே மகிழ்ச்சியோடு அந்த டிரோஜன் குதிரையை  டிராய் மக்கள் மகிழ்சசியோடு உள்ளே வரவேற்றார்கள். ஆனால் அந்த மரக்குதிரைக்கு உள்ளே பல போர் வீரர்களை ஒளிந்திருந்தனர். அன்று இரவே டிராய் சூழ்ச்சிக்கு வீழ்த்தப்பட்டது. எதிரியை நம்பி வீழ்ந்த பல சாம்ராஜ்யங்களில் டிராயும் ஒன்று என்பதை வரலாறு சொல்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு

நூறாண்டைக் கடந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அமைப்பும் இல்லாமல், இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜகவின் பின்புலமாகவும், அடித்தளமாகவும், தாய் அமைப்பாக இருக்கும் ஒரு இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பு.

சத்ரபதி சிவாஜி அரசாட்சியில் சிவாஜியின் அரசவைக்கும், அவரது குறுநில மன்னர்களுக்கும் இடையே தூதுவர்களாகவும், ஒற்றர்களாகவும் இருந்தவர்கள் தான் மகாராட்டிரா பகுதியைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள். சித்பவன் பிராமணர்கள் ஆங்கிலேயரிடமும் தூதுவராக, ஒற்றராக செயல்பட்டனர்.

‘டிரோஜன் குதிரை’ போன்றே சூழ்ச்சி செய்து மறைந்திருந்து தாக்கும், அதிகாரத்துக்கு அருகாமையில் இருந்து தங்கள் அதிகாரத்தை உள்ளே நுழைக்கும் யுக்தி உடைய இந்த சித்பவன் பிராமணத்தின் நோக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம். இன்றும் சித்பவன் பிராமணர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.-சின் தலைவர்களாக இருக்கக்கூடிய சூழல் இருப்பதை இந்த நூலின் வாயிலாக நாம் வாசிக்கும் போது வரலாறு திரும்புகிறது என உணரலாம்.

அன்று ‘டிரோஜன் குதிரை’ வடிவில் டிராய் தேசத்தை வீழ்த்திய அதிகாரம், இன்று ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரில் இந்தியாவை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இன்னும் அவர்களை உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

“ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் பல பதிப்புகளைக் கடந்துள்ளது. இன்று இடதுசாரிகளில் பலர் விரும்பி வாசிக்கும் நூல் இது. சுமார் 13 அத்தியாயங்களில், 170 பக்கங்களில் அழகாகக் கட்டமைத்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறப்பான தலைப்பைக் கொடுத்து கட்டமைத்துள்ளார் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஆரிய சித்தாந்தத்தை புகுத்தி

இந்துத்துவாவினர் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போது எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்றால், ஒரு பக்கம் ஆங்கிலேயர்களுக்குக் கைக்கூலியாகவும், இன்னொரு பக்கம் காங்கிரசினருடன் ஊடுருவி, இந்து- முஸ்லிம் வேறுபாட்டை உருவாக்கி, ஸநாதனம் வழியாக அங்கேயே ஆரிய சித்தாந்தத்தைப் புகுத்தி உள்ளார்கள். மேலும், அம்பேத்கர் செல்வாக்கு அடையாமல் இருக்கும் வகையில், தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் ஒடுக்கும் நோக்கில் செயல்பட்டு இருக்கிறார்கள் என்று வாசிக்கும் போது, ஆசிரியரின் சமூக அக்கறை ஆழமான வரலாற்று புரிதல் வெளிப்படுகிறது.

இன்று எப்படி அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் அம்பேத்கரைக் கையில் எடுக்கிறார்களோ, அதே போல அந்நாட்களில் ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் தடுக்க காந்தியையும், காங்கிரஸையும் அம்பேத்கர் பேசியதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாதுரியம் பிராமணர்களுக்கே உரித்தான ஒரு குணாதிசயம் என்பதை இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்கள் நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது.

