“நீட் மோசடிகளின் பரிமாணம்”! ஆள் மாறாட்டத்தில் இருந்து வினாத்தாள் புளூ பிரிண்ட் வரை

கட்டுரை, ஞாயிறு மலர்

நீட் தமிழ்நாட்டில் ஒரு கொடூர உயிர்பலியோடு நுழைந்தது. ஆம்! 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் (1176/1200) பெற்று மருத்துவர் கனவில் இருந்த அனிதாவின் உயிரைப் பறித்து முதல் முதலாக நீட் தமிழ்நாட்டில் நுழைந்தது.

இந்தியா முழுவதும் 170க்கும் மேற்பட்ட உயிர்ப் பலிகளை ‘நீட்’ தேர்வு வாங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்குகளில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர்கள் அனைவருமே மிகவும் திறமைசாலிகள் என்று அவர்கள் பள்ளிக்கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் உறுதி செய்கின்றன.

நீட் என்பதே மோசடிகளின் மொத்த உருவம் என்பது தமிழ்நாட்டில்  நுழைந்த அன்றே உறுதி செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய நீட் ஆள்மாறாட்ட மோசடி, மருத்துவக் கல்வி வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த உதித் சூர்யா என்ற மாணவர் மீது எழுந்த சந்தேகமே இந்த ஒட்டுமொத்த மோசடியையும் அம்பலப்படுத்தியது.

மாணவரின் நுழைவுச்சீட்டில் இருந்த ஒளிப் படத்திற்கும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவரின் முகத்திற்கும் வித்தியாசம் இருப்பதை கல்லூரி நிர்வாகம் கண்டறிந்தது.

விசாரணையில், உதித் சூர்யாவிற்குப் பதிலாக வேறொரு நபர் (Proxy) நீட் தேர்வை எழுதியது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவர் வெங்கடேசன், அவரது மகன் கைது!

இந்த மோசடியின் பின்னணியில் மாணவர் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் இருந்தது தெரியவந்தது. இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

முறைகேடு அம்பலமானதும் தப்பியோடிய வெங்கடேசன் மற்றும் அவரது மகன் உதித் சூர்யா ஆகியோரை ஆந்திராவின் திருப்பதி கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சிபிசிஅய்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

தனது மகனை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைத்தரகர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த ஆள்மாறாட்டத்தை அவர் செய்ததாக ஒப்புக்கொண்டார். அதே ஆண்டு கருநாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் இது போன்ற மோசடிகள் நடந்தது உறுதியானது.

இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் நீட் தேர்வு மய்யம் நடத்தும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்பதும் விசாரணையில் உறுதியானது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவரின் ஒளிப்படத்தை மார்பிங் செய்வது, பின்னர் அந்த மாணவருக்குப் பதிலாக தேர்வெழுத மிகத் திறமையான ‘ப்ராக்ஸி’ மாணவர்களை ஏற்பாடு செய்வது இவர்களின் வேலை.

இதற்காக ஒரு மாணவரிடம் 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

உதித் சூர்யாவின் கைதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிபிசிஅய்டி விசாரணை நடத்தியது.

தருமபுரி, காஞ்சிபுரம் மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் படித்து வந்த மேலும் சில மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் (பெரும்பாலானோர் மருத்துவர்கள்) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சொற்பமே! ஆனால். நாடு முழுவதும் பலர் இதேபோன்ற (நீட் தேர்வு) மோசடியின் மூலம் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்து தற்போது மருத்துவராக உள்ளனர்.

2018ஆம் ஆண்டு மகாராட்டிராவில் நடைபெற்ற நீட் (NEET) முறைகேடு, மருத்துவக் கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மும்பை, புனே மற்றும் நாசிக் ஆகிய நகரங்களை மய்யமாகக் கொண்டு இந்த மோசடி வலைப்பின்னல் செயல்பட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மற்றும் கும்பல்கள் மாணவர்களிடமிருந்து பல லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு பல்வேறு வழிகளில் முறைகேடுகளைச் செய்தனர்.

ஆள்மாறாட்டம் செய்து தகுதியான மாணவர்களுக்குப் பதிலாக, அதிக அறிவுத்திறன் கொண்ட “டம்மி” தேர்வர்களைத் தேர்வு எழுத வைத்தல்.

தேர்வு மய்ய அதிகாரிகளுடன் கைகோர்த்து, விடைத் தாள்களைத் திருத்துதல் அல்லது சரியான விடைகளைக் குறிக்க உதவுதல்.

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றுதல்.

முக்கிய நகரங்களில் நடந்த
கைது நடவடிக்கைகள்

மகாராட்டிர காவல்துறையின் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சோதனையில் பல இடைத்தரகர்கள் சிக்கினர்.

நாசிக்கில் ஒரு முக்கிய கும்பல் பிடிபட்டது. இவர்கள் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மாணவர்களிடம் வசூலித்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த ஒரு பயிற்சி மய்யத்தின் உரிமையாளர் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

புனேவில் நடந்த சோதனையில், மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி மாணவர்களை ஏமாற்றிய ஒரு பெரிய நெட்வொர்க் முறியடிக்கப்பட்டது. சிபிஅய் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் நடத்திய சோதனையில் பல போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையில் நவி மும்பை மற்றும் பிற புறநகர் பகுதிகளில் தங்கியிருந்த இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புதுடில்லி, பீகார் மாநிலங்களில் உள்ள கும்பல்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் 2018இல் சுமார் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியமானவர்கள்: பயிற்சி மய்ய உரிமையாளர்கள், மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஆலோசகர்கள், போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த இடைத்தரகர்கள் ஆவர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராட்டிர அரசு மற்றும் சிபிஅய் இணைந்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மிகப் பெரிய அதிர்ச்சி!

2019ஆம் ஆண்டு அரியானா மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நீட் (NEET) தேர்வு மோசடி, மருத்துவக் கல்வி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில்  முதல் முறையாக காதுகளில் மெல்லிய மைக்ரோ கருவிகள் பொருத்துவது போன்ற உத்திகள் கையாளப்பட்டன.

வசதி படைத்த மாணவர்களுக்காக, மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே பயின்று வரும் மாணவர்கள் அல்லது நிபுணர்களை இடைத்தரகர்கள் ஏற்பாடு செய்தனர்.

அரியானா மற்றும் டில்லியில் உள்ள சில தேர்வு மய்யங்களில், தேர்வு எழுதும்போது கணினிகள் அல்லது வினாத்தாள்களை முன்கூட்டியே அணுகும் வகையில் முறைகேடுகள் நடந்தன.

அரியானாவின் ரோஹதக் பகுதியில் இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேர்வில் முறைகேடு செய்ய மாணவர்களிடம் தலா 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது கண்டறியப்பட்டது.

சண்டிகர் காவல்துறையினர் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர்  நடத்திய சோதனையில், தேர்வு மய்யங்களில் ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்திய கும்பல்கள் சிக்கின.

புதுடில்லி மற்றும் நொய்டா

புதுடில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு (Crime Branch) மற்றும் சிபிஅய் (CBI) இணைந்து பல இடங்களில் சோதனை நடத்தினர்.

இடைத்தரகர்கள்: டில்லி மற்றும் நொய்டாவை மய்யமாகக் கொண்டு செயல்பட்ட கல்வி ஆலோசனை மய்யங்கள் (Educational Consultancies) சோதனையிடப்பட்டன. அங்கிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நொய்டாவில் உள்ள சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தேர்வுப் பயிற்சி மய்யங்களின் உரிமையாளர்கள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர்.

மோசடியின் முக்கியப் புள்ளிகள்

கைது செய்யப்பட்டவர்கள்: இந்தச் சங்கிலித் தொடர் மோசடியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் சில மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெட்வொர்க்: இந்த கும்பல் டில்லி, அரியானா மட்டுமல்லாமல் பீகார் மற்றும் ராஜஸ்தான் (கோட்டா) வரை பரவியிருந்தது.

