‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

2 Min Read

புதுடில்லி,  ஜூன் 6 படித்த வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் விமர்சித்ததற்கு எதிராக, அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் அபிஜித் தீப்கே என்பவர் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக ஊடகக் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.

தற்போது, இளநிலை நீட் (NEET) தேர்வு குளறுபடி மற்றும் சிபிஎஸ்இ (CBSE) ஓஎஸ்எம் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஜூன் 6) அமைதிப் போராட்டம் நடத்த இக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று இந்தியா வருகிறார். இதற்கிடையே, புலனாய்வு செய்தியாளர் சவுரவ் தாஸ், அரசியல் ஆய்வாளர் விஜேதா தஹியா மற்றும் மெக்கன்சி நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் அவசர முறையீடு

இந்தச் சூழலில், “சேவ் இந்தியா பவுண்டேஷன்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழக்குரைஞர், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சவுரப் (பானர்ஜி) மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர முறையீடு ஒன்றைச் செய்தார்.

“ஜந்தர் மந்தரில் இன்று (6.6.2026) நடக்கவுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் போராட்டத்தால் டில்லியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், இப்போராட்டத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்; இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

இந்த அவசர முறையீட்டை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக நிராகரித்தது.

காரணம்: ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள டில்லியில், இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை விதிக்கவோ கோரும் இந்த மனுவை அவசரமாகப் பட்டியலிட்டு விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த அவசர வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறுவதில் இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *