‘இரட்டை என்ஜின்’ ஆட்சிகளில் ‘ஒற்றை இலக்க’ பொருளாதார வளர்ச்சி –
‘ஒற்றை என்ஜின்’ ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ‘இரட்டை இலக்க’ பொருளாதார வளர்ச்சி!
வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு – குறுகிய நிலையில் பார்க்காமல்
நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், எவரும் வாழ்த்தியே ஆகவேண்டும்!
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும்-முதலமைச்சருக்கும் பாராட்டு கலந்த வாழ்த்துகள்!
நிதி மேலாண்மையில் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சிகளில் ஒற்றை இலக்க வளர்ச்சி – ‘ஒற்றை என்ஜின்’ ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி! வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு – குறுகிய நிலையில் பார்க்காமல், நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், எவரும் வாழ்த்தியே ஆகவேண்டும்! ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு கலந்த வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு
தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத் திறமைக்கும், சொல்லால், எழுத்தால் அல்ல – செயலால் சாதித்து, வெற்றிக் கொடி நாட்டிடும் ஆட்சி என்பதற்கும் ‘பளிச்’சென்ற எடுத்துக்காட்டுக்கு அதன் பொருளாதாரத் துறை வளர்ச்சி!
தமிழ்நாடு அரசின் சென்ற ஆண்டு பெருமிதத்திற்குரிய வளர்ச்சி விகிதம் 10.2% என்பதிலிருந்து 2025–2026 ஆம் நிதியாண்டில், 10.83% வளர்ச்சி விகிதத்தினை எட்டியுள்ளது இனிப்பான செய்தியாகும்! திராவிட மாடலின் வெற்றிக்கு ஒரு கண்கூடான களம் ஆகும்!
நிதி மேலாண்மையில் தனித்துவம் பெற்ற ஆட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒளிருகிறது!
நிதி மேலாண்மையில் எப்படி தனித்துவம் பெற்ற ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒளிருகிறது என்பதற்கு, திட்டமிட்டு அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியே (Inclusive Growth) உகந்ததோர் அளவுகோல் ஆகும்!
இந்தியாவின் தேசிய சராசரி வளர்ச்சி 7.4 சதவிகிதம்தான்! ‘ஒற்றை’ இலக்கத்துக்குள் அடக்கம். ‘இரட்டை என்ஜின் ஆட்சிகளால்தான் சாதனை செய்ய முடியும்’ என்று பிரதமர் மோடி முதல் அவரது ‘சுற்றுக்கிரகங்கள் வரை’ எசப்பாட்டுப் பாடுவது, வழக்கம்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை சரித்திரம்!
அதனைச் செயலில் முறியடித்து, ஒற்றை என்ஜின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சாதித்து, இந்திய நாட்டின் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்பது, முதலமைச்சரின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைச் சரித்திரம்!
அவ்வாட்சியின் ஆட்சிக் கிரீடத்தில் அமைந்துள்ள சிறப்பு ஒளிமுத்து அல்லவா?
நிதி மேலாண்மை, ஆளுமையின் ஒரு முக்கிய அம்சம்!
எப்படி இந்த இரட்டை இலக்கச் சாத னையை, ஒற்றை என்ஜின் அரசான ‘திராவிட மாடலால்’ சாதித்துக் காட்ட முடிந்தது என்பதை ஆராய்ந்தால், கல்வி – மருத்துவம் போன்ற வாழ்வாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள துறைகளுக்குச் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகளை ‘‘செலவினம்’’ என்று கருதாமல், சமூக வளர்ச்சிக்கான ‘‘முதலீடு’’ என்று கருதிச் செலவிட்டும், சரியாகத் திட்டமிட்டும், பொருளாதார வல்லுநர்களின் வழிகாட்டும் நெறிமுறைகளையும் கலங்கரை விளக்காக்கியும் ஆட்சி நடத்திய 5 ஆண்டு வளர்ச்சியின் வேகமும், வேலை வாய்ப்புக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கால்கோள் விழா நடத்தி, கடும் முயற்சிகளால் தமிழ்நாட்டின் தொழில் வரைபடம் முற்றாக மாறியுள்ளதன் வெளிச்சமுமே இது!
இதற்கு முன்பு ஆண்ட எடப்பாடியார் ஆட்சி யில், இது எத்தனை சதவிகிதம்? வாங்கிய கடன், நிதி மேலாண்மையின் லட்சணம் இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு புறம். காலியான கஜா னாவையும், கடன் உள்ள அரசையும்தானே தந்து விட்டுப் போனது முந்தைய அ.தி.மு.க. ஆட்சி!
அதைவிட முக்கியம் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியின் சராசரி 7.4 சதவிகிதம்.
ஒற்றை என்ஜின் – அதுவும் பல நிதி மறுப்புத் தடங்கல்களையெல்லாம் தாண்டித்தான் இந்த இரட்டை இலக்க சாதனை!
தெளிந்த பொருளாதார அறிவும், புரிதலும் உள்ள எவரும் இதற்காகத் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாராட்டியே தீருவர்.
தமிழ்நாடு – பெரியார் மண் –
திராவிட உணர்வு நிலம்!
தமிழ்நாடு ஜாதிக் கலவரம், ‘‘மதக் கலவரம் இல்லா அமைதிப் பூங்காவாக’’த் திகழும் பெரியார் மண் – திராவிட உணர்வு நிலம் என்பது ஒரு முக்கிய அடிப்படைக் காரணமல்லவா?
இந்த ஒப்பற்ற சாதனைக்காக முதலமைச்சரைப் பாராட்ட மனமில்லாதவர்களும்கூட, தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், பாராட்டியே தீரவேண்டியவர்கள் ஆவார்கள்.
எவரும் வாழ்த்தியே ஆகவேண்டும்!
இதனை வெறும் ஓட்டுக் கண்ணோட்டத் தோடு – குறுகிய நிலையில் பார்க்காமல், நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், வாழ்த்தியே ஆகவேண்டும் எவரும்! முதலமைச்சர் கூறியுள்ளதுபோல, “எண்ணற்ற சாதனைகளை எண்களாகவும் செய்து காட்டும் எடுத்துக்காட்டு ஆட்சியே ‘திராவிட மாடல்’ ஆட்சி” ஆகும்.
பாராட்டு கலந்த வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.4.2026

