உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
புதுடில்லி, மே 31- 2026 இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமையை (NTA) மாற்றுவது தொடர்பான மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தேசிய தேர்வு முகமை மற்றும் ஆய்வு குழுவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
நீட் மறுதேர்வு
வரும் ஜூன் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு செயல்முறையை வலுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் உயர் அதிகார வழிகாட்டுதல் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, வினாத்தாள் கொண்டு செல்லும் முறையில் இருந்த குறைபாடுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுமார் 60 முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டு, விரிவான பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “நீட் தேர்வு தொடர்பான விவகாரங்களை பிரதமர் நேரடியாக கண்காணித்து வருகிறார். இதில் ஒன்றிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற எந்தவொரு பிரச்சினைகளும் எழாது” என்று உறுதியளித்தார். மேலும், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மாணவர்களை ஏமாற்றக் கூடாது”
– நீதிபதிகள் அதிருப்தி
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு சில அடுக்கடுக்கான கேள்விகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கினர்:
“இதுபோன்ற தேர்வு விவகாரங்களில் நாம் மாணவர்களை ஏமாற்றக் கூடாது. அது மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கடுமையான மன வேதனையைத் தரும். முன்னதாக வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னரும், இந்த நீட் தேர்வில் எவ்வாறு மோசடி நடைபெற்றது? பரிந்துரைகளைச் செயல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?” என்று கேள்வி எழுப்பினர்.
இனிவரும் ஆண்டுகளில் எந்தவித மோசடியும் நடைபெறாமல், நீட் தேர்வை அரசு எவ்வாறு பாதுகாப்பாக நடத்தப் போகிறது என்பது குறித்த விரிவான பிரமாணப் பத்திரத்தை ஜூலை 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தனர்.
