ஒன்றிய அரசின் மீது வங்க தேசம் அதிருப்தி! -கி.இரா.

3 Min Read

உலகின் பல நாடுகளுக்கும் இடை யறாது பயணம் மேற்கொள்வதில் சளைக்காத ஒரு நாட்டின் பிரதமர் யாரென்றால் அவர்தான் இந்தியாவின் பிரதமர் மோடி! பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கெனவும் அப் பயணங் களை அவர் மேற்கொள்வதாகக் கூறப் படுகின்றது.

வங்கதேச அதிகாரிக்கு அவமதிப்பு

அவர் பயணம் மேற்கொள்கின்ற அந்நாடுகளில் அரசு மரியாதையுடன், அந்தந்த நாடுகளின் மரபுகளுக்கு ஏற்றவாறு அவருக்கு வரவேற்புத் தரப்படுகின்றது. அவற்றை அவர் பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதைக் கண்கூடாகச் செய்தி ஊடகங்களில் பார்க்கவும் முடிகின்றது. இப்படிப்பட்ட நிலையில்தான் அண்டை நாடான வங்க தேசத்தின் கண்டனம் இந்திய நாட்டிற்குக் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் உயர்நிலை மூத்த அதிகாரி ஒருவர் புதுடில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு – அவமதிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும்.

அவர் வங்கதேசத்தின் பிரதமர் தாரிக் ரஹ்மானின் கொள்கை, உதவிகள் விவகாரங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றி வருபவர். அந்த அதிகாரியின் பெயர் ஜாஹெட் உர் ரஹ்மான் என்பதாகும். இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் (IORA) – மூத்த அதிகாரிகள் குழுவின் (CSO) 28ஆவது கூட்டத்தினை புதுடில்லியில் (15, 16.6.2026) நடத்திட ஏற்பாடு செய்திருந்தது.

முறைப்படித் தகவல் பரிமாற்றம்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வங்க தேசத்திற்கும் அழைப்புத் தரப்பட்டிருந்தது. அதன்படி கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய வங்கதேசக் குழுவிற்குத் தலைமை வகித்து வழி நடத்துவதற்காகத்தான்  ஜாஹெட் உர் ரஹ்மான் புதுடில்லிக்கு வருகை தந்தார். அவரது இந்திய வருகை, அவரது பொறுப்பு குறித்து வங்கதேச அரசு இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமானத் தகவலை முறைப்படிப் பகிர்ந்துள்ளது.

இந்தியாவில், புதுடில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் அவரிடம் ‘சரிபார்ப்பு’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென ஜாஹெட் உர் ரஹ்மான் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. அதிகாரிகள் அவரை அலைக்கழித்தனர்.

டாக்கா திரும்ப முடிவு

இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தனக்குத் தடை ஏற்படுத்தி – நெருக்கடிகள் கொடுப்பதை அவர் புரிந்து கொண்டார். இதற்கிடையில் இந்திய அதிகாரிகள் ‘ஒருமுறை விலக்கு’ என்று அந்த வங்கதேச அதிகாரிக்கு அனுமதி கொடுத்தனர். ஆனால், ஜாஹெட் உர் ரஹ்மான் அதற்கு மாறாக இரவு நேர விமானத்தில் கொழும்பு வழியாக வங்கதேசத் தலைநகர் டாக்கா சென்றடைவதற்கு முடிவு எடுத்தார்.

இதற்கு முந்தைய காலகட்டங்களில், ஜாஹெட் உர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராக எடுத்து வைத்த சில கருத்துகள்தான் இந்தக் கெடுபிடிகளுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஜாஹெட் உர் ரஹ்மானது இந்திய வருகை குறித்தும், மூத்த அதிகாரிகள் கூட்ட மைப்பின் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளது குறித்தும் வங்கதேச அரசு சார்பில் அதிகாரப்பூர்வமானத் தகவல் இந்தியாவிற்குத் தெரிவிக்கப்பட்ட பின்பும் ஏன் இந்த திடீர் நடவடிக்கை? அவருடைய இந்திய வருகை ஏற்புடையதல்ல என்றால், முன்பே வங்க தேசத்திற்குத் தகவல் தர மறுத்தது ஏனோ!

எதிர்பாராதது – ஏற்கத்தக்கதுமல்ல!

கடும் அதிருப்திக்கு இடையில், வங்கதேச அரசு இந்தியாவில் உள்ள அந்நாட்டின் இந்தியத் துணை உயர் ஆணையர் பவன் தேவாவை டாக்காவிற்கு நேரில் வருமாறு கோரியது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. வங்க தேசத்தின் வெளியுறவு அமைச்சகம் பவன் தேவாவிடம் அதிகாரப்பூர்வ கண்டனக் கடிதத்தை வழங்கியுள்ளது. வங்க தேச வெளியுறவு அமைச்சர் கலிலுர் ரஹ்மான் இதனை ‘எதிர் பாராதது’ – ‘ஏற்கத்தக்கதல்ல’ என்று குறிப்பிட்டு, வங்கதேச அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறதெனக் கூறினார்.

வெட்கக் கேடு

இந்தியா – வங்க தேச உறவுகள் அவ்வப்போது சில சவால்களைச் சந்தித்து வந்தாலும், சீரான நல்லுறவு இருப்பதையும் மறுக்க இயலாது. டாக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அனைத்து நாடுகளின் கவனத்தைப் பெற்ற ஒன்றாகவும் ஆகியுள்ளது.

இரு நாடுகளின், இரு தரப்பினரின் விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் உறவை மேம்படுத்தி சீரமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இதுவாகும். இந்நிலையில், ஒன்றிய மோடி அரசின் இத்தகையதொரு நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியதாக ஆனதுதான் வெட்கக் கேடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *