புதுடில்லி, மே 21 உலக அளவில் மிகவும் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற சமூக ஊடகத் தளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது பன்னாட்டளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது கவனத்தை ஏஅய் தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பி, அதில் விரைந்து முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே மெட்டா நிறுவனம் இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சிங்கப்பூரில் உள்ள மெட்டா அலுவலக ஊழியர்களுக்கு நேற்று (20.5.2026) அதிகாலை 4 மணியளவில் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேபோல அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அதே நாளில் மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு முடித்துக்கொள்ளப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கை யைத் தொடர்ந்து, தற்போது பணியில் தொடரும் எஞ்சிய மெட்டா ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு நிறு வனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், குறிப்பாகப் பொறியியல் துறையைச் சேர்ந்த ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
