பெர்லின், ஆக.15 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அய்ரோப்பிய வானிலை மய்யம் இங்கிலாந்தின் ரீடிங், இத்தாலியின் போலோக்னா, ஜெர்மனியின் பான் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. உலகின் சக்திவாய்ந்த வானிலை எச்சரிக்கை மைய அமைப்புகளுள் அய்ரோப்பிய வானிலை மய்யம் மிக முக்கியமான ஒன்று ஆகும்.
இந்நிலையில், ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குப் பிறகு இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் என அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ‘‘அடுத்த 15 நாள்களில் “பருவமழையின் தொழிற்சாலை” என்று அழைக்கப் படும் வங்கக்கடலில் தொடர்ந்து பல குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்நோக்கி நகர உள்ளன. இதனால் மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் பரவலான மற்றும் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் கன மழையால் பாதிக்கப்படும். இந்தத் தொடர் மழை மூலமாக நீர்நிலைகள் நிரம்புவதோடு, தற்போதைய காரீப் (மழைக்காலப் பயிர்கள்) சாகுபடிப் பருவத்திற்கு உகந்த சூழ்நிலை உருவாகும். எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மழை குறைபாட்டை, இந்த பருவமழையின் தொழிற் சாலை ஈடுசெய்யும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
