* கொள்கைக்கு என்றும் தோல்வியில்லை! * ஒரு மாத காலத்தில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்!
* இயக்கம் என்பதன் மெய்ப்பொருள் இயங்கிக் கொண்டிருப்பதே!
கொள்கைக்கு என்றும் தோல்வியில்லை! ஒரு மாத காலத்தில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்! இயக்கம் என்பதன் மெய்ப்பொருள் இயங்கிக் கொண்டிருப்பதே! குறைந்தபட்சம் ஆயிரம் இளைஞர்கள், அறப்போராட்டக் கள வீரர்கள்: பட்டியலிட்டுத் தாருங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நமது இயக்கம் திராவிடர் கழகம் ஒரு கொள்கைப் பாசறை! சோர்வறியா கடமை அணி! கொள்கைப் போராளியாகவே நம்மை வரித்துக் கொண்டவர்கள் நாம்! தலைமையின் கட்டளையை எதிர்நோக்கி, மாளாத பணியாக இருப்பினும் மனங்கோணாது நின்று கொள்கை எதிரிகளை சந்திக்க அஞ்சாத, பகை வெல்லும் படைக் கூட்டம்! மானம் பாரா, நன்றி பாராத நல்லியக்கம்!
பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அணியை
அறவே துடைத்தெறிந்து விட்டனர்!
சட்டமன்றத் தேர்தல் தோல்வி – நமக்கு ஏமாற்றம் தான் என்றாலும், அது தேர்தல் தோல்வியே தவிர, கொள்கைத் தோல்வியாக அமையவில்லை; பெரியார் மண் அதில் மிகவும் கவனச் சிதறல் இல்லாமல், பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அணியை அறவே துடைத்தெறிந்து விட்டனர்!
அவர்கள் ஆறுதலுக்காக ஒன்றே ஒன்று!
அதுபோல, தன்னை மிஞ்சியவர் எவரும் இல்லை என்று பெரியாரைப் பிழைத்த ஒரு கட்சியும், 234 தொகுதிகளிலும் தேர்தலில் மண்ணைக் கவ்வியதோடு, ஒரு வாரம் மூச்சுப் பேச்சற்றுக் கிடந்து, இன்று வழக்கமான அதன் கேமிரா காட்சிகள் மீண்டும் அரிதாரம் பூசாமல் – ‘வழக்கமான வில்லத்தனத்தோடு’ ஜாதி ஆதரவுக் குடையின்கீழ் நின்று ‘வீர வஜனம்’ பேசுகிறது!
‘‘பழைய ஆட்சியின் நிலைப்பாடுதான்
எமது ஆட்சியிலும்!’’
‘தி.மு.க. ஆட்சி, திராவிடம் வீழ்ந்தது’ என்று இறுமாப்புடன் ஏகடியம் பேசிய ஆரிய ஏடுகளும், அதன் அடிவருடிகளும், ‘இன்னமும் பெரியார் திடலா?’ தி.மு.க. ஆட்சித் திட்டங்களையே தான் இன்றைய ஆட்சியும் தொடருகிறது என்று சலித்துக் கொள்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சினையை மதவெறிப் பிரச்சினையாகப் பயன்படுத்த எண்ணியவர்கள், ‘‘பழைய ஆட்சியின் நிலைப்பாடுதான் எமது ஆட்சியிலும்’’ என்று கூறியது கேட்டு, எரிச்சலாகி உள்ளனர்!
திராவிடர் கழகத்திற்கு 1000 பேர்கூட இல்லையாம்; ஒரு பார்ப்பன நாளேடு எழுதுகிறது! உருவுகண்டு எள்ளாமை வேண்டும்!
‘‘உப்பு – கடுகு போல வெகு சிறிதுதான்!’’
ஆனால், ‘‘அது இல்லாத பண்டம் குப்பையில்தான்’’ என்ற எளிய பழமொழியைக்கூட அறியாத அறிவு(உலக்கை)க் கொழுந்துகள்! அவர்களால் உண்மையைக் காண முடியாது; ஏனெனில், அவர்கள் கண்ணிருந்தும் காமாலைக் கண்ணர்கள்.
கழக வீரர்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டான கருஞ்சட்டை இராணுவ வீரர்கள்!
தோல்விகளை வெற்றிகளாக மாற்றிடும் துவளாத போர் வீரர்கள் – வீராங்கனைகள்!
தேர்தல் முடிவு ஏமாற்றம்தான், அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால், ஒரு சிறு இடைவெளி. அதிலும் தேர்தல் தோல்வி என்பது கொள்கை லட்சியத் தோல்வி அல்ல என்பது மறுக்க முடியாத உண்மை! பக்குவப்பட்ட அனுபவவாதிகள் அறிந்த உண்மை!
தந்தை பெரியார் எழுதிய வரிகளுக்கேற்ப…
நம் ஆசான் தந்தை பெரியாரின் காலத்திலேயே இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், “இந்தத் தோல்வியை வெற்றியாக மாற்றிக் காட்டுவது எப்படி என்பதை அறிந்தவர்கள் நாங்கள்” என்று அய்யா எழுதினார். எனவே, அய்யா அவர்களின் வரிகளுக்கேற்ப, நாம் இத்தோல்வியை வெற்றியாக்கிக் காட்டுவோம்!
இது வெறும் வாய் வக்கணை அல்ல; தொடர் செயல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வரும் நிதர்சன உண்மைகள்!
திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகள்!
தேர்தல் முடிவுகளுக்குப் பின் திராவிடர் கழகத்தின் ஒரு மாதச் செயல்பாடுகளைக் கொஞ்சம் நினைவூட்டிப் பார்க்கட்டும் பரிகசிக்கும் ‘பசை பிடித்த அறிவுக் குட்டைகள்.’
- ஒகேனக்கல், கல்லக்குறிச்சியில் இளம் மாணவ, மாணவியர்களுக்கு வழமையான பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்.
- ‘நீட்’ தேர்வு மோசடிக்கு எதிராக, மே 16, 2026 அன்று திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியது.
- மேகதாது அணை கட்டி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தராமல், தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கிடத் துடிக்கும் கருநாடகக் காங்கிரஸ் அரசைக் கண்டித்து 31.05.2026 அன்று டெல்டா பகுதியான திருவாரூரில் மாபெரும் கண்டனப் போராட்டம்!
- திராவிடர் எழுச்சி நாளாக ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்த நாள் (3.6.2026) விழாவினைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் 103 பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
அதில் யாம் கொண்ட மகிழ்ச்சியோ கொள்ளை கொள்ளை! கழகக் கொள்கைக் குடும்பத்துப் போராளிகள் மகிழ்ச்சி கலந்த புன்னகை தவழ, தலைமையின் தொடர் வேண்டுகோளை கட்டளையாக்கி, கடமையாற்றிடும் பாங்கு, இயக்கத்தின் தனித்தன்மை!
ஒரு வார அறிவிப்பில் 103 கூட்டம் என்றாலும், அதில் கலந்துகொண்டு, கடைசிவரையில் கலையாது, காது கொடுத்துக் கேட்டுத் திரும்பிய, திருந்தக்கூடிய கூட்டத்தின் ஆதரவு – முத்திரை பதித்த ஒன்று அல்லவா?
இயக்கம் என்றால், அதன் மெய்ப்பொருள் இயங்கிக் கொண்டே இருப்பதுதானே!
வாளுக்குப் பெருமை உறையில் உறங்குவதா? களத்திலே வீசி, அதனால் உடைந்து வீழ்ந்தாலும் பரவாயில்லை, துணிந்து களம் காணுவதில்தானே பெருமை?
கழகக் கடமைகள் கடல்போல, இன்னமும் உள்ளனவே!
தடம் மாறாமல், இடம் தேடாமல்
என்றும் செய்து முடிப்போம்!
வந்த ஆட்சி எந்த ஆட்சியானாலும், அதனைச் சரியான வேலை வாங்கும் சக்தி இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு எப்போதும் உண்டு. அதை நிச்சயம் தடம் மாறாமல், இடம் தேடாமல் என்றும் செய்து முடிப்போம்!
நம் இதயத்திற்கு ஏது ஓய்வு?
கருஞ்சட்டைத் தோழர்களே, குறைந்தபட்சம் ஆயிரம் இளைஞர்களை – அறப்போராட்டக் கள வீரர்களாகப் பட்டியலிட்டுத் தாருங்கள்!
அதன் விளைவு?
பொறுந்திருந்து பாருங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.6.2026
