சென்னை, செப். 22– மற்ற மாநிலங்களில் சமூக சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதைப் போல் தமிழ்நாட்டிலும் ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் சங்கம் சார்பில் மாநிலத் தலைவி சுந்தரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மற்றும் இ-சஞ்சீவனி திட்டங்களில் ‘சமூக சுகாதார அதிகாரி’ என்ற பெயர் பயன்படுத்தப் படுகிறது.
தமிழ்நாட்டில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி ஆணையிலும் ‘சமூக சுகாதார அதிகாரி’ என்ற பெயரை குறிப்பிட வேண்டும். மற்ற மாநிலங் களில் சமூக சுகாதார அதிகாரிகளுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ஊதியமும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாகவும், அதேபோன்று தமிழ் நாட்டில் ஊதியம் வழங்க வேண்டும்.
மகாராட்டிராவில் ரூ.55 ஆயிரம், அரியானாவில் ரூ.70 ஆயிரம், மத்தியப் பிரதேசத்தில் ரூ.45 ஆயிரம், கருநாடகாவில் ரூ.62 ஆயிரம், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.43 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் சமூக சுகாதார அதிகாரி என்ற பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்தி, அதற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
மற்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் ஊதியம் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம். முதல்கட்டமாக வரும் அக்.5ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளோம். கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
