‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்
18 வயது மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
நாக்பூர், ஜூன் 06 மீண்டும் நீட் தேர்வை எழுதும் துணிச்சல் தனக்கு இல்லை என்றும், தன்னை மன்னித்துவிடுமாறும் உருக்கமாக கடிதம் எழுதிவைத்து விட்டு, 18 வயது மருத்துவ ஆவலோடு இருந்த மாணவி அகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘நீட்’ தேர்வு
மத்தியப் பிரதேசத்தின் மவுகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த அகாங்ஷா சதுர்வேதி, மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மய்யத்தில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை அவர் சிறப்பாக எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மறுதேர்வு அறிவிப்பும் விரக்தியும்
இந்நிலையில், வினாத்தாள் கசிவு புகார் காரணமாக மே 3 அன்று நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை (NTA) கடந்த மே 12ஆம் தேதி அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான அகாங்ஷா சதுர்வேதி, கடுமையான மன உளைச்சலுக்கும் மிகுந்த விரக்திக்கும் ஆளாகியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 20-ஆம் தேதி நாக்பூரில் உள்ள தனது வீட்டில் அகாங்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப் பட்டார். நிகழ்வு நாளன்று மதியம் குடும்பத்தினர் அவரை மதிய உணவு சாப்பிட அழைத்த போது, தனக்கு பசி இல்லை என்றும் பிறகு சாப்பிடுவதாகவும் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், பிற்பகல் 3 மணி அளவில் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
உருக்கமான கடிதம்
மாணவி இறந்து சில நாட் களுக்குப் பிறகு, அவரது பெற்றோர் மகளின் பாட புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்புகளை எடுத்துப் பார்த் துள்ளனர். அப்போது அதில் அகாங்ஷா தன் கையால் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் அகாங்ஷா எழுதி யிருப்பதாவது:
“அம்மா, அப்பா… நான் படித்து மருத்துவர் ஆவேன் என்று என் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால், மீண்டும் ஒருமுறை நீட் தேர்வு எழுதுவதற்கான துணிவு எனக்கு இல்லை. முதல் தேர்வில் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற இருந்தேன். ஆனால், மறுதேர்வில் மீண்டும் அதே போல் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் இருவரின் எல்லா வற்றையும் நான் பாழாக்கி விட்டேன்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
இதையடுத்து, இந்த கடிதத்தை ஜூன் 1-ஆம் தேதி அம்பாசாரி காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய காவல் துறை துணை ஆணையர் நித்யானந்த் ஜா, “குடும்பத்தினருடன் நாக்பூரில் வசித்து வந்தபோதுதான் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது புத்தகங்களை ஆராய்ந்தபோது கடிதம் கிடைத்துள்ளது. அது காவல் துறை வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
தேர்வு முறைகேடுகளாலும், மறுதேர்வு அறிவிப்புகளாலும் ஓர் இளம் மாணவியின் உயிர் பறிபோயிருக்கும் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இதே போல் ஒரு மாணவி இதே போல் 2022 ஆம் ஆண்டு பெற்றோருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்து விட்டு மரணமடைந்த்து அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த்து
மனநல ஆலோசனை மற்றும் தற்கொலைத் தடுப்பு உதவி எண்கள்
தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. உங்களுக்குள் மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ தோன்றினால், உடனடியாகக் கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளைப் பெறலாம்: சினேகா தொண்டு நிறுவனம் (சென்னை): 044 – 24640060 (24 மணி நேரமும் செயல்படுவது) தமிழ்நாடு அரசின் ஹெல்ப் லைன் எண்: 104