குறிப்பாக, ‘RSS and making of deep nation’ என்று தினேஷ் நாராயணன் எழுதிய நூலிலிருந்து பல்வேறு சான்றுகளைத் தமிழாக்கம் செய்து பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

சமூக நீதிக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ். அதை அவர்கள் வெளிப்படையாக, ஆதரிக்காமல் நேரடியாக எதிர்க்காமல், அழகாக முலாம் பூசி, வார்த்தைகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் விளையாடியதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

தீனதயாளன், உபாதையா மற்றும் இன்றைய தலைவரான மோகன் பாகவத் எல்லாம் இதற்கு விதிவிலக்கு அல்ல.

அதேபோல, நாடு போற்றும் முற்போக்குச் சிந்தனையாகக் கட்டமைக்கப்பட்ட விவேகானந்தரும் ஒரு பிற்போக்குவாதி, அடிப்படைவாதி, பழைமைவாதி, ஜாதிய சிந்தனை உடையவர் என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

ஒடுக்குமுறை ஆதிக்கம்

இந்நூலில் அய்ந்தாவது அத்தியாயமான சுதேசி – பார்ப்பன பனியா கூட்டுக் கம்பெனி என்ற ஒரு அத்தியாயம் என்னை வெகுவாக ஈர்த்தது. அதனை வாசித்து முடித்தவுடன், இப்படியும் செயல்படுவார்களா ஆர்.எஸ்.எஸ்.-சினர் என்பதை நமக்கு பிடரியில் அடித்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்.

குறிப்பாக, பன்வர் மேகவன்ஷி,  அவர் எழுதிய, “I could not be hindu, the story of Dalit and RSS” என்ற ஒரு அனுபவ நூலை மிக அழகாக சுருக்கமாகவும், நமக்கு எளிமையாகவும், வலிமையாகவும், ஒடுக்குமுறை ஆதிக்கம் என்றால் அது ஆர்.எஸ்.எஸ். தான் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த நூல் இருக்கும்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பன்வர் மேகவன்சி, பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.-இன் பிடியில் இறுகச் சிக்கிக்கொண்டு, அறியாமை என்னும் திரை அவரைக் கண்கட்டிய குதிரை போல ஒருமுகத்தன்மையோடு செயல்பட வைத்ததையும், பின்னாளில் எல்லா பட்டியலினத்து மக்களுக்கும் ஏற்படுவதைப் போல, ஓர் உணவு பரிமாறும் விஷயத்தில் அவரை எப்படிக் கேவலப்படுத்தி, உதாசீனப்படுத்தி, அவரது சமுதாயத்தை சுட்டிக்காட்டி அவரை அவமதிக்கையில், இத்தனை ஆண்டுகளாக நான் நம்பி இருந்த இந்தியா – இந்து – ராமன் கோவில், போன்ற விஷயங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்ததை பன்வார் மேகவன்சியின் அனுபவத்தை வாசிக்கும் போது நூறாண்டுகள் கடந்தாலும் இவர்கள் துளி அளவும் திருந்தவில்லை என்பதை இந்த அத்தியாயம் நமக்குக் கற்பிக்கும் முக்கியப் பாடமாகும்.

“எல்லோரும் இந்துக்கள், ‘இந்துக்களே ஒன்றிணையுங்கள்’, ‘இஸ்லாமியர்களால் நமக்கு ஆபத்து’,  நம்மை மதமாற்றம் செய்யும் முழு வேலையைச் செய்கிறது கிறிஸ்டின் மிஷனரி” போன்றவற்றை நம்மிடையே கட்டமைத்து வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்.,  ஆனால் அவர்களின் அமைப்பைப் பார்த்தால், அவர்களின் மேல்மட்ட பிரதிநிதித்துவ சபையில் உள்ள 36 முக்கிய நிர்வாகிகளில், 26 பேர் பிராமணர்களாகவும், 5 பேர் பனியாக்களாகவும், மீதி அய்ந்து பேர் இதர ஜாதிகள், அதாவது சூத்திரர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் கூட அவர்கள் சொல்லும் ‘அவர்னாஸ்’ என்னும் பட்டியல் இனத்தவரோ, பெண்களோ இல்லை என்பது தான் உண்மை. இவர்கள் எப்படி அனைத்து இந்துக்களின் பிரதிநிதிகளாகவும், காவலர்களாகவும் இருப்பார்கள் என்பதை நம்மை இந்தப் புள்ளி விவரம் உணர வைக்கிறது.

