ஒன்றிய அமைச்சகத்துக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்!
புதுடில்லி, ஜூலை 18 பிரதமர் மோடி வெளிநாடுகளிலும், உள் நாட்டிலும் முறைப்படியான செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்ப்பதை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ருத்ரேந்திர டாண்டன் ஜூலை 10 ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நியாயப்படுத்தினார்.
அதாவது, “பிரதமர் மோடி ஒரு சிறந்த இந்திய அரசியல்வாதி. அவர் வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதையே விரும்பு கிறார். இந்திய வாக்காளர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஊடகங்கள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் பேசுவதைவிட, நேரடித் தொடர்பையே பிரதமர் முன்னி றுத்துகிறார்” என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்ப தற்கு ஆதரவாக முட்டு கொடுக்கும் வகையில் ருத்ரேந்திர டாண்டன் பேசினார்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சகத்தின் அதிகாரி ருத்ரேந்திர டாண்டனின் பேச்சுக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பிரதமர் மோடி, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ திட்ட மிடப்படாத செய்தியாளர் சந்திப்பு களை எதிர்கொள்ள விருப்பம் காட்டா ததற்கு, அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி என்பதால் தனது கிராமப்புற வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதையே விரும்புகிறார்’’ என்று வெளியுற வுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி விளக்கம் அளித்து நியாயப்ப டுத்துவதை இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி தயக்கம் காட்டுவது உண்மை!
பிரதமர் ஏன் ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொள்வதில்லை என்பதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி முன்வைக்கும் வாதம் மிகவும் தவறானது. அதாவது அதிகாரி ருத்ரேந்திர டாண்டனின் விளக்கம் ‘ஆழமற்றது’ மற்றும் ‘ஏற்க முடியாதது’. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போரினால் உலகம் முன்னெப்போதும் இல்லாத எரி சக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இத்தகைய சூழலில், பிரதமர் தனது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் எழுப்பும் அவசர அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்குத் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய கடமை உடையவர். ஆனால், இத்த கைய பெரும் நெருக்கடி குறித்து எவ்வித ஊடகங்களிடமும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அவர் தயக்கம் காட்டி வருவதுதான் உண்மை.
உயர்பதவிகளில் இருப்பவர்கள்…
ஜனநாயக உலகம் முழுவதும், தலைவர்கள் ஊடகங்களைப் புறக்க ணிப்பதில்லை; மாறாக, ஜனநாயகச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக ஊடகங்களுடன் தொடர்ந்து கலந்துரை யாடுகின்றனர். ஒவ்வொரு இயங்கக் கூடிய ஜன நாயகத்திலும், ஊடகங்கள் பொது மக்களின் சார்பில் பேசி, அரசுப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பதிலளிக்கும் பொறுப்பைக் கோருகின்றன. மேலும் மக்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் முக்கியமான பிரச்சினைகளுக்குப் பதில்களைப் பெறுகின்றன. சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே மேற்கொள்ளப் படும் திட்டமிடப்பட்ட, ஒரு தலைப்பட்ச மான கருத்துப் பரி மாற்றங்கள், சுதந்திரமான ஊடகங்க ளுடனான பொது உரையாடலுக்கு மாற்றாகாது. உயர்பதவிகளில் இருப்பவர்கள் இத்தகைய மேலோட்டமான கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
ஒரு மந்தமான தாக்கத்தையே ஏற்படுத்தும்
இத்தகைய கருத்துகள் (ஒன்றிய அரசின் விளக்கம்) பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீது மேலும் ஒரு மந்தமான தாக்கத்தையே ஏற்படுத்தும்” என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன.
