இந்தியாவில் மருத்துவக் கல்விக்காக தேசிய நுழைவுத் தேர்வாகச் செயல்படும் நீட் தேர்வு என்பது வெறும் கல்வி விவகாரம் மட்டுமேயல்லாமல் சமூக நீதி, மாநில உரிமை மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
மருத்துவக் கல்வி நாடு முழுவதும் ஒரே தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) இணைந்து நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயன்றது. ஆனால், பல மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
2013இல் நீட் ரத்து
2013ஆம் ஆண்டு நீட் தேர்வு தொடர்பான முக்கிய வழக்கை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த அமர்வில் அன்றைய தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்ரமஜித் சென், அனில் ஆர்.தவே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 2013 ஜூலை 18 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கி மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வாக நீட்டை கட்டாயப்படுத்துவதற்கு (MCI) மற்றும் (DCI) ஆகிய அமைப்புகளுக்குப் போதிய சட்ட அதிகாரம் இல்லை என்று கூறினர்.
மேலும் தனியார் மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமைகள் பாதிக்கப் படலாம் என்று கருத்தையும் சுட்டிக் காட்டினர். இதன் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி அனில் ஆர். தவே மட்டும் தனி கருத்தை பதிவு செய்து நீட்டை ஆதரித்தார்,.
2016இல் மீண்டும் அமலுக்கு வந்த நீட்?
2013இல் நீட் தேர்வை ரத்து செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 2014இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு மற்றும் மருத்துவக் கவுன்சில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில் 2016 ஏப்ரல் 11 அன்று உச்சநீதமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 2013 தீர்ப்பை மீளாய்வு செய்ய உத்தரவிட்டது. 2013 தீர்ப்பில் சில முக்கிய சட்ட முன்னுதாரணங்கள் போதுமான அளவில் பரிசீலிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதன் விளைவாக 2013 தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, நீட் தேர்வு மீண்டும் அமலுக்கு வந்தது. அதன் பிறகு 2016 முதல் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொதுவான நுழைவுத் தேர்வாக நீட் நடைமுறையில் உள்ளது.
நீட் தேர்வு ஒரு சதிவலை, தமிழ்நாட்டைக் குறிவைக்கும் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் அரசியல் செல்வாக்கை வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பாரதீய ஜனதா கட்சி (பாஜக) ‘நீட்’ தேர்வை ஒரு மறைமுக அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று கடுமையான விமர்சனம் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.
கல்வி வழியே மறைமுக ஆதிக்கம்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மற்றும் கொள்கை முடிவுகளை நீட் தேர்வு போன்ற பொதுத் தேர்வுகள் மூலம் ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக முயல்கிறது. தமிழ்நாட்டின் சமூகநீதி 69 சதவீத இடஒதுக்கீடு மற்றும் மாநில சுயாட்சிக் கொள்கைகளே பாஜக இங்கு கால் பதிக்க முடியாமல் போனதற்குக் காரணம்.
எனவே, நீட் தேர்வு மூலம் மாணவர்களின் உரிமைகளையும் பலவீனப்படுத்துவதன் மூலமே தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாஜக திட்டமிடுகிறது. ஒன்றிய அரசின் அதிகார குவிப்புக்கு எதிராக ‘மாநில சுயாட்சி’ முழக்கமும், நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டை வஞ்சிக்க நடக்கும் அரசியல் சதி என்ற வாதமும் திராவிட மண்ணில் பாஜகவின் தேர்தல் வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முதன்மைக் காரணமாக நீடிக்கிறது.
– ராம்ஜி, லயோலா கல்லூரி மாணவர்
