சென்னை, மே 21- இணையவழி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 40,000 மருந்தகங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மருந்துகளை வாங்க சில கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேள அழைப்பின் பேரில் இந்த ஒரு நாள் அடையாளக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
மருத்துவர்களின் முறையான பரிந்துரைச் சீட்டுகள்இன்றி ஆன் லைனில் மருந்துகள் விற்கப்படுவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக மாறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக மருந்துச் சீட்டுகளை உருவாக்கி, அதன் மூலம் வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகள் ஆன்லைனில் எளிதாகப் பெறப்படுகின்றன. இது இளைஞர்களைப் போதைப்பக்கத்திற்கு ஈர்க்கிறது.
புற்றுநோய், இதய நோய் போன்ற தீவிர பாதிப்புகளுக்கான உயிர் காக்கும் மருந்துகளில் கூட இணையவழியில் தரமற்ற மற்றும் போலி தயாரிப்புகள் பரவத் தொடங்கியுள்ளன.
இந்த 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற் படாமல் தடுக்க தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
முதலமைச்சரின் மருந்தகங்கள், கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் பிரதமரின் ‘ஜன அவுஷதி’ மையங்கள் வழக்கம் போல் இயங்கின. தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்ய மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
மருந்து தட்டுப்பாடு ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 69 மருந்து ஆய்வாளர்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஒட்டியுள்ள மருந்தகங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைச் சங்கிலித் தொடர் மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கியதால், அவசரத் தேவைகளுக் கான மருந்து விநியோகத்தில் பெரும் முடக்கம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வணிகர்களின் கோரிக்கைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாகக் காலவரையற்ற கடை யடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என வணிகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
