அயோத்தி, ஜூலை 7- கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் கொடையளித்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கையாடல் செய்த விவரங்கள் நாடு முழுவதும் தெரியும் வகையில், பரவி வருகிறது. நடைபெற்ற ‘கையாடல்’ குறித்த விமர்சனங்களும், ஆக வேண்டிய நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கைகளும் பெருகி வரும் நிலையில் அயோத்தி ராமன் கோயில் கட்டுவதற்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல், கோயில் கட்டும் பணியில் முதன்மையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பா.ஜ.கவும் கோயில் ‘கும்பாபிஷேகத்திலும்’ முதன்மையாக இருந்த பா.ஜ. கட்சி – நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ’கோயில் பணக் கையாடல்’ குறித்தும் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காதது நாடு தழுவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் முறைகேடு குறித்து முறையான புகார் எதுவும் வராத நிலையிலும், மத்தியப் புலனாய்வு அமைப்புகளை அனுப்பி விசாரணை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ஜ.க. ஒன்றிய அரசு இதுநாள்வரை அயோத்தி ராமன் கோயிலில் நடந்துள்ள ‘கையாடல்’ குறித்து எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளாதது பொதுவெளியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் நேற்று (6.7.2026) உத்தரபிரதேசம் – லக்னோ நகரில் பா.ஜ.க. ஊழியர் கூட்டத்தில், ‘அயோத்தி ராமன் கோயில் கையாடல்’ குறித்து முதன்முறையாக கருத்து தெரிவிக்கும் வகையில் வாய் திறந்துள்ளார். ஆனால் ‘கையாடல்’ குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியோ– நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகளில் பங்கு பெற்றோர் பற்றியோ எதுவும் அவர் பேசிடவில்லை.
இவர்களும் ஸநாதன எதிரிகளா?
பிரச்சினையை முற்றிலும் திசை திருப்பி ‘‘ஸநாதன தர்மத்தை அவமானப்படுத்திய’’ கட்சிகளுக்கு ராமன்கோயில் பற்றி பேச தார்மீக உரிமை கிடையாது என்று கொக்கரிக்கும் பா.ஜ.க. தலைவர் நிதின் நபின், ராமன் கோயில் காணிக்கை உண்டியல் திருட்டை கண்டிக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி., ‘தினமலர்’ பத்திரிகை உள்ளிட்டம் சங்பரிவாரங்களை எல்லாம் சேர்த்துதான் ‘‘ஸநாதன எதிரிகள்’’ என்று விமர்சிக்கிறாரா?
ஒரே பிரச்சினையில் இரு வேறு கருத்து கூறியுள்ள பா.ஜ.க. தலைவரின் ஸநாதன இந்துத்துவப் பார்வை இதன் மூலம் பளிச்செனத் தெரிகிறது.
மாறாக அவர், அயோத்தி ராமன் கோயிலில் நடந்துள்ள கையாடல் முறைகேடுகள் குறித்துப் பேசும் காங்கிரசு, சமாஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு ஸநாதன தர்மம் பற்றி இழிவுபடுத்திடும், ராமஜென்ம பூமி இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திடும் வரலாறும் உள்ளதைத்தான் அந்தக் கட்சிகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ராமனுக் குக் கோயில் கட்டுவதற்கான எதிர்ப்பினைக் காட்டிவிட்டு இப்பொழுது ‘கோயில் (ராமன்) மீது நம்பிக்கை’ உள்ளவை போல காட்டிக் கொள்ள முன்வந்துள்ளன. ஆனால் பா.ஜ. கட்சியானது தொடக்கம் முதலே ராமன் மீது பக்தி, நம்பிக்கை கொண்டு அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு குரல் எழுப்பிப் போராடி வந்துள்ளது. ராமன் கோயில் தொடர்பான நம்பிக்கைகளைத் தகர்த்திட யாராவது முயற்சித்தால், அதனை எதிர்த்து ரத்தம் சிந்திடவும் பா.ஜ.க. தயங்காது. மேலும், அதற்காக எந்தவிதத் தியாகத்தினையும் செய்திடத் தயாராக இருப்பதாகவும், பா.ஜ. கட்சியின் தேசியத் தலைவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அயோத்தி ராமன் கோயிலில் நடைபெற்றுள்ள ‘பணக் கையாடல்’ குறித்து அரசும், உரிய அதிகார நிலையில் உள்ளவர்களும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால் ஸநாதன தர்மத்தை இழிவுபடுத்திடும் கட்சிகள் இராமன் கோயிலில் நடைபெற்றுள்ள ‘கையாடல்’ குறித்துப் பேசிட தார்மீக உரிமையற்றவர்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கோயிலில் ‘பணக் கையாடல்’ நடைபெற்றது குறித்து இதுவரை எதையும் பா.ஜ.க. மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் தெரிவிக்கவில்லை. இப்பொழுது அந்தக் கட்சியின் தேசியத் தலைவர், ‘ராமன் கோயிலில் நடந்துள்ள கையாடல்’ குறித்த எந்தவித பொறுப்பான கருத்தையும் கூறாமல், எதிர்கட்சியினரை வசைபாடுவதையும், எதிர்கட்சியினர் கூற்றுக்குப் பதில் அளிக்காத நிலையினையும் பொதுநலம் நாடுவோர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
‘அயோத்தி ராமன் கோயிலில் நடைபெற்றுள்ள ‘கையாடல்’ குறித்து பா.ஜ.க. கருத்து தெரிவிக்கவில்லையே. அயோத்தி ராமன் கோயில் விவகாரங்களில் கடந்த காலங்களில் முன்னெடுத்த நிலையில் இருந்த கட்சி, வாய் திறக்காமல் இருக்கிறதே’ என்று பொதுவெளியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், பா.ஜ. கட்சியின் தேசியத் தலைவர் அயோத்தி ராமன் கோயிலில் நடைபெற்ற ‘கையாடல்’ குறித்து எந்தவித பொறுப்புணர்வு இல்லாத நிலையும், குற்றச் சாட்டு வைத்துள்ள எதிர்க்கட்சி யினரை ‘தார்மீகம்’ அற்றவர்கள் எனக் குறிப்பிட்டு பேசியும் பொது வெளியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
