தமிழ்நாட்டைக் காவிமயமாக்கும் முயற்சி தடுப்பு! சுயமரியாதை, சமூகநீதி மண்ணாகவே தமிழ்நாடு தொடரட்டும்!

2 Min Read

முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்!
‘‘ஆக்க ரீதியான எதிர்க்கட்சியாகப் பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று
அரசியல் முதிர்ச்சியுடன் அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!
நிலைமையையொட்டி சரியான முடிவை எடுத்த கட்சிகளுக்குப் பாராட்டு!

முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்! ‘‘ஆக்க ரீதியான எதிர்க்கட்சியாகப் பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று அரசியல் முதிர்ச்சியுடன் அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நிலைமையையொட்டி சரியான முடிவை எடுத்த கட்சிகளுக்கும் பாராட்டு! தமிழ்நாட்டைக் காவிமயமாக்கும் முயற்சி தடுப்பு! சுயமரியாதை, சமூகநீதி மண்ணாகவே தமிழ்நாடு தொடரட்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (9.5.2026) மாலை தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் திரு.அர்லேகர் அவர்களின் தேவையற்ற, நீண்ட அலைக்கழிப்புக்குப் பின்னர் – தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்று (107) தனிப் பெரும் கட்சியாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அக்கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட, ஆளுநர் கேட்ட 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றுள்ள, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து,முதலமைச்சராக நியமனம் செய்து ஆணை பிறப்பித்தார்.

இன்று (10.5.2026) காலை பதவியேற்ற மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
முடிவுக்குப் பாராட்டு!

‘‘மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்று, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகப் பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று மிகத் தெளிவான பார்வையுடனும், நேர்மையோடும் கூறியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் – ‘‘அவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கையிலிருந்து அணி மாறவில்லை; கொள்கைக் கூட்டணியாக தி.மு.க.வுடன் தொடருவோம்’’  என்று அறிவித்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் நமது பாராட்டுகள்!

தி.மு.க.வின் கொள்கைக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் ம.தி.மு.க., தே.மு.தி.க., ம.ம.க., ம.ஜ.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் நமது பாராட்டுகள்!

காவி மயம் முறியடிக்கப்பட்டது!

இந்தச் செறிவான முடிவினால், தமிழ்நாட்டினைக் காவி மயமாக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மதவாதச் சக்திகளுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இடந்தராமல், தமிழ்நாடு சமூகநீதி, சுயமரியாதை, சமதர்ம மண்ணாகவே என்றும் இருக்கும் என்று பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *