ஊழல் – மோசடி வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிப்பு! அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!

3 Min Read

வாசிங்டன், மே 21 – இந்தியப் பெருமுதலாளி யான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீதான நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை (DoJ) முழுமையாக கைவிட்டு விட்டது; போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் முடிவு செய்ததாலும் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதானி குழுமம் மீது அமெ ரிக்காவில் நடந்து வந்த அனைத்து சட்டப்பூர்வ விசாரணைகளிலிருந்தும் அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.

கவுதம் அதானியின்
நாடு கடந்த கைவரிசை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-வின் ஆதரவால் உலகப் பணக்கா ரர்களில் ஒருவராக உயர்ந்த கவுதம் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி, கடந்த 2024 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பணம் திரட்டியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது குற்ற வியல் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்காவை ஏமாற்றி ஊழல்!

இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டங்க ளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சம் கொடுத்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற முதலீட்டை இவ்வாறு தவறான வழிகளில் அதானி பயன்படுத்தியுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (SEC) சிவில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவை மட்டுமல்லாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அரபு அமீரகத்தைச்சேர்ந்த ஒரு வர்த்தகரிடமிருந்து ஈரான் எரிவாயுவை ஓமன் மற்றும் ஈராக் நாட்டு எரிவாயு என்ற பெயரில் வாங்கியதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி அந்த வர்த்தகம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.

‘சமரசத் திட்டம்’ மூலம் தப்பினார்!

இவ்வழக்குகளில் தனக்காக வாதாட, சல்லிவன் & குரோம் வெல் உள்ளிட்ட 5 முன்னணி அமெரிக்க சட்ட நிறுவனங்களை அதானி அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனங்கள் அதானியைக் காப்பாற்ற தீவிரமாக வேலை செய்து வந்த நிலையில் தான், 10 பில்லியன் டாலர் முதலீடு என்ற ‘சமரசத் திட்டம்’ மூலம் அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தால் அதானி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே, செய்திகள் வெளியாகின. அதன்படியே தற்போது நடந்துள்ளது. 10 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து, அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.

அதானியை இனி
விசாரிக்கவே முடியாது!

அமெரிக்க நீதித்துறையும், அதானி மீதான வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதன்மீது மீண்டும் மேல்முறையீடு கோர முடியாது என்று வித் பிரிஜூடிஸ் (“With Prejudice”) என்ற முறையில் வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்கக் குற்ற வியல் நடைமுறைகளில் இதுபோன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது மிகவும் அரிதானவை. ஒரு வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு, அதை மேற்கொண்டு நடத்துவது தேவை யற்றது என்ற முடிவுக்கு வரும்போது மட்டுமே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அதானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

அதேபோல, எண்ணெய் வாங்கிய விவ காரத்தில் அதானி குழுமம் முழு ஒத்துழைப்பு வழங்கி, 275 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் ‘ஆஸ்தான’ வழக்குரைஞர் ‘உதவி’

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞர்களுள் ஒருவர் அதா னிக்கு ஆதரவான வழக்கறிஞர் குழுவிலும் இருந்தார்.

அவர் அதானி அமெரிக்காவில் 10 பில்லி யன் டாலர்கள் (சுமார் 84,000 கோடி ரூபாய்) முதலீடு செய்ய விரும்புகிறார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை அவரால் முதலீடு செய்ய முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்த ஒரு தொழிலதிபரை விசாரித்து சட்ட ரீதியாக தண்டிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொழிலதிபர் அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்புகிறார் என்று கூறி டிரம்ப் அரசு நீதித்துறையையே வளைத்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *