பண்டைய காலத்தின் வரலாற்றுப் பதிவுகளை உள்ளிட்டவையே செப்பேடுகள். காலத்தை ஆவணப் படுத்தி ஒரு நாட்டின் பண்பாட்டைப் புலப்படுத்துகின்ற அரியதொரு பெட்டகமாகத் திகழ்வது இதன் தனிச் சிறப்பும், பெருமையுமாகும்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் புதையலாம் அத்தகைய செப்பேடுகளில் சில நெதர்லாந்து நாட்டின் வசமிருந்தன. தற்போது நெதர்லாந்து அரசு அவற்றை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டுக்கு எப்படிச் சென்றன? ஃபுளோரண்டியல் கேம்பர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் 18ஆம் நூற்றாண்டில் கிறித்துவ சமயப் பணிகளுக்கென்று தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு வந்தார். அப்போது நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் டச்சுக் காலனிய ஆதிக்கத்தில், ஆளுமையின் கீழ் இருந்து வந்தன. இதனை உறுதிப்படுத்துகின்ற குறிப்புகளும் அந்த செப்பேடுகளில் உள்ளன. கிறித்துவ சமயப் பரப்புரையாளர் நெதர்லாந்து நாட்டிற்குத் தான் திரும்பிச் சென்றபோது அந்த செப்பேடுகளை அபகரித்து எடுத்துச் சென்றுவிட்டார்.
இந்திய அரசு மீட்காதது ஏன்?
இராஜராஜசோழன், இராஜேந்திரசோழன் ஆட்சிக் காலத்தின் தரவுகளை உடைய இந்தச் செப்பேடுகள் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. “ஆனைமங்கலம் செப்பேடுகள்” என்றழைக்கப்படும் இவை வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்களின் முக்கிய கவனத்தைப் பெற்றவையாகும். இவற்றை இந்திய அரசு மீட்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஏன் மீட்கப்படவில்லை என்ற கேள்வி 2012ஆம் ஆண்டு முதல் வலுப்பெற்றது.
அந்தச் செப்பேடுகள் தருகின்ற முக்கிய செய்திகள் எவையென்று தெரியுமா? கடாரத்தை (மியான்மா) சிறீமாற விஜயோத்துங்க வர்மன் என்பவர் ஆட்சி செய்தார். தனது தந்தையின் மீது மிகவும் அன்பு கொண்டவர். தனது தந்தைக்கு நினைவுச் சின்னம் பெரிய அளவில் அமைக்க வேண்டுமென்பது அவரது பெரு விருப்பமாகும். அதற்கென நாகப்பட்டினத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கு அவரது தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் “சூளாமணி வர்ம விகாரை” என்ற பவுத்த மடத்தை அமைத்தார்.
அந்த பவுத்த மடத்தின் பராமரிப்பிற்கு என்று முதலாம் இராஜராஜசோழன் “ஆனைமங்கலம்” என்ற கிராமத்தை கொடை அளித்தார். இந்த நிலத்திற்கு முற்றாக வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. குறிப்பாக இதற்கான சான்றுகள்தான் அந்தச் செப்பேடுகளில் காணப்படுகின்றன. சோழ வம்ச அரசாட்சி உரிமை பற்றியும் இதில் பல தகவல்கள் உள்ளன.
ஒரு வலையத்துள் 21 செப்பேடுகள்
இந்தத் தொகுப்பில் செம்பினால் ஆன 21 செப்பேடுகள் உள்ளன. இவை வெண்கலத்தால் ஆன வளையத்தில் ஒன்றாகக் கோர்க்கப்பட்டுள்ளன. அந்த வளையத்தின் முகப்பில் இராஜேந்திர சோழனின் அரசு முத்திரையும் உள்ளது.
இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தச் செப்பேடுகளின் எடை சுமார் 30 கிலோ அளவில் உள்ளது. செப்பேடுகளில் உள்ள விவரம் தமிழ்மொழியில் உள்ளது. சமஸ்கிருத மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.
இராஜராஜ சோழன் காலத்தில் அரசு உத்தரவுகள், வாய்மொழி ஆணைகள் பெரும்பாலும் பனை ஓலைகளில் பதிய வைக்கப்பட்டவையாகும். ஆனால், சோழர் காலத்தின் ஆட்சி குறித்த தகவல்களை இராஜேந்திர சோழன் உறுதிமிக்க செம்பினால் ஆன தகடுகளில் பதிய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து மன்னரின் இசைவு!
நெதர்லாந்து – லெய்டன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த இவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியத் தூதரகம் பலமுறை வேண்டுகோள் விடுத்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. நெதர்லாந்து மன்னர் அதற்கு இசைந்து இந்தியாவிடம் திரும்ப அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
இந்தியப் பிரதமர் மோடி அய்க்கிய அரபு அமீரகம், சுவீடன், நார்வே, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அய்ந்து நாடுகளுக்கு இம் மாதத்தில் (மே – 2026) பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளோடு இந்தியாவும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெதர்லாந்து நாட்டில் உள்ள ‘தி ஹேக்’ நகரில் 16.5.2026 அன்று அந் நாட்டு அரசு இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை முறைப்படி ஒப்படைத்துள்ளது. இதனை இரு நாட்டின் நல்லுறவு மேம்பாட்டின் அடையாளம் என நெதர்லாந்து நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தலைவர் வேண்டுகோள்!
ஒன்றிய அரசு ஆனைமங்கலம் செப்பேடுகளைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பது ஒன்றே சாலச் சிறந்தது என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
‘காலனியப் பொருள்கள் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும்’ என்ற நெதர்லாந்து நாட்டு அரசின் கொள்கை முடிவின்படி (2022) அந்தச் செப்பேடுகள் இந்தியாவுக்குத் தரப்படுவதைத் தமிழர் தலைவர் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற் றுள்ளார். பண்பாட்டுத் தரவான இந்தச் செப்பேடுகள் வரலாற்று ஆய்வுக்குச் சான்றாவணமாகப் பெரிதும் பயன்படுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
நியாயத்தை உணர்ந்து ஒன்றிய அரசு அந்தச் செப்பேடுகளை தமிழ்நாடு அரசிடம் எப்போது ஒப்படைக்கும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனோடு ஆனைமங்கலம் கிராமத்தில் அகழாய்வுப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமென்ற அங்குள்ள மக்களின் வேண்டுகோளையும் ஒன்றிய அரசு நிறைவேற்றுமா?
– செம்பியம் ராமலிங்கம்
