நெதர்லாந்து நாட்டில் இருந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனை மங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன! ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு அவற்றை அனுப்பி வைப்பது தான் சாலச் சிறந்தது! தமிழ்நாட்டு முதலமைச்சர் அயராத முயற்சிகளை மேற்கொள்வது முக்கிய கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள்
இரண்டு நாட்களுக்கு முன், பிரதமர் மோடி அவர்கள் நெதர்லாந்து நாட்டிற்குச் சென்று அங்குள்ள மன்னர், ராணி, பிரதமர் ஆகியவர்களைச் சந்தித்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவற்றை ஏற்படுத்தி உள்ளபோது, அந்நாட்டு அரசின் சார்பாக, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் முறைப்படி பிரதமர் மோடி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செப்பேடுகள், 18 ஆம் நூற்றாண்டில் டச்சு காலனிய ஆட்சி இங்கே இருந்தபோது, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து நெதர் லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டவை ஆகும்.
1862 இல் இருந்து அச் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
மிகவும் வரவேற்கத்தக்கதாகும்!
இத்தகைய செப்பேடுகளை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வர, தூதரகத்தின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு – பல ஆண்டு காலம் ஆன நிலையில், காலனியப் பொருள்கள் அந்தந்த நாடு களுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற 2022 நெதர்லாந்து நாட்டு அரசின் கொள்கை முடிவின்படி, இப்போது அது இந்தியாவிற்கு தரப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இது ஒரு பண்பாட்டுத் தரவாக, வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் சான்றாவணமாகப் பயன்படும் என்பது உறுதி!
நெதர்லாந்து அரசு வழங்கியுள்ள செப்பேடுகள் நமது நாட்டு மக்களுக்கு – குறிப்பாகத் தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்று – ஆய்வுக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெறக்கூடிய ஒன்று.
அதனை ஒன்றிய அரசு தாமதிக்காமல், தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியமும், நியாயமும் ஆகும்.
நமக்கு மகிழ்ச்சியும்,
வியப்பையும் தருகிறது!
ஏற்கெனவே கீழடி ஆய்வு, தண் பொருநை நதி நாகரிகம் இவற்றைக் காத்து நாளும் ஏராளமான புதுப்புது தடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. முக்கியமான தரவுகள் (கீழடி உள்பட) கிடைத்து வருவது நமக்கு மகிழ்ச்சியும், வியப்பையும் தரு கின்ற ஒன்றாகும்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு அனுப்பி வைப்பது தான் சாலச் சிறந்ததாகும்!
அந்த அடிப்படையில், ஆனைமங்கலம் செப்பேடுகளையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழ் பண்பாடு – நாகரிகம் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்திட வகை செய்து, அரிய சாதனைகள் செய்த மேனாள் நிதியமைச்சரும், தொல்லியல் துறை அமைச்சரும், தமிழார்வலருமான மானமிகு தங்கம் தென்னரசு அவர்களும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு அனுப்பி வைப்பது தான் சாலச் சிறந்ததாகும்.
அயராத முயற்சிகளை மேற்கொள்வது
முக்கிய கடமையாகும்!
புதிதாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் முதலமைச்சர் அவர்களும், இதனை அரசு சார்பில் வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு உரிய முறையில் – தெரிவித்து பெற்றுத் தர அயராத முயற்சிகளை மேற்கொள்வது முக்கிய கடமையாகும்.
இத்துறை அமைச்சர் மற்றும் இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் உட னடியாக நடவடிக்கையை மேற்கொள்வது முக்கிய மாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.5.2026