கரோனா பெருந்தொற்று காலமான 2020 மற்றும் 2021இல், நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நீட் (NEET) தேர்வில் சில அதிர்ச்சியூட்டும் மோசடிகள் அரங்கேறின.

2020இல் கரோனா பரவல் காரணமாகத் தேர்வு தள்ளிப்போய் நடந்தாலும், முறைகேடுகள் குறையவில்லை. பல மாநிலங்களில் தேர்வர்கள் சிறிய ரக புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி வெளியிலிருந்து பதில்களைப் பெற்றனர்.

டில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், திறமையான மாணவர்களைக் கொண்டு மற்றவர்களுக்குப் பதிலாகத் தேர்வு எழுத வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்வுக்குப் பிறகு, சில மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றதாக சான்றிதழ் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தும் விட்டனர்.

ஜெய்பூர் வினாத்தாள் கசிவு

2021-ஆம் ஆண்டு நீட் வரலாற்றிலேயே மிகக் மோசமான முறைகேடுகள் பதிவான ஆண்டாகும்.

இதில் சிபிஅய் மற்றும் பல்வேறு மாநில காவல் துறையினர் பெரிய நெட்வொர்க்குகளைக் கண்டறிந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் இருந்து வினாத்தாள் வாட்ஸ்அப் மூலம் வெளியே அனுப்பப்பட்டு, பதில்கள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு அறையின் உள்ளே அனுப்பப்பட்டன.

இது தொடர்பாகத் தேர்வு மய்ய அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் ஒரு பல் மருத்துவ மாணவி மற்றும் அவரது சகோதரர் மற்றவர்களுக்குப் பதிலாகத் தேர்வு எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெரிய ஆள்மாறாட்டக் கும்பல் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.

மகாராட்டிரா (நாக்பூர்): ஒரு மாணவருக்குப் பதிலாகப் போலித் தேர்வர் தேர்வு எழுத ரூ. 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதை சிபிஅய் அம்பலப்படுத்தியது.

மோசடி, இடைத்தரகர்கள்
கையாண்ட முக்கிய உத்திகள்!

ஒரு மாணவருக்குப் பதிலாக மருத்துவப் படிக்கும் சீனியர் மாணவர்களை  எழுத வைப்பது. இதற்கு ரூ. 20 – 50 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.

தேர்வு – அனுமதிச் சீட்டில் உள்ள மாணவர் ஒளிப்படத்தை மென்பொருள் மூலம் மாற்றி, ஆள்மாறாட்டம் செய்பவரின் முகத்தோடு ஒத்துப்போகச் செய்வது.

தேர்வு மய்யத்தின் கண்காணிப்பாளர்கள், தேர்வு நடத்தும் பள்ளி முதல்வர்களுக்குப்  பணம் கொடுத்து, வினாத்தாளைப் படம் எடுக்க அனுமதிப்பது.

2021இல் சிபிஅய் நூற்றுக்கணக்கானோர் மீது எஃப்அய்ஆர் பதிவு செய்தது. அதில் மகாராட்டிரா மற்றும் டில்லியைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பலரைக் கைது செய்தது. மோசடியில் ஈடுபட்டது உறுதியானதால் பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்கள் எதிர்காலத்தில் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

2022-2023ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த முறைகேடுகளில் ஆள் மாற்றாட்டம், தேர்வு மய்ய கண்காணிப்பாளருக்கு பணம் கொடுத்து விடை எழுத வைத்தல் போன்றவை அல்லாமல் நேரடியாக வினாத்தாள் பெறும் புதிய மோசடிக்கு மாறியது.

பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் புரோக்கர் நெட்வொர்க் மய்யமாகக் இருந்தன. இந்த இரு மாநிலங்களிலும் நீட் முறைகேடுகள் பெரும்பாலும் ஒரு சங்கிலித் தொடர் போல இணைக்கப்பட்டிருந்தன.

பாட்னா மற்றும் ராஞ்சியை மய்யமாகக் கொண்டு செயல்பட்ட கும்பல்கள், வினாத்தாள் தயாரிக்கும் நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் ‘சால்வர் கேங்’ எனப்படும் கும்பல்கள் இதில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டன.

லக்னோ, வாரணாசி மற்றும் கான்பூர் மாணவர்களின் ஒளிப்படத்தை ‘மார்பிங்’ செய்து தேர்வு அனுமதிச் சீட்டில் ஒட்டி, மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு தேர்வு எழுத வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் இடங்களைப் பெற முயன்ற புகார்களும் இங்கு எழுந்தன.

ஒடிசாவில் 2023ஆம் ஆண்டு நீட் தேர்வின் போது தொழில்நுட்ப ரீதியான மோசடிகள் கவனிக்கப்பட்டன.

சில தனியார் பயிற்சி மய்யங்கள், தேர்வு மய்ய அதிகாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, குறிப்பிட்ட சில தேர்வு மய்யங்களில் முறைகேடுகள் நடக்க வசதியாக மாணவர்களுக்கு முன்னதாகவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சத்தீஸ்கர்

வெளிமாநில மாணவர்கள் சத்தீஸ்கர் மாநில ஒதுக்கீட்டில் சேருவதற்காகப் போலி இருப்பிடச் சான்றிதழ்களைப் பயன்படுத்திய விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் எழுந்த “வினாத்தாள் கசிவு” சில சமூக வலைதளத்தில் பணம் வாங்கி வினாத்தாளை அனுப்புவது போன்ற மோசடிகள் நடந்து வந்தன. குறிப்பாக பீகார் இந்த மோசடிகளின் மய்யப் புள்ளியாகக் கருதப்பட்டது.

2024 மே 5 அன்று நடந்த தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்தன.

பீகார் (பாட்னா) மற்றும் ஜார்கண்ட் (ஹசாரிபாக்) ஆகிய இடங்களில் தேர்வு நடப்பதற்கு முன்பே மாணவர்களிடையே வினாத்தாள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சிபிஅய் (CBI) விசாரணையில், ஹசாரிபாக்கில் உள்ள ஒரு பள்ளியின் லாக்கரில் இருந்து வினாத்தாள் திருடப்பட்டு ஒளிப்படம் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும், விதிகளின்படி சாத்தியமில்லாத 718 மற்றும் 719 போன்ற மதிப்பெண்களைச் சில மாணவர்கள் பெற்றனர்.

காலதாமதமாகத் தொடங்கிய தேர்வு மய்யங்களில் இருந்த 1,563 மாணவர்களுக்கு ‘நேர இழப்பீடு’ என்ற அடிப்படையில் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை வழங்கியது. இதுவே மதிப்பெண் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

2024ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்வை, முழுமையாக ரத்து செய்யக் கோரி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

ஜூலை 2024இல் வழங்கப்பட்ட தீர்ப்பின்
முக்கிய அம்சங்கள்

முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அவை ஒரு சில குறிப்பிட்ட இடங்களோடு  நின்றுவிட்டன. நாடு தழுவிய அளவில் ஒட்டுமொத்தத் தேர்வின் தன்மையும் பாதிக்கப்படவில்லை என்று கூறி, முழுத் தேர்வையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது.

2024 முறைகேடுகளைத் தொடர்ந்து, தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள டாக்டர் கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

குறிப்பு: 2024இல் முழுத் தேர்வு ரத்து செய்யப்பட வில்லை என்றாலும், தற்போது 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த நீட் தேர்வு, முறையான பாதுகாப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரத்து செய்யப்பட்டு, சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுருக்கமாக: 2024 நீட் தேர்வு முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டாலும், அது நாடு தழுவிய “அமைப்பு ரீதியான தோல்வி” (Systemic Failure) அல்ல எனக் கருதப்பட்டதால், ஒட்டுமொத்தத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ஆனால், 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை தொடர்ந்தது.

இந்த ஆண்டின் நீட் தேர்வு

2026ஆம் ஆண்டு தேர்வு முடிந்த சில நாட்களிலேயே, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் சீகர் மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் இருந்து இந்த முறைகேடு குறித்த முதல் தகவல்கள் கிடைத்தன.

வினாத்தாள்: தேர்வுக்கு முன்னதாகவே சுமார் 410 கேள்விகள் அடங்கிய ஒரு PDF கோப்பு மாணவர்களிடையே பகிரப்பட்டுள்ளது.

அந்த PDF-இல் இருந்த கேள்விகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட கேள்விகள் (குறிப்பாக வேதியியல் மற்றும் உயிரியல்) அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போனது விசாரணையில் உறுதியானது.

பணப் பரிமாற்றம்: இந்த வினாத்தாள் தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் வரையிலும், தேர்வுக்கு முந்தைய இரவு ரூ.30,000 வரையிலும் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்வு ரத்து: மே 3 அன்று சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும், மாணவர் களின் எதிர்காலத்தைச் சிதைப்பதாகவும் கூறி, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஓராண்டு காலம் கடினமாக உழைத்த லட்சக் கணக்கான மாணவர்கள், இந்த ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீட் தேர்வின் நம்பகத்தன்மை – ஒரு கேள்விக்குறி!

2017இல் தமிழ்நாட்டில் நீட் நுழைக்கப்பட்டபோது தொடங்கிய முறைகேடுகள், இன்று வினாத்தாள் தயாரிப்பு அமைப்பின் ரகசியத் திட்டங்களையே (Blueprints) திருடும் அளவிற்கு புதிய வடிவம்  எடுத்துள்ளது கடந்த ஒன்பது ஆண்டுகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அரங்கேறிய தொடர் மோசடிகளும், அவற்றில் பாஜகவினரின் தொடர்புகள் குறித்து வெளியாகும் செய்திகளும் இத்தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மையை முழுமையாகச் சிதைத்துள்ளன.

லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் மருத்துவக் கனவைச் சுமந்து நிற்கும் போது நீட் என்ற ஒன்றை திணித்து,  அதன் மூலம் பல்லாயிரம் குடும்பத்தின் உழைப்பைச் சுரண்டுவதும், அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து தங்கு தடையின்றி நடப்பதும் பெரும் அநீதியாகும். நீட் என்ற தேர்விற்கு ஆரம்பப்புள்ளி வைத்தவர் யார் தெரியுமா? கேதன் தேசாய்!

யார் இந்த கேதன் தேசாய்?

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக கேதன் தேசாய் இருந்த போது போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க பல மருத்துவக் கல்லூரிகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் டில்லியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லங்களில் சிபிஅய் சோதனை நடத்தியது.

சோதனையின்போது தங்கம் மற்றும் வெள்ளி: சோதனையில் சுமார் 1.5 கிலோ தங்கம் மற்றும் 80 கிலோ வெள்ளி அவரது வசம் இருந்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

பணம் மற்றும் ஆவணங்கள்: அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துக்கள் தொடர்பான விவரங்கள் கைப்பற்றப்பட்டன.

சிபிஅய் தாக்கல் செய்த அறிக்கையின்படி, அவரது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது வீட்டில் பணம் எண்ணுவதற்கு மூன்று டஜன் பணம் எண்ணும் கருவிகள் வரவழைக்கப்பட்டன.

தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கண்டெய்னர்களில் ஏற்ற கிரேன் வரவழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து, அன்றைய ஒன்றிய அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது.

இருப்பினும், பிற்காலத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ,மோடி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

2016இல்  மோடியின் நிர்வாகத்தின் கீழ் உலக மருத்துவச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் இப்படி ஒருவர் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த போது தான் நீட் தேர்விற்கு ஆரம்பப் புள்ளி வைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *