ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாதர் சங்கம் கடும் கண்டனம்
புதுடில்லி, மே 23 மூன்றாவது குழந்தை பெறு வோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்திருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் அரசின் முன்மொழிவு
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி.கே.சிறீமதி, பொதுச்செயலாளர் கனினிகா கோஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக, மூன்றாவது குழந்தைக்கு மூன்று லட்சம் ரூபாயும், நான்காவது குழந்தைக்கு 40 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளிக்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திர பாபுவின் சர்ச்சைக்குரிய அறிவிப்பை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு மாநில அரசாங்கத்தின் தலைவரிடமிருந்தே இத்த கைய பிற்போக்குத்தனமான முன்மொழிவு வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்ப தாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் உள்ளது.
பெண்களின் கண்ணியம்,
உயிருக்கு ஆபத்து
பெருமளவிலான பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மை, இரத்தச் சோகை மற்றும் சுத்தமான குடிநீர் வசதியின்மை ஆகிய வற்றால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் கடுமையான யதார்த்த நிலைகளை, சந்திரபாபு முற்றிலும் புறக்கணித்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரப் பாதுகாப்பு, முறையான ஊட்டச்சத்து, அனைவருக்கும் சுகாதார வசதி, கல்வி ஆகியவற்றை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டுமே தவிர, பெண்களின் உயிருக்கும் கண்ணியத்திற்கும் மேலும் ஆபத்தை விளைவிக்கும் கொள்கைகளை ஊக்குவிப்பதாக இருக்கக்கூடாது.
குழந்தைப் பேற்றை
பண்டமாக மாற்றுவதா?
இந்த முன்மொழிவு பெண்களுக்கு, அவர்களது உடலின் மீதான சுயநிர்ணய உரிமையைப் பறிப்பதுடன், அவர்களை வெறும் மக்கள் தொகை பெருக்கத்திற்கான கருவிகளாகச் சுருக்கி விடுகிறது. இது பெண்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த உழைப்பின் பெரும் சுமை ஆகியவற்றை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. தாய்மார்களின் இறப்பு விகிதம், ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் சுகாதார வசதியின்மை ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளைச் சாதாரணமாகக் கருதுகிறது. குழந்தைப் பேற்றை ஒரு பண்டமாக மாற்றுவதன் மூலம், இது பெண்களின் உடலின் மீதான ஆணாதிக்கக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதுடன், இனப் பெருக்கம் சார்ந்த சுயநிர்ணய உரி மைக்காகப் பல ஆண்டுகளாக முன்னெ டுக்கப்பட்ட போராட்டங்களையும் பலவீனப் படுத்துகிறது.
ஏழை மக்கள் –
சமூகத்திற்கு எதிரானது
இந்தியா கடுமையான வேலை யின்மை, வறுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு வரும் இத்தரு ணத்தில், பெரிய குடும்பங்களை அமைப்பதற்கு ஊக்கமளிப்பது ஏழை மக்களுக்கு எதிரானதும், சமூகத்திற்கு எதிரானதும் ஆகும். எனவே, இந்த ‘பெண் விரோத’ முன்மொழிவை நிராகரிக்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகள், மகளிர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. பெண்களின் உடல்கள் மக்கள் தொகை சார்ந்த பொறியியல் மாற்றங்களுக்கான கருவிகள் அல்ல என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
கடுமையாக எதிர்த்துப் போராடுவோம்!
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு, உடல் சார்ந்த சுயநிர்ணய உரிமை ஆகிய கட்டமைப்பு சார்ந்த பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணாமல், குழந்தைப் பேற்றிற்கு ஊக்கமளிக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் பெண்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இத்தகைய பிற்போக்குத்தனமான சலுகைகளை எங்களின் முழு பலத்துடனும் எதிர்த்து நிற்போம்.
இவ்வாறு பி.கே.சிறீமதியும், கனினிகா கோஷும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
