புதுடில்லி, ஜூன் 10- மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியலமைப்பு;r சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மக்களவையில் தோல்வியடைந்தது. இருப்பினும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான மற்றொரு மசோதாவும் இன்னும் மக்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களை ஒன்றிய அரசு இன்னும் திரும்ப பெறாததே இதற்குத் காரணமாகும்.
இத்தகைய அரசியல் சூழலுக்கு இடையே, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது ஆளும் பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸில் உட்கட்சி பூசல்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆளும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மறுபுறம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்த 10 எம்பிக்களில் 7 பேர் ஏற்கெனவே தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மாநிலங்களவையிலும் ஆளும் பாஜகவின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மசோதாக்கள் மீண்டும் வர வாய்ப்பு
எதிர்க்கட்சிகளின் பலவீனம் மற்றும் ஆளும் தரப்பின் பலம் அதிகரிப்பு காரணமாக, புதிய அரசியல் நகர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. வரும் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தும் வகையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவும் தொகுதி மறுவரையறை மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
