வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்!

6 Min Read

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் பெறும் நன்கொடைகளுக்கு என்ன கணக்கு?
சிறுபான்மையினரின் நலன்களைக் குறி வைப்பதே FCRA- திருத்த மசோதாவின் நோக்கம்!
சாதாரண ஏழை, எளிய மக்களையும் கடுமையாக பாதிப்பதாக அமையும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் பெறும் நன்கொடைகளுக்கு என்ன கணக்கு? சிறுபான்மையினரின் நலன்களைக் குறி வைப்பதே FCRA- திருத்த மசோதாவின் நோக்கம்! சாதாரண ஏழை, எளிய மக்களையும் கடுமையாக பாதிப்பதாக அமையும். வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:!

இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் (NGOs) வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியையும், நன்கொடைகளையும் ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும், ஏற்கெனவே உள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்த மசோதா (FCRA Amendment Bill) ஒன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால்  கடந்த மார்ச் மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கம் முதலே இந்த மசோதாவில் உள்ள ஆபத்தை நாம் சுட்டிக் காட்டி வருகிறோம்.

சாதாரண ஏழை, எளிய மக்களையும்
கடுமையாக பாதிப்பதாக அமையும்!

இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் சிறுபான்மை யினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதேயாகும். ஆனால், சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்கள் மட்டுமல்ல. இந்தியாவில் செயல்பட்டுவரும் மதச்சார்பற்ற தொண்டு நிறு வனங்கள் உள்பட பலரையும் கடுமையாகப் பாதிப்ப தாகும். மேலும் அதன் விளைவுகள், அந்த தொண்டு நிறுவனங்களை நடத்துவோரை மட்டுமல்ல, அதனால் பலன் அடைந்துவரும் சாதாரண ஏழை, எளிய மக்களையும் கடுமையாக பாதிப்பதாக அமையும்.

அரசின் பெயரால் அபகரிப்போம் என்பது என்ன நியாயம்?

எஃப்.சி.ஆர்.ஏ.வில் பதிவைப் புதுப்பிப்பது உள்ளிட்டவற்றைக் கடுமையாக்கி, தங்கள் கையில் கொண்டுவந்துவிட்டு, அப்படி பதிவைப் புதுப்பிக்க முடியாத, தாமதமாகும் நிறுவனங்களில், முன்பு வெளிநாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் உள்பட, எல்லாவற்றையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கி றது பா.ஜ.க.! இதனால், நாடு முழுவதும் எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கான கட்டடங்கள் செயல்பட முடியாமல் போகும்? வெளிநாட்டு நிதியில் இனி கட்டடம் கட்டக் கூடாது என்று சொல்வதைக் கூட நாம் கேள்வி எழுப்பலாம் – விவாதிக்கலாம். ஆனால், முன்பிருக்கும் கட்டடங்களையும் செயல்பட அனுமதிக்க மாட்டோம்; அவற்றை அரசின் பெயரால் அபகரிப்போம் என்பது என்ன நியாயம்?

இது குறித்து கடந்த ஜூலை 4 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவிலும், ஒன்றிய அரசின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி, இந்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

“சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை வளர்த்தெ டுப்பதில் கிறித்துவ தொண்டு நிறுவனங்களின் பங்க ளிப்பை எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

இன்றைய ஒன்றிய பி.ஜே.பி. அரசைப் பொறுத்த வரையில் சிறுபான்மையினத்தவர் மீதான வெறுப்பு எத்தகையது என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்றே!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 (CAA – Citizenship Amendment Act) மற்றும் என்.ஆர்.சி. (National Register of Citizens) போன்ற சட்டங்களும் இதே நோக்கம் கொண்டவையே!

இந்தியா என்பது ஒரே நாடல்ல – ஒரு துணைக் கண்டம்; பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழி கள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், தட்ப வெட்ப நிலைகளைக் கொண்டதாகும்.

ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசியம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் ஹிந்து ராஜ்ஜியம் அமைப்பு என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் இலக்காகும். இந்தக் கொள்கையைக் கொண்ட ஒன்றிய அரசு, சிறுபான்மை மக்களைக் குறி வைத்துத் தக்குதல் நடத்துவது, அவர்கள் கூறும் ‘‘தேசியத்திற்கே’’ ஊறுவிளைவிக்கக் கூடியது என்று இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி, நன்கொடை பெறுதல் போன்றவற்றிற்குச் சட்ட ரீதியான விதி முறைகள் ஏற்கெனவே இருக்கத்தான் செய்கின்றன. தவறுகளைக் களைதல் என்ற சாக்கில் உரிமைப் பறிப்பு – கடும் தண்டனைகளும், அச்சுறுத்தலும் ஏன்?

நியாயமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்!

இதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிறு பான்மை மக்களும், பொது நிலையில் உள்ளவர்களும் இந்தச் சட்டத்தை நாடு தழுவிய அளவில் எதிர்த்து வருவது நியாயமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

அதே அளவுகோல், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களுக்கு வெளிநாடுகளிலிருந்து குவியும் நன்கொடைகள், வரவுகளுக்கு  உண்டா? என்ற கேள்வி எழுகிறதே – வெளிநாடுகளில் இவர்கள் எப்படியெல்லாம் நிதி திரட்டுகிறார்கள், அதைப்பற்றிய கண்காணிப்புகளும், ஒழுங்குமுறைகளும், வரையறைகளும் இல்லை என்பதிலிருந்தே ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வந்துள்ள இந்த FCRA சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘பி.எம்.கேர் ஃபண்ட்’ என்ற ஒன்றை, ஒன்றிய பி.ஜே.பி. அரசு உருவாக்கி வைத்துள்ளது. இதற்கு வந்து குவியும் நிதிகளுக்குக் கணக்கு வழக்குக் கிடையாது. வெளிப்படைத்தன்மை என்பது இல்லை. சி.ஏ.ஜி. என்ற இந்தியத் தலைமைக் கணக்குக்கு உட்பட்டதும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் (RTI) உட்பட்டதில்லை.

இந்த இலட்சணத்தில், இந்திய ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளால் நடத்தப்படும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அறப்பணிகளை மறை முகமாக முடக்குவது கண்டிக்கத்தக்கது. கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் ஒன்று திரண்டு ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மதவாதக் கண்ணோட்டத்தோடு கொண்டு வரப்பட்டுள்ள FCRA சட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது” என்ற நமது தீர்மானம், இம் மசோதாவின் உள்நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ். தான் உலகின் மிகப் பெரிய
என்.ஜி.ஓ., என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமை பேசினாரே! அந்த என்.ஜி.ஓ.வின் கணக்கு வழக்கு என்ன? குறைந்தபட்சம் அந்த அமைப்பு பதிவாவது செய்யப்பட்டுள்ளதா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இதைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் சொல்கிறார்? “அரசாங்கங்களும், நீதிமன்றங்களும் எங்களை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரித்துள்ளன. எனவே, நாங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. பல விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை, இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை” என்பது தானே அவரது பதில்!

‘‘இந்து மதம் பதிவு செய்யப்படவில்லையே, அது போலத் தான் நாங்களும்’’ என்று சொல்கிறாரே! பதிவே செய்யப்படாத அமைப்பு, எப்படி உலகின் மிகப் பெரிய என்.ஜி.ஓ. என்று பிரதமர் சொல்கிறார்? ‘குரு தட்சணை’ என்ற பெயரில் ஒவ்வோராண்டும் அவ் வமைப்புக்குக் குவியும் பணத்துக்கு ஏது கணக்கு?

பன்வர் மெக்வன்சி எழுதிய புத்தகத்தில்!

ஆர்.எஸ்.எஸ்.சில் இயங்கி, பிறகு அதன் சூழ்ச்சிகள், ஜாதிவெறி இவற்றையெல்லாம் அறிந்து வெளியில் வந்து ‘நான் இந்துவாக இருக்க முடியாது’ என்ற புத்தகத்தை எழுதிய பன்வர் மெக்வன்சி, எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல், வங்கி நடைமுறைகள் இல்லாமல், வடநாட்டு பனியாக்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குச் சேரும் நிதி எவ்வாறு கையாளப்படுகிறது என்ற தன் அனுபவத்தை எழுதியுள்ளாரே, இது தானே உண்மை நிலைமை?

ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், வெவ்வேறு பெயர்களில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வரும் நிதி குறித்து, முன்பு ‘ஃப்ரண்ட்லைன்’ உள்ளிட்ட ஏடுகள் அம்பலப்படுத்தியுள்ளனவே! அவற்றையெல்லாம் குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலும் இல்லை என்பதே, ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறதே! இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் வெளிநாட்டி லிருந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது; அந்த நோக்கத்துடன் நிதி வருவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டமே ஒழிய, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் நிதி பெற்று, இந்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் அல்ல.

 நமது வேண்டுகோள்!

ஆனால், ஒன்றிய பா.ஜ.க. கொண்டு வரும் இந்தத் திருத்த மசோதா, இந்திய இறையாண்மையைக் காப்பதற்கானது அல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., அதன் சார்பு அமைப்புகள் தவிர, மற்ற அமைப்புகளை நசுக்கும் நோக்கத்துடனானது; எளிய மக்களைப் பாதிக்கும் நோக்கத்துடனானது. உடனடியாக இச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பா.ஜ.க. அரசை ஆதரிக்கும் கட்சிகளும், இதனை உணர்ந்து இம் மசோதாவை ஆதரிக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோளாகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

9.8.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *