தந்தை பெரியாரை வீழ்த்த சத்ரு சம்ஹார யாகம் செய்து வீழ்ந்திட்ட திருவிதாங்கூர் மன்னர் நடத்திய யாக வரலாற்றைத் தெரிந்திடல் வேண்டும்.
நடிகர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. யாரோ ஒரு மலையாள ஜோதிடர் எதிரிகளை வீழ்த்தவும், தடைகளைத் தகர்க்கவும் சத்ரு சம்ஹார யாகம் செய்யக் கூறினாராம்.
தேர்தலின்போது முட்டிக்கால் போட்டு அந்தோணியார் கோவிலின் கும்பிட்ட விஜய் தேர்தல் முடிந்த பிறகு யாகம் நடத்துகிறார்.
இந்த யாகத்திற்குப் பின்னால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு சுவாரசியமான வரலாற்றுச் சம்பவம் ஒளிந்திருக்கிறது.
1924ஆம் ஆண்டு கேரளா மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு இருந்த தடையை நீக்க ‘வைக்கம் போராட்டம்’ நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க காந்திஜியின் அழைப்பை ஏற்று பெரியார் கேரளாவிலுள்ள வைக்கத்திற்குச் சென்றார்.
தந்தை பெரியாரின் வருகையும், அவரது ஆவேசமான உரைகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தின. இதனால் பெரியார் கைது செய்யப்பட்டு ‘அருவிக்குத்தி’ சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்ரு சம்ஹார பூஜை
இதைப்போல் நடைபெற்ற பல யாகங்களைச் செய்தவர்களின் கதியையும் தங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மகிந்த ராஜபக்சே, ஜெ.ஜெயலலிதா, சசிகலா, தினகரன், திவாகரன், சுதாகரன். கோத்தபய ராஜபக்சே, அண்மைக்காலத்தில் யாகம் நடத்திய எடப்பாடி, முன்னும் – பின்னுமாக பன்னூரு யாகங்கள். தங்களுக்கு அறிவூட்ட அடுக்கிக் காட்ட முடியும். இப்போதைக்கு இது போதும் என நிறுத்துகிறோம்.
பெரியாரை ஒழிக்க மன்னர் ஆணைப்படி சத்ரு சம்ஹார யாகம் நம்பூதிரிப் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டது.
பெரியாரின் போராட்டத்தாலும், அவரது கொள்கைப் பரவலாலும் ஆத்திரமடைந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர், அவரை நேரடியாக ஒடுக்க முடியாமல் ஆன்மீக வழியை நாடினர். பெரியார் அழிய வேண்டும் என்பதற்காகத் திருவிதாங்கூர் அரண்மனை சார்பில் பிரம்மாண்டமான சத்ரு சம்ஹார யாகம் தொடங்கியது.
“தந்தை பெரியார் எனும் அந்த ‘சத்ரு’ (எதிரி) ஒழிய வேண்டும், போராட்டம் நீர்த்துப் போக வேண்டும்” என்பதே அந்த யாகத்தின் நோக்கமாக இருந்தது.
யாகத்தின் விளைவு: வரலாறு தந்த திருப்பம்!
யாகம் நடந்து முடிந்த சில நாட்களில் சமஸ்தானத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தது உண்மைதான். ஆனால், சிறையில் இருந்த தந்தை பெரியாருக்கு ஒரு சிறு துரும்பு கூட கேடு நிகழவில்லை. மாறாக, அந்த யாகத்தை முன்னின்று நடத்திய திருவிதாங்கூர் மகாராஜா சிறீ மூலம் திருநாள் ராமவர்மா காலமானார் என்று செய்தி அறிவிக்கப்பட்டது.
“ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், அதன் இளைஞர்களின்
சிந்தனையை அழித்துவிடுங்கள்!”
– விளாடிமிர் லெனின்
ஒன்றியத்தில் பா.ஜ.க. (அரசு) மிகச் சரியாக 11 ஆண்டுகளாக சுயநலம் மட்டுமே கொள்கையாகக் கொண்டு இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்களை சிந்திக்க விடாமல் வன்முறையாளர்களாக மாற்றி வருகிறது.

தந்தைபெரியார் போராட்டக்களத்தில் மேலும் வலிமை பெற்றார். வெற்றி பெற்றார். ‘வைக்கம் வீரர்’ என்று பட்டம் சூட்டி புகழப்பட்டார்.
மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு தலைவனின் உறுதியை மூடத்தனத்தில் உருவான எந்த யாகத்தாலும் அசைக்க முடியாது என்பதற்கு இந்த வைக்கம் வரலாற்றுச் சம்பவம் ஒரு சான்று.
நடிகர் விஜய்யின் இன்றைய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், பழைய வரலாற்றைத் தோண்டிப் பார்க்கும் போது, சத்ரு சம்ஹார யாகம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது அதிகாரத்திற்கும் போராட்டத்திற்கும் இடையிலான ஒரு நீண்ட கால மோதலின் அடையாளமாகவும் திகழ்கிறது.
யாகம் வளர்க்கத் தொடங்கும் முன்பு உங்கள் பின்னால் இருக்கும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களை அகற்றிவிடுங்கள். அதுவே அறிவு நியாயமாகும்.
