புதுடில்லி, மே 14- சிபிஎஸ்இ (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (13.5.2026) பிற்பகல் 1.40 மணிக்கு வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு சுமார் 18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். இது சிபிஎஸ்இ வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கை யாகும். ஆனால் தேர்ச்சி விகிதமோ கவலையளிக்கும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2025ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 88.39% ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 85.20% என மிக மோசமான அளவில் குறைந்துள்ளது. இது 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவாகும். இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி 88.86% அளவிலும், மாணவர்கள் தேர்ச்சி 82.13% அளவிலும் உள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 6.73% சிறப்பாக மதிப்பெண் எடுத்துள்ளனர்.
2021இல் கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது 99.37% தேர்ச்சி பதிவானது. இதுவே மிக உயர்ந்த அளவாகும். 2022இல் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் இரண்டு பருவங் களாக நடத்தப்பட்டபோது 92.71% தேர்ச்சி பதிவானது. 2023இல் 87.33%, 2024இல் 87.98% என தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடுமையாகச் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் காரணமாம்!
முதன்முறையாக இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது. இது டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் திரைவழி மதிப்பெண் வழங்கும் முறை ஆகும். 98.67 லட்சம் விடைத்தாள்கள் 70,000 மதிப்பீட்டாளர்களால் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டன. இதற்காக 6,000 மய்யங்களில் சுமார் 88,000 கணினிகள் பயன் படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ கூறுகையில், “ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறையினால் விடைத் தாள்களைக் கையாளு வதில் ஏற்படும் மனிதத் தவறுகள் குறைக்கப்பட்டு, முடிவுகள் மிகவும் துல்லியமாக உள்ளன. விடைத்தாள்களைக் கூட்டுவதில் அல்லது மதிப்பெண்களைப் பதிவேற்றுவதில் ஏற்படும் பிழைகள் நீக்கப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் முறையால் 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்து இருக்கலாம் என சிபிஎஸ்இ தரப்பில் மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
