புதுடில்லி, ஜூலை 14– “குடியுரிமை மற்றும் அந்நியர் தகுதி ஆகியவை மிக உயர்ந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்தவை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குடியுரிமை விவகாரம் குறித்து நீதிபதிகள் அமர்வு நேற்று (13.7.2026) குறிப்பிட்டுள்ளதாவது:
“இந்திய குடியுரிமையைக் கோர சட்டப்பூர்வ உரிமை இல்லாதவர்கள், நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி குடியுரிமைத் தகுதியைப் பெறுவதைத் தடுப்பதில் அரசுக்கு நியாயமான மற்றும் வலுவான அக்கறை உள்ளதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. இருப்பினும், அரசின் இந்த அக்கறையானது நீதித்துறையின் நியாயத்தன்மைக்கு மேலானதாக இருக்க முடியாது.
கவுகாத்தி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களால் இவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்நியர்கள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கு எதிராக தீர்ப்பாயங்கள் மீண்டும் விசாரணை நடத்தும்வரை இவர்களுக்கு எதிராக எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது. மனுதாரர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை நாங்கள் ஆய்வு செய்யவில்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.
அசாமைச் சேர்ந்த மனுதாரர்கள் தாங்கள் இந்தியர்கள் என்றும், பழைய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள், முரண்பாடுகள் போன்ற நுணுக்கமான சில காரணங்களால் தாங்கள் அந்நியர்களாக அறிவிக்கப்பட்டதாக முறையிட்டனர்.
மேலும், 1971-க்கு முந்தைய மரபுவழித் தரவுகள், வாக்காளர் பட்டியல்கள், நில ஆவணங்கள் போன்ற ஆவணங்களை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித் திருந்தனர். தற்போது இவர்களின் குடியுரிமை தொடர்பாக தீர்ப்பாயங்கள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருப்பதன் மூலம் இவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்திருக்கிறது.
