புதுடில்லி, ஆக.6 கைத்தறி நெசவாளர் களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின், வாழ்வாதார வாய்ப்புக்களை வளப் படுத்திட, ஃபேஷன் டிசைனிங் தொடர்பான திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு சம்பந்தப்பட்டப் பயிற்சித் திடங்களை அரசு மேற்கொண்டுள்ளதா? அப்படி யானால் கடந்த மூன்றாண்டுகளில் பயனடைந்த கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை எத்தனை? இத்தகைய திட்டங்களுக்காக அரசால் செய்யப் பட்ட செலவுத்தொகை எவ்வளவு? நாடாளுமன்றத்தில் திமுக மக்களவைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி.
அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில்: திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு த்துறைக்கான ஒன்றிய இணை அமைச்சரான திரு. ஜெயந்த் சவுத்ரி இக்கேள்விக்கு கடந்த 3.7.2026 அன்று மக்களவையில் விரிவான பதில் அளித்தார். அதில் தெரிவித்ததாவது:
35 லட்சம் கைத்தறி நெசவாளர்கள்
“இந்தியாவின் முக்கியமான அமைப்புசாராப் பொருளாதார செயல்பாடுகளில் கைத்தறித் துறையும் ஒன்றாகும். ஊரகப் பகுதிகளில் வாழும் 35 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கைத்தறிநெசவுத் தொழிலைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள். இவர்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மகளிர் உள்ளனர். இவர்கள் நெசவு நெய்வது மட்டுமின்றி அதுசார்ந்த அனைத்துத் துணைத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. எனவே, கைத்தறி துறை மகளிரை பொருளாதார ரீதியாக அதிகாரப்படுத்துவதில் முக்கிய மூலாதாரமாக விளங்குகிறது. இதன் பொருட்டு ஃபேஷன் டிசைனிங் உள் ளிட்ட பல்வேறு அம்சங்களில் கைத்தறி நெசவாளர்தம் தொழில் முனைவு மற்றும் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்திலும் மகளிர் பங்கேற்பு தீவிரமாக வலியுறுத் தப்படுகிறது.
ஜவுளித்துறை மற்றும் திறன் வளர்ச்சி அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்கள்
ஒன்றிய அரசின் தொழில்முனைவு மற்றும் திறன் வளர்ச்சி ( மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்கில் டெவலப்மென்ட் அண்ட் என்டர்பிரணர்ஷிப்) அமைச்சகம், ஸ்கில் இந்தியா மிஷன் என்ற திட்டத்தை பரவலாக அமைந்துள்ள திறன் வளர்ச்சி மய்யங்கள் வாயிலாக, தொழிலாளர்களின் திறன் சீரமைப்பு மேம்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. அதுபோல, ஜவுளி அமைச்சகமும் ஸ்மார்த் (SMARTH) என்ற திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வந்துள்ளது. இந்தத் திட்டங்கள் மூலமாக கைவினைக் கலைஞர்கள், கைத்தறித் தொழிலாளர்கள் திறன்மேம்பாட்டு பயி்ற்சி பெற்றுப் பயன் அடைகின்றனர்.
மேலும், ஜவுளி அமைச்சகத்தின் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம், தேவைக்கு ஏற்ப, கைத்தறி நெசவாளர் களுக்கு கடன் உள்ளிட்ட நிதி உதவிகள், கருவிகள், உபகரணங்கள் போன்ற இன்றியமையாத வசதிகளைப் பெற்றிட வழிவகை செய்வதுடன், ஃபேஷன் வடிவமைப்பு அல்லாமல் உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்துதல் தொடர்பான உதவிகளையும் அளித்து துணை நிற்கிறது. இது, ஜவுளித் துறையின் ஃபிளேக் ஷிப் FLAGSHIP PROGRAM என்று சொல்லத்தக்கமுதன்மையான முக்கியத்துவம் கொண்ட திட்டம் ஆகும். அத்துடன், தேசிய ஃபேஷன் தொழில் நுட்ப நிறுவனமும் (National Institute of Fashion Technology) கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகமும் கரம்கோர்த்து பேஷன்வடிவமைப்புக் கல்விபயிலும் மாணவர்கள் துணை யுடன், நெசவாளர்கள் தங்களுடைய பாரம்பரியத்தொழில் திறனுடன் நவீன வடிவமைப்பு தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து, மேம்பாடு அடைந் திடும் வண்ணம் பயிற்சிகள் வழங்கு கிறது.
இப்படியான, பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது, 2024இல் ரூ.1374 கோடி, 2025இல். ரூ.2524 கோடி, 2026இல் ரூ.1246 கோடி என மொத்தம் ரூ5144 கோடிகளை பல்வேறு திட்டங்களில் ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஜூன் திங்களு டன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் செலவிடப்பட்ட தொகை ரூ.374.51 கோடி.
தமிழ்நாட்டில் பயனாளிகள் 4955 மட்டுமே
ஒன்றிய அரசின் இத்திட்டங்களால், கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுக்க பயன் அடைந்த கைத்தறி நெசவாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,644 ஆகும். அதில், 1,00,750 மகளிர் அடங்குவர். ஆனால், தமிழ்நாட்டில் பயன் பெற்றோர் எண்ணிக்கை 8412 என மிகக் குறைவாகும். இதில் மகளிர் பயனாளிகள் எண்ணிக்கை 4995 மட்டுமே என்று பதில் கூறினார்.
அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அவர்கள் மக்களவையில் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாரெனினும் டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய வினாவின் மய்யக் கருத்து “ஃபேஷன் டிசைனிங்”கில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சிக்கு, அதிலும் குறிப்பாக மகளிர் திறன் மேம்பாடு குறித்த அரசின் சிறப்பு முன்னெடுப்புகள், அதன்பொருட்டு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், அவற்றின்மீது செய்யப்பட்ட செலவு, பயன்பெற்ற பெண்நெசவாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் தொடர்பானவை ஆகும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு அரசின் பதிலில் உரிய விவரங்கள் துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