அரசியலமைப்பை உதாசீனப்படுத்தி

அதேபோல் 2019 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, ஆர்.எஸ்.எஸ். உதவியோடு ஆட்சியைப் பிடித்த பாஜகவின் அமைச்சர்கள் மொத்தம் 58 பேரில், அதில் 32 உயர் ஜாதி பார்ப்பனர்கள் அமைச்சர்களாக உள்ளார்கள். மீதி 13 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோரும், பழங்குடியினர் ஒரு சிலரும் இருக்கிறார்கள். ஒரே ஒரு இஸ்லாமியர் மட்டுமே அமைச்சராக உள்ளார். கிறிஸ்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதைப் பார்க்கும்போது, மதச்சார்பின்மை (Secularism) என்றால் என்ன என்று எங்களிடம் கேட்காதீர்கள், நாங்கள் இந்துத்துவாப்படி மட்டும் தான் நடப்போம். இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பையே ஆர்.எஸ்.எஸ். / பி.ஜே.பி. ஆட்சி உதாசீனப்படுத்துவதை இந்த விவரங்களின் வழியாக நாம் முழுமையாக உணர முடிகிறது.

ஆர்.எஸ்.எஸ். பிம்பமாகவும், பிஜேபியின் அடித்தளமாகவும், இந்தியாவின் பிரதமராகவும் இருப்பவர்தான் நரேந்திர மோடி. அவர் தொடர்ந்து குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர். அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதை பாஜகவோ, ஆர்.எஸ்.எஸ்.-ஓ, வெளிப்படுத்தவே இல்லை..

நானும் ஒரு ஓ.பி.சி.

இந்த உயர் ஜாதிக் கட்டமைப்பையும், பிம்பத்தையும் வைத்து இந்தியாவில் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்திருந்ததை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக., 2013 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட தலைவரை முன்மொழிந்தால் தேர்தலில் வெற்றி பெற நல்வாய்ப்பு அமையும் எனத் திட்டமிட்டனர். அதற்கு “குஜராத் மாடல்” என்று ஒரு மாயை வெற்றியை அடையாளப்படுத்தி, அதற்குக் காரணமாக இருந்தவர் மோடி, அவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்பதை முதன்முறையாக ஒரு தேர்தல் யுக்தியாகக் கையாண்டனர் இவரை மட்டும் முன்னிறுத்தி, தேர்தல் யுக்தியைக் கையாண்டு வென்றதை, “நானும் ஒரு ஓ.பி.சி. (OBC)”  என்ற ஒரு அத்தியாயத்தில் அழகாக விவரித்துள்ளார் நம்முடைய ஆசிரியர். தேர்தலில் இவர்கள் எத்தகைய வித்தைக்காரர்கள், எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இதர அமைப்புகள் என்பதை இந்த அத்தியாயம் நமக்கொரு பாடமாக இருக்கிறது.

உண்மையான முகம்

இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழியும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக, தமிழ்நாட்டில் நுழையப் பல வகையில் திட்டமிடுகிறார்கள், ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியடைகிறார்கள். கடந்த தேர்தலில் அவர்கள் கையில் எடுத்த ஓர் ஆயுதம் தான் மொழி. தமிழ் மொழியை வைத்தே தமிழர்களை ஏமாற்றி விடலாம் என ஒரு கங்கணம் கட்டி, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டுவது, திருவள்ளுவரைப் புகழ்ந்து பேசுவது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, காசியில் தமிழ் சங்கம் வைத்து கொண்டாடியது, மோடி பேசும் போதெல்லாம் தமிழின் பெருமையைப் பேசுவது போன்றவற்றைப் பார்க்கலாம். ஆனால் மற்றொரு பக்கம் அவர்களது உண்மையான முகமான, ஹிந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்திற்கு அள்ளி அள்ளி நிதி ஒதுக்குவது, மாநில மொழிகள் குறிப்பாக தென்னிந்திய மொழிகளைப் புறக்கணிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இதையெல்லாம் தமிழர்கள் நன்கு உணர்ந்த துள்ளதால்  தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் தோல்வி யடைகிறது. 2026 நடந்த சட்டமன்ற தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் தமிழின் கடவுளான முருகரை வைத்து, வேல் யாத்திரை, திருப்பரங்குன்றம் போன்றவற்றையும் முயற்சித்துப் பார்த்தார்கள். அதிலும் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். என்றும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் இதற்கெல்லாம் ஏமாறவில்லை என்பதை ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள் விவரிக்கிறார்.

வெளிநாட்டினரின் நன்கொடை

‘டாலர் உண்டியல்’ என்ற அத்தியாயத்தில், பாஜகவின் நிதி மேலாண்மை, நிதியை பெருக்குதல், நிதியை பெறுதல் பற்றி விவரங்களோடு விளக்குகிறார். அமெரிக்காவில் இருந்து பல அமைப்புகளை உருவாக்கி, தொடர்ந்து நன்கொடைகளாக பெற்று, அதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வரிச் சலுகைகள் பெற்று, சாதுரியமாக அந்த நிதிகளை எல்லாம் இந்தியாவுக்குள் கொண்டுவருவதை ஆதாரத்துடன் விளக்குகிறார்.

கல்வி, சுகாதாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு, பழங்குடியினர் முன்னேற்றம் போன்ற வகையில் செலவு செய்கிறோம் என்று அவர்கள் காரணம் சொன்னாலும், அவை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.மற்றும் இந்துத்துவா சித்தாந்தங்களையே திணிக்க, அவர்கள் கட்டமைப்பை வலுப்படுத்த, இந்த நிதியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த ஒரு நீண்ட அத்தியாயத்தில் புள்ளி விவரங்களை எல்லாம் எடுத்து பார்த்தால், சுமார் 20- 30 நிறுவனங்கள் வழியாக லட்சக்கணக்கான டாலர்களைப் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக கரோனாவுக்கு பிறகு, இவர்களின் நிதி பெறுவது உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை பார்க்கும்பொழுது, எதை வைத்து வெளிநாட்டினர் இந்த அளவுக்கு நன்கொடை தருகிறார்கள் என்ற ஓர் ஆச்சரியம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நன்றாக படித்து, சிறப்பாக வேலை பார்த்து, நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட, இந்த அடிப்படை வாதத்திற்கு இந்துத்துவாவிற்கு ஆதரவாக இருப்பது நமக்கு திகைப்பைத் தருகிறது.

புதிய புதிய அமைப்புகள்

இந்நூலில் நான் வியந்தது, மாநிலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, அவர்கள் மதத்தையோ, மத வழிபாடையோ, ஜாதிய அமைப்பையோ கட்டமைக்க எவ்வாறெல்லாம் புதிய புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறார்கள். அதற்கு எப்படி இவ்வளவு பேர் ஆதரவு தருகிறார்கள் என்ற தகவல்கள் வியப்பளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இதர அமைப்புகள் குறிப்பாக எட்டு அமைப்புகள்  எப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று அழகாக எழுதியுள்ளார். இந்தப் பகுதியில் மகாராட்டிராவை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் போது கொல்லப்பட்ட சம்பவம் இந்நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

அதேபோல இந்து யுவ வாகினி என்ற ஒரு அமைப்பு, அவர்கள் எப்படி அதனை கட்டமைத்து, யோகி ஆதித்தநாத் கைப்பாவையாக இந்த அமைப்பு செயல்பட்டு அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு காரணமாக இருந்தது என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். இந்துத்துவாவாதிகளில் ஓர் அடாவடித்தனத்தை செய்யக்கூடிய ஓர் அமைப்பாக “பஜ்ரங் தளம்” இருக்கிறது என்ற பயங்கரத்தை இந்த அத்தியாயத்தில் வாசிக்கும் போது உணர முடிகிறது.

தென் மாநிலங்களில்

கருநாடகாவில் அவர்கள் பிரபலமாவதற்கு முக்கியமாக இருப்பது சீறிராம் சேனா என்றொரு இந்துத்துவா அமைப்பு. அதில் இருக்கும் முத்தலிக் என்பவர், அதில் ஒரு பிம்பமாக இருந்து, கருநாடக தொலைக்காட்சியில் டி.ஆர்.பி. (TRP) முடிவு செய்யும் வகையில் அவருடைய செயல்பாடுகள் இருப்பதை பார்க்கும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.

அதேபோல கேரளாவில் எடுத்துக் கொண்டால் இந்து அய்க்கிய வேதி என்றொரு அமைப்பை உருவாக்கி, அதில் சசிகலா என்ற ஒரு பெண்ணை அங்கமாக வைத்து, அவர் மூலமாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவரும் அந்த மாநிலத்தில் தன்னாலான ஒரு திணிப்பை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கேரளாவும் தமிழ்நாட்டைப் போல அதற்கு செவிமடுப்பதில்லை.

வடமாநிலங்களில்….

ராஷ்டிரிய சீக் சங்கத்தைப் பற்றி வாசிக்கும் போது மிகவும் வித்தியாசமாக இருந்தது. சீக்கியர்கள் என்பவர்கள் ஒரு தனி மதத்தினர். ஆனால் 1984 இல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரில், இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு நிலைத்த தன்மை கிடைக்கவில்லை. அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். சீக்கியர்களின் கட்சியை அவர்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக மடை மாற்றி, இன்று சீக்கியர்களே இந்துக்களின் ஓர் அங்கத்தினர் என்று கட்டமைக்க ராஷ்டிரிய சீக் சங்கம் செயல்படுவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு தொலைநோக்கு சிந்தனையோடு, படிப்படியாக இவர்கள் செயலாற்றுகிறார்கள் என்பதை நமக்கு ஒரு பாடம் போல புரிய வைக்கிறார் ஆசிரியர்.

மொத்தத்தில் இந்த நூல் என்பது நம்மைப் போன்றவர்கள்  நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நூல். இத்தனை ஆண்டுகாலம் நாம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவா கொள்கைகள் உள்ளே நுழையாமல் திராவிட இயக்கங்கள், திராவிடர் கழகம், திமுக, அதிமுக என மாறி மாறி கட்டமைத்து பாதுகாத்து வந்துள்ளோம். இப்போது புதிதாக வந்துள்ள தவெக அரசு இதேபோல் நிலைப்பாட்டை எடுக்குமா, இதேபோல் எதிர்க்குமா, ஏதாவது வழியில் புறவாசல் வழியாகவோ, அறம் பிறழ்ந்தோ RSS சித்தாந்தம் தமிழ்நாட்டில் நுழையாமல் இருப்பதற்கு இந்த நூலைப் பற்றி தொடர்ந்து நாம் விவாதிக்க வேண்டும். இந்த நூலின் கருத்துக்களை தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பரப்பிட வேண்டும். அதற்கு இந்த உரையும் ஒரு சிறிய ஆயுதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து உரையாடுவோம்

ஆரியத்தை தடுப்போம்

திராவிடம் காப்போம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *